For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை: கூட்டுறவு சங்கத்தில் 1000 சவரன் நகைகளை ஏப்பம் விட்ட நிர்வாகிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோவை அருகே கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அடமானம் வைத்த ஆயிரம் சவரன் நகைகளை மோசடி செய்து ஏப்பம் விட்டு தலைமறைவான செயலரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செட்டிபாளையம் அருகே மலுமிச்சம்பட்டியில் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக செட்டிபாளையத்தை சேர்ந்த முருகேசனும், செயலாளராக ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தண்ணீர்ப் பந்தலை சேர்ந்த கீதா என்பவரும் உள்ளனர். இந்த சங்கத்தில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

Coimbatore: 3 Crore gold loan scam; Co Operative secretary abscond

இந்த சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு நகைக்கடன், பயிர்க்கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. விவசாயிகள் பணம் டெபாசிட் செய்தும் வந்தனர். திருமணம், படிப்பு, விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான நகைகளை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர்.

அந்த கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு நகையை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கீதா திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று கேட்டபோது அவர் இதோ அதோ என்று இழுத்தடித்துள்ளார்.

அடகு வைத்த நகைகளுக்கு, பணம் செலுத்தியபிறகும், நகைகள், திருப்பி தரப்படவில்லை என்றும், வங்கியில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக, மோசடி நடந்திருப்பதாகவும், வங்கி இயக்குனர்களுக்கு புகார் போனது.இது குறித்து, செயலர், கீதாவிடம், இயக்குனர்கள் விசாரித்தபோது, 'இன்னும், பத்து நாளில், நகைகள் திருப்பி தரப்படும்' என்றார்.

இந்த நிலையில் திடீரென்று சங்கத்தை பூட்டிவிட்டு செயலாளர் கீதா தலைமறைவாகி விட்டார். இந்த தகவல் நகையை அடமானம் வைத்திருந்த விவசாயிகள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. இதனால் கொதிப்படைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கம் முன்பு திரண்டனர்.

இதுகுறித்த தகவலறிந்ததும் மாவட்ட கூட்டுறவு பதிவாளர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட துணை பதிவாளர் கவுரவராஜா தலைமையிலான அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு சங்கத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சங்கத்தின் தலைவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் தனக்கு உடல்நலம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தற்போது தன்னால் அங்கு வர இயலாது என்றும் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த விவசாயிகள் திடீரென்று கோவை - பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி பிரிவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தனசேகரன், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தின் நகைப் பெட்டகத்தை திறந்து பார்த்து பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இந்த கூட்டுறவு சங்கத்தில் மோசடி நடந்துள்ளது. சுமார் 1000 பவுன் நகைகள் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சுமார் 3 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்றும் கருதுகிறோம்.

ஒரே நாளில் அத்தனை நகைகளையும் சங்கத்தில் இருந்து எடுத்து சென்று அடமானம் வைத்து விட முடியாது. நாங்கள் அடமானம் வைத்தபோது அந்த நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்காமல் தங்கள் பெயரில் சங்கத்தலைவரும், செயலாளரும் சேர்ந்து தங்களது பெயரில் தனியார் வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

நகைக் கடனுக்காக நாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தியபோது அதை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் அவற்றையும் மோசடி செய்திருப்பார்களோ? என அஞ்சுகிறோம் என்று கூறினர்.

இதையடுத்து கூட்டுறவு துணை பதிவாளர் கவுரவ ராஜா மற்றும் போலீசார் சங்கத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பதிவேட்டில் இருப்பு ரூ.95 ஆயிரம் உள்ளதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் பணப் பெட்டகத்தை திறந்து பார்த்த போது அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி தரும் விதமாக அதில் ரூ.95 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.5 ஆயிரம் மட்டுமே இருந்தது.

இதையடுத்து நகைப் பெட்டகத்தை திறந்து பார்க்க முடிவு செய்தனர்.அடமான நகை வைக்கப்பட்டுள்ள அந்த பெட்டகத்தைத் திறக்க வேண்டுமானால் 2 சாவிகள் தேவை. ஒன்று சங்கத்தின் தலைவர் முருகேசனிடமும், மற்றொன்று சங்கத்தின் செயலாளர் கீதாவிடமும் உள்ளது.

சங்கத்தின் தலைவர் முருகேசனிடம் உள்ள சாவியை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். ஆனால் கீதா தலைமறைவாக உள்ளதால் அவரிடமுள்ள சாவி இருந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும் என்ற நிலை உருவானது. இதையடுத்து நகைப் பெட்டகத்தை உடைக்க அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.

இது குறித்து கூட்டுறவு சங்க உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் நகைப்பெட்டகம் தயாரித்து கொடுத்த நிறுவனத்திடம் மாற்று சாவி பெற்று நகைப்பெட்டகத்தைத் திறக்க அறிவுறுத்தினர். இதையடுத்து மாற்று சாவி பெற ஏற்பாடு செய்யப்பட்டு நகைப் பெட்டகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசிய போலீசார், நகை பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்த்து விசாரணை நடத்தி நகை பறிபோனவர்களுக்கு நகைகளை மீட்டுத் தரவும், பணம் டெபாசிட் கட்டியவர்களுக்கு அவர்களது பணத்தை திருப்பித்தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு மேல் மறியலில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்து ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்கள் டி.ஆர்.ஓ.வை சந்தித்து கூட்டுறவு சங்கத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நகை மற்றும் பணத்தை மீட்டுத்தரக் கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி இதுகுறித்து வணிக குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

English summary
Co-operative bank secretary Geetha has abscond from Malumichampatti. She had looted Rs. 3 crore from the bank under the pretension of issuing jewel loan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X