சொத்தை அபகரித்த ‘காதல்’ கணவரை சேர்த்து வையுங்கள்... போலீசில் பெண் புகார்
சென்னை: சொத்தை அபகரித்துச் சென்ற தனது இரண்டாவது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி போலீசில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த சுமலதா (32) என்பவர் ஆதம்பாக்கத்தில் கண்ணாடிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சுமலதா தனது இரண்டாவது கணவர் மீது புகார் ஒன்றை அளித்தார். அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தேன். வருமானத்திற்காக ஆதம்பாக்கத்தில் கண்ணாடி கடை நடத்தி வருகிறேன். என் கடைக்கு வந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
எனது குடும்ப வாழ்க்கை குறித்து அவரிடம் விளக்கி கூறினேன். அவர் எனக்கு ஆறுதல் கூறினார். அவரது பேச்சில் மயங்கினேன். இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்ரீகாந்திடம் கூறினேன். அவர் காலம் கடத்தி வந்தார். பலமுறை வற்புறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லை. அவர் என்னுடன் சந்தோசமாக இருந்ததற்கு நிறைய பணம் கொடுத்துள்ளேன். என்னுடைய அம்மாவிற்கு சொந்தமான நிலத்தை ஸ்ரீகாந்த் பெயரில் எழுதி கொடுத்துள்ளேன்.
ஆனால் அவர் இப்போது என்னை பார்ப்பதே கிடையாது. வேறு திருமணம் செய்ய முயற்சி செய்வதாக அறிந்தேன். இதுபற்றி மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் விசாரிக்கவில்லை. என் காதல் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்' என இவ்வாறு அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.