For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”குரூப்-2 மதிப்பெண் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்”- ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: 2012 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 எழுத்து தேர்வு மதிப்பெண் விவரங்களை 4 வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ஏ.கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி "குரூப்-2" எழுத்து தேர்வினை நடத்தியது. இதில் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினேன்.

இந்த தேர்வு முடிந்த பின்னர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் வெளியிட்டது. அந்த விடைகளின் அடிப்படையில் நான் அளித்த விடைகளை சரிபார்த்தபோது, மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 210 மதிப்பெண்கள் எனக்கு கிடைத்து இருக்கவேண்டும்.

இதையடுத்து நேர்முக தேர்வு தயாராகி வந்தேன். இந்த நிலையில் என்னை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் வந்தது. ஆனால் எனக்கு வரவில்லை.

இதையடுத்து, குரூப் 2 தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால், அவற்றை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே எழுத்து தேர்வின் நான் எடுத்த மதிப்பெண் மற்றும் பிறர் எடுத்த மதிப்பெண் விவரங்களை வெளியிடும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வக்கீல் என்.எஸ்.நந்தகுமார் ஆஜராகி, டி.என்.பி.எஸ்.சி. சார்பு செயலாளரின் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில், "எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்த பின்னரே, தேர்வின் இறுதி முடிவு வெளியிட முடியும். அதேநேரம் மனுதாரர் கோபிகிருஷ்ணன் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் தாக்கல் செய்யலாம். அதேநேரம் இந்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைத்திருக்கவேண்டும்.

மேலும், மனுதாரர் கோபிகிருஷ்ணன் எஸ்.சி. சமுதாயத்தை சேர்ந்தவர். இவரைவிட குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எஸ்.சி. பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளியாவார். இதனால், மனுதாரர் கோபிகிருஷ்ணன் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படவில்லை" என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, "இந்த வழக்கில், எழுத்து தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடாமல், அவர்களின் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நியாயப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு அமைப்பு நேர்மையாக செயல்படுகிறது என்றால் அவற்றின் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கப்படவேண்டும்.

எனவே, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண், "கட்-ஆப்" மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இறுதியாக தேர்வு முடிந்த பின்னர் வெளியிடப்படும் என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் நிலையை ஏற்க முடியாது.

எழுத்து தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு, தங்களை ஏன் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கவில்லை என்ற காரணம் தெரியவேண்டும்.

அதேநேரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவரின் மதிப்பெண் விவரங்களை வெளியிடும்போது, ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்களை ஏன் வெளியிட டி.என்.பி.எஸ். நிர்வாகம் மறுக்கிறது என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

"சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்" என்ற வாக்கியத்துக்கு உதாரணமாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செயல்படவேண்டும்.

எழுத்து தேர்வு மதிப்பெண் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியும் விதமாக வெளியிட்ட பின்னரே, அடுத்த நிலைக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செல்லவேண்டும்.

எனவே, 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நடந்த குரூப் 2 தேர்வில் கலந்து கொண்ட அனைவரது மதிப்பெண் விவரங்களை 4 வாரத்துக்குள் தன்னுடைய இணைய தளத்தில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் வெளியிடவேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 டிசம்பர் அன்று நடைபெற்ற குரூப்-2 தேர்வின் முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.ஆனால், மார்ச் மாதமே பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madras High court has ordered the TNPSC that "The group 2 exam mark details should be released in online. It is very must".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X