For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் வேலைக்கு லஞ்சம்: நத்தம் விஸ்வநாதனின் மாஜி பிஏ மீதான புகார்- தீர்ப்பு ஒத்திவைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: டாஸ்மாக் பணி நியமனத்தில் தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் முன்னாள் தனி உதவியாளர் செந்தில் உட்பட சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரான இவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் தனபால், இவரது உதவியாளர் ரவி, சூபர்வைசர்கள் சரவணக்குமார், கனகராஜ் உள்ளிட்ட பலர் மூலம் தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தனி உதவியாளர், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாமூல் வசூலிக்கிறார். டாஸ்மாக் கடைகளில் காலி பணியிடத்திற்கு, பல லட்சங்களை லஞ்சமாக வாங்கி குறுக்கு வழியில் பரிந்துரை கடிதம் மூலம் பணி நியமனம் செய்கின்றனர். மேலும் இடமாறுதல், சஸ்பெண்ட் நீக்கம் என பல வழிகளிலும் லஞ்சம் வாங்குகின்றனர். முறைகேடான வழிகளில் துறை தலைவரின் பரிந்துரை கடிதங்களை தயார் செய்கின்றனர். இந்த மோசடி மூலம் அமைச்சரின் உதவியாளர் செந்தில், முதுநிலை மண்டல மேலாளர்கள் முறைகேடாக பல கோடிகளை சம்பாதித்துள்ளனர்.

Fake recommendation letters: HC reserves verdict

இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொண்டு அமைச்சரின் உதவியாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடம் மனு கொடுத்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் விசாரிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான செந்தில் திடீரென அடுத்த சில நாட்களிலேயே அமைச்சரின் உதவியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிர்வாகத்தை ஆட்டி படைத்தவர் இவர். அமைச்சரைப் பார்த்து நடக்காத காரியத்தையும் செந்திலை பார்த்து பேசினால் முடியும். அமைச்சரிடம் பக்குவமாக பேசி, பக்காவாக காரியத்தை முடித்து கொடுப்பவராக அவர் செயல்பட்டு வந்தார். இதனால், அமைச்சர் அலுவலகத்தில் அதிக செல்வாக்கு பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார். நிர்வாக வசதிக்காக 35 மாவட்டங்களாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

மதுபான கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.40 வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை அனைவரும் அறிவர். இப்படி வசூலிக்கப்படும் தொகையில் ஒவ்வொரு கடையிலிருந்தும் மாதா மாதம் செந்திலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வந்து சேர்ந்து விடும் என்று கூறப்படுகிறது. இதற்காக செந்திலின் ஆசிபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்டத்துக்கு 3 பேர் முதல் 5 பேர்வரை செயல்பட்டு வந்துள்ளனர்.

போலி மதுபானம் விற்பவர்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள், மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்பவர்கள், அண்டை மாநில மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பவர்கள் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வரும். அந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று பறக்கும் படையினர் ஆய்வு செய்து ஊழியர்களை கையும் களவுமாக பிடிப்பார்கள். அதன்பின் ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் மற்றும் பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அமைச்சரின் உதவியாளர் செந்திலை சந்தித்து கொடுப்பதை கொடுத்தால் மீண்டும் பணியில் சேர்ந்துவிடலாம்.

கடந்த இரண்டு ஆண்டில் முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆனவர்களில் சுமார் 1,500 பேர் அவ்வாறு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் மாமூல், காலி பணியிடத்திற்கு ஆட்களை நியமிப்பது, இடமாறுதல், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் பணி நியமனம் செய்வது என பல வேலைகளையும் அவர் மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் மூலம் செய்து முடித்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இப்போது மதுரை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளர் பதவியில் இருந்து செந்தில் திடீரென்று மாற்றப்பட்டார். அவர் ஏற்கனவே அரசு ஊழியராக இருப்பதால், அவரது துறைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செந்தில் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், இதில் அமைச்சரின் நடவடிக்கைகளும் கேள்விக்குறியதாகிவிடும். இதனால் அவருக்கும் இந்த விவகாரத்தில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அவர் மீது ஏன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சஒழிப்புத் துறை ஏஎஸ்பி மீனா தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், `மனுதாரரின் குற்றசாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. பொதுவாகவே குறிப்பிட்டுள்ளதால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருந்தாலும் புகார் மனு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் துறைரீதியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் உதவியாளராக இருந்த செந்தில் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மனு மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை இன்று ஒத்தி வைத்துள்ளார்.

English summary
The Madras High Court Bench here on Tuesday reserved its judgment on a petition seeking a police inquiry into many appointments and transfers made in State-run liquor shops by producing “fake” recommendation letters issued in the name of Natham R. Viswanathan, Minister for Electricity, Prohibition and Excise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X