மீனவர் விடுதலை தீர்மானம்: கண் மூடி காதுகளை அடைத்து வாய் மூடி மவுனியாக மத்திய அரசு- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீனவர்கள் விடுதலைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது மத்திய அரசு என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது மத்திய அரசு. எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
— M.K.Stalin (@mkstalin) April 7, 2025
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம்… pic.twitter.com/tAH5Uzeu8u
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக தமிழ்நாடு சட்டசபையில் இன்று மீனவர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, கடந்த 2-4-2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
சட்டசபை தீர்மானம் என்ன?
அப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டுமென்றும், இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தோம்.
நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி
இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதிலே குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீர்மானத்தை பிரதமர் அவர்களுக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.
இந்த நிலையில், பிரதமர் அவர்கள் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
புறக்கணிக்கிறார் மோடி
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். ஒன்றிய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.
வாழ்வாதார பாதுகாப்பு
மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம். கழக அரசு அவர்களுக்குத் எப்போதும் துணை நிற்கும். மீனவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தல், அவர்களது மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.
மீனவர் நலனுக்கான அறிவிப்புகள்
மீனவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன்பிடிப்பிற்குச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களைக் களைவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும்கூட, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும், அந்தப் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதுமான செயல்கள் நம்முடைய தொடர் வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் மீறி நடைபெற்று வருகிறது. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றை தங்கள் வாயிலாக இப்பேரவைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
(1) மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.
(2) 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் பகுதியிலும் மற்றும் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் குந்துக்கல் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன்.
இவற்றைத் தவிர, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களையும் செயல்படுத்திட பின்வரும் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கின்றேன்:
1. கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7000 பயனாளிகளுக்கு 52 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
2. கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள 25 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் உபகரணங்கள் வழங்கி, தொடர்பணிகளும் மேற்கொள்ளப்படும்.
3. மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமார் 2,500 மீனவக் குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
4. சுமார் 15 ஆயிரத்து 300 மீனவர்களுக்கு, மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட 20 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
5. மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமானத் தொழில் படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல்சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய 54 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
6. மீன் வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர, குறிப்பாக, காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய சுமார் 14 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு, 53 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து மேம்படுத்தும் பொருட்டு, இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் 360 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 216 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவிடப்படும். மொத்தம் 576 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதியைச் சார்ந்த மாவட்டங்களின் மீனவர்கள் பெரிதும் பயனடைவார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications