For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழங்குடியினத்தவர் பட்டியலில் மீனவர்கள், தமிழ் ஆட்சி மொழி, கடல் மேலாண்மை

By Mathi
|

28. மீனவர் நலன் (Fishermen Welfare)

கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் மற்றும் கச்சத் தீவு அருகிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்கள் பிடித்த மீன்களை இலங்கை கடற்படையினர் கையகப்படுத்திக் கொள்வதும், வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிறார்கள். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிலையினை அகற்றிட இருநாட்டு அரசுகளும், மீனவச் சமுதாயத்தினரோடு கலந்து பேசி நிரந்தரத் தீர்வு காண்பதோடு, இப்பிரச்சினையை கண்காணிக்க, இருநாட்டுக் கடற்கரைப் பகுதியிலும் சிக்கல் தீர்க்கும் மையம் (Crisis management Centre) உருவாக்கிட வலியுறுத்துவோம்.

இத்தகைய அயல்நாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து இந்திய மற்றும் தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி, தனிப்பொறுப்பு வாய்ந்த அமைச்சரையும் நியமித்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

fishermen

மீனவர்களுக்கான தேசிய சேமிப்புத் திட்டம் முன்பிருந்ததைப் போலவே, மீனவர் - மாநில - மத்திய அரசு மூன்றும் 1:1:1 என்ற சமபங்கு விகிதாசாரம் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

கடற்கரைப் பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் ஏற்படுத்தவும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், புதுவை, காசிமேடு (சென்னை) ஆகிய இடங்களிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களை, தண்ணீர் வசதி, மின்வசதி, எரிபொருள் நிரப்பும் வசதி போன்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவு பெறும் வண்ணம் மேம்படுத்தவும், அனைத்து மீன்பிடித் துறைமுகங்களிலும் நவீன குளிர்பதன வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கிடங்குகள் அமைக்கவும், மீன்பிடித் தொழில் லாபகரமானதாகவும் அத்தொழிலைச் சார்ந்திருக்கும் மீனவர்கள் தங்கள் உழைப்பிற்கு உரிய பலன் பெறுவதற்கும் நவீன மீன்பிடி உத்திகளைக் கையாள்வதற்குரிய பயிற்சியையும், அதற்குத் தேவைப்படும் நவீன கருவிகளை மானிய விலையில் வழங்குவதற்கும், அக்கருவிகளை பயன்படுத்தும் முறைகளைக் கற்றுத் தருவதற்கும் ஓர் அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும் மீனவர்களுக்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் ஏற்றுமதியாகும் மீன் வகைகளின் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்திட உரிய பயிற்சிகளை மீனவர்கள் பெற்றிட, பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசு தொடங்கிட வேண்டுமென்றும் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

இந்தியாவில் உள்ள அனைத்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் "தேசிய மீனவர் நல ஆணையம்" ஒன்றை (National Commision for fishermen welfare) உருவாக்கவும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தி.மு.க. பாடுபடும்.

29. பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள். (Fishermen in the list of S.Ts)

மீன்பிடித் தொழில் நாகரிகம் வளர்ந்த காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வரும் மிகப் பழமையான தொழிலாகும். மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்துள்ளனர். எனவே, இந்தியா முழுவதும் இருக்கும் மீனவர் சமுதாயத்தை "பழங்குடியினர்" பட்டியலில் இணைப்பதற்கும் - பழங்குடியினருக்குள்ள அனைத்து சலுகைகளையும் மீனவர்கள் பெறுவதற்கும் தி.மு.கழகம் பாடுபடும்.

30. மீனவர்களை பாதுகாத்திட தனித்துறை உருவாக்கல் (Seperate Minister for Fshermen Developement)

இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், அச்சுறுத்தல் - துப்பாக்கிச் சூடு - படகுகள் பறிமுதல் செய்தல் - நடுக்கடலில் வலைகளை அறுத்தெறிதல் - பிடித்த மீன்களை கொள்ளை அடித்தல் போன்ற கொடுமைகளை தொடர்ந்து பன்னெடுங் காலமாக அனுபவித்து வருகின்றனர்.
இத்தகைய அயல்நாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து இந்திய, தமிழக மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் வகையில் மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

31. கடற்கரைவாழ் மக்கள் இயற்கைச் சீற்றப் பாதுகாப்புச் சட்டம் (Coastal community Natural calamity safety act)

சுனாமிக்குப் பின் கடற்கரை கிராமங்களில் வாழும் மக்கள் திரும்பவும் ஆழிப்பேரலை அழிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மீன்வளம் - கடற்கரைப் பாதுகாப்பு ஏற்படுத்த, கடலியல் சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, ‘கடற்கரைவாழ் மக்கள்; இயற்கைச் சீற்றப் பாதுகாப்புச் சட்டம்' நிறைவேற்றிட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் காப்பாற்றிட இந்தியக் கப்பல் படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையுடன் மீனவர்களுக்குத் தங்கு தடையற்ற தொலைத் தொடர்பு வசதிகள் (Seamless Communication network system) ஏற்படுத்திக் கொடுத்து ஆங்காங்கே ஹெலிகாப்டர் தளம் அமைத்து, அதன் மூலம் மீனவர்களின் உயிரிழப்புகளை தவிர்த்திட வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அதுபோலவே, நடுக்கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்கி, மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில், இறப்புச் சான்றிதழ் வழங்கிட வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

