For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் பண பலத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்: தேர்தல் ஆணையத்திற்கு 10 ஐடியா கொடுத்த ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நேரத்தில் பண பலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்கள் மிகவும் அமைதியாகவும், பெரிய அளவில் வன்முறைகள் இன்றியும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

How to control money power during election?: Dr. Ramadoss gives ideas to EC

அதே நேரத்தில் இந்த மக்களவைத் தேர்தல்களின் போது தமிழகத்தில் பணப் பயங்கரவாதமும், பொருளாதார வன்முறையும் மிகப் பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை தேர்தல் ஆணையத்தின் தமிழகப் பிரதிநிதியான தாங்களே பல்வேறு தருணங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

தமிழகத்தில் இத்தகைய இழிநிலை ஏற்பட்டதற்குக் காரணம் தேர்தல் ஆணையத்தில் செயல்பாடற்ற தன்மை தான் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தேர்தல்களுக்கான உத்திகளை வகுக்கும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் கள நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஆந்திரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருப்பதாலும், உத்தரபிரதேசத்தில் குண்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாலும் அவற்றைக் கருத்தில் கொண்டு அங்கு மாநில காவல்துறையினருடன் துணை இராணுவப்படையினர் அதிக அளவில் குவிக்கப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல்களை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயலுவார்கள் என்பதால் அங்கு பல்வேறு வகையான துணை இராணுவப்படையினருடன், இந்திய இராணுவமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது போன்றவை அதிக அளவில் தரப்படுவது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெளிவாக தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் வாக்காளர்களுக்கு பணம் தருவதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான உத்திகளை வகுக்கும்போது, பணபலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதற்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முதல் நாள் வரை நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ.25.06 கோடி ரொக்கப் பணம், ரூ.27.68 கோடி மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருப்பதை நான் அறிவேன். ஆனால், அவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களில் ஒரு ரூபாய் கூட அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானதல்ல என்பதும், இவை அனைத்தும் வணிகர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு சொந்தமானவை என்பதும் தான் உண்மை. தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களில் பