For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து வழக்குகளை வாபஸ் பெற சிபிஎம் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்து வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில கிளை வெளியிட்ட அறிக்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (23.8.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

CPM demands to withdraw DMK Mla's suspension order

கடந்த ஐந்தாண்டுகளைப் போன்றே தற்போதும் சட்டமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலே அஇஅதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய சபாநாயகர் நடுநிலை தவறி ஆளும் கட்சி தலைவர் போன்றே செயல்பட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 17-8-2016 அன்று எதிர்கட்சி தலைவர் உட்பட 79 திமுக உறுப்பினர்கள் ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மட்டுமின்றி சட்டமன்ற வளாகத்தில் அவர்கள் கூடினார்கள் என அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை மானியம் கோரிக்கை அன்று தலைமைச் செயலக வளாகமே போலீஸ் தர்பாராக மாற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை கூட தலைமைச் செயலக வளாகத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரை கொண்டு தலைமைச் செயலகம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையை முன்மொழிந்து ஓரங்க நாடகம் நடத்துவது போல ஜெயலலிதா பேசியுள்ளார்.

விவாதங்கள் ஏதுமின்றி மானியக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும் தற்போதைய பிஜேபி தலைமையிலான ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பி வாக்குவாதம் நடத்தியதால் பல நாட்கள் நாடாளுமன்றக்கூட்டம் எதையும் விவாதிக்காமலேயே ஒத்தி வைக்கப்பட்டன. ஆனாலும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியினுடைய சாதாரண ஜனநாயக உரிமைகள் கூட அனுமதிக்காமல் சட்டமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அதிமுக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமெனவும் தமிழக சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை பாதுகாத்திட முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மறுபக்கம் சட்டமன்றம் அதிமுக - திமுக கட்சிகளின் போர்க்களமாக மாற்றாமல் மக்கள் பிரச்சனைகளை கூடுதலாக விவாதித்திட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CPI(M) has demanded that to state govt should withdraw the order of DMK Mlas suspension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X