குடியரசுத் தலைவர் தேர்தல்.. பாஜக சதிவலையில் சிக்காமல் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும்: திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் காலம் தாழ்த்தாமல் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை பாஜகவோ எதிர்க்கட்சிகளோ இன்னும் முடிவு செய்யவில்லை.

general candidate elected for presidential election - Thirumavalavan

இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறுத்துவதற்கும் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கும் பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாஜக விரிக்கும் இந்தச் சதிவலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிக்கிக்கொள்ளக் கூடாது.

வளர்ச்சி என்ற வாக்குறுதியை முன்வைத்து பாஜக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாடு எல்லாத் தளங்களிலும் சரிவை சந்தித்துவருகிறது. பிரதமர் மோடியின் செல்லாநோட்டு அறிவிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது என மோடி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது.

மோடி அரசின் விவசாய விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி ஆண்டுக்கு வெறும் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறார். இது இளைஞர்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

மாடு வளர்ப்பதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஏழை-எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி நாடு முழுவதும் மக்களிடையே பாஜக அரசுக்கு எதிரான மனநிலை உருவாகி வருகிறது. இந்தச் சூழலில் மோடி அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வது அவசியமாகும். அதற்கான வாய்ப்பை குடியரசு தலைவர் தேர்தல் வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதைவிடவும் பாஜகவை எதிர்த்து அனைத்து கட்சிகளையும் அணிதிரட்டுவது என்பதே முதன்மையானது. அதற்கு எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே சரியாக இருக்கும்.

அதைவிடுத்து பாஜக வேட்பாளரை ஏற்றுக்கொண்டால் அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவே பொருள்படும். எனவே, பாஜகவின் சதிவலையில் காங்கிரசோ, இடதுசாரிகளோ, பிற எதிர்கட்சிகளோ சிக்கிக்கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

பொது வேட்பாளர், கருத்து ஒற்றுமை என்பதெல்லம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைப்பதற்கு பாஜக கையாளும் தந்திரங்கள்தான். இதை எதிர்க்கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இனியும் காலம் தாழ்த்தாமல் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும். இவ்வாறு திருமாளவன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK leader has said general candidate elected for presidential election
Please Wait while comments are loading...