32. கடல் வேளாண்மை (Sea Farmin)

உலகின் பல நாடுகளில் கடற்கரையோரங்களில் நிர்ணயிக்கப்பட்ட கடற் பரப்பில் அதன் தன்மைக்கேற்ப உயிரியல் தொழில் நுட்பத்தோடு கடல்வாழ் உயிரினங்களை வளர்க்கும் கடல் வேளாண்மை முறை பின்பற்றப் படுகிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பயிற்சி பெற்ற மீனவர்கள் இவ்வகை கடல் வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியக் கடல் பகுதிகளில் இதுபோன்ற கடல் வேளாண்மை முறையை பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உருவாக்கிட வேண்டுமென்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

33. மொழிக் கொள்கை (Language Policy)

தமிழ் ஆட்சிமொழி (Tamil as an official language)

நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், ஈட்டிமுனையாகச் செயல்படுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் அதற்காக எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி கொண்டுள்ளது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிறமொழி பேசும் மக்கள்மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிமொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் (Official Indian languages for all the states) மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கான எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் உரையில் அறிவித்ததற்கேற்ப, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் (Official Indian languages for all the states) மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்குரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில், உரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர தி.மு.கழகம் தொடர்
ந்து வலியுறுத்தும்.

அதனடிப்படையில், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டுமென்று 1996ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

அதுவரை மத்திய அரசுப் பணிகளுக்கும் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும் அந்தந்த மாநில ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகளையும் இணைத்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தும்.

34. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழி.

செம்மொழியான நமது தாய்மொழித் தமிழ், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக (Co-Official language) பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் - நிறுவனங்கள் - தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட வேண்டுமென்றும்;

இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 343வது பிரிவில் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

35. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்

இந்திய உச்ச நீதி மன்றத்தின் அதிகாரங்களைப் பரவலாக்கிடும் நோக்கத்துடன், புது டெல்லியில் ஒரு உச்ச நீதி மன்றம், மண்டல அளவிலான மேல்முறையீட்டு நீதி மன்றங்கள் (four regional courts of appeal) நாட்டின் நான்கு பகுதிகளிலும் உருவாக்கப்பட வேண்டுமென்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க பாடுபடுவோம்.

இந்திய ஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு -7ன்படி "இந்தி அல்லது மாநிலங்களின் ஆட்சி மொழிகள், மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் பயன்படுத்தப்படலாம்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டிற்கு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநர் அவர்களின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அவர் அதனையேற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ஆட்சி மொழிச் சட்டம் கூறுகிறது.

அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் 6-12-2006 அன்று தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை ஆளுநர் பரிந்துரையுடன் மத்திய அரசுக்கு 11-2-2007 அன்று அனுப்பி வைத்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எனவே, தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக ஏற்க வேண்டுமென்று தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்.

36. நதிகள் தேசிய மயமும், இணைப்பும் (Nationalisation and linking of Indian rivers)

2002ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் தேசிய மயம் - நதிநீர் இணைப்பு தொடர்பான பொதுநல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, காலாகாலமாக கிடப்பிலே போடப்பட்டுள்ள - இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கி இந்தியாவின் வடபாகத்தில் உள்ள கங்கை நதியை தென் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய நதிகளுடன் இணைத்திட வேண்டுமென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் வீணாகும் அச்சன்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட்டோடு இணைத்திட வேண்டுமெனவும், இந்த நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பதற்கும் நிறைவேற்ற வழிவகைகள் காண்பதற்கும், நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்குரிய திட்டச் செலவையும் ஒதுக்கீடு செய்து, இந்தியாவில் கிடைத்திடும் முழு அளவு நீரின் பயன்பாட்டை உயர்த்தி, உரிய நீர் மேலாண்மை மூலம் இந்திய வேளாண்மையின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரித்து வேளாண் பெருங்குடி மக்களைக் காப்பாற்றவும், அனைத்துப் பகுதிகளிலும் குடி நீர்த் தேவையை முழுமையாக நிறைவு செய்திடவும் மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள
தி.மு.கழகம் பாடுபடும்.

37. மின்சாரம் (Electricity)

அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த மாநிலங்களின் பயன்பாட்டிற்கே வழங்கப்படுவதற்கும், மிகை மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவதற்கும், ஒரு மாநிலத்தில் உள்ள மிகை மின்சாரத்தை மின் தட்டுப்பாடு உள்ள மற்றொரு மாநிலத்திற்கு எளிதில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங் களையும் இணைத்திடும் வகையில் மின்வழித் தடங்கள் உருவாக்கப்படு வதற்கும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

English summary
The Dravida Munnettra Kazhagam (DMK) will continue to urge the Centre to bring suitable amendments to the official Languages Act to make official languages of all States as official languages at the Centre, the manifesto released on Tuesday by party leader M. Karunanidhi stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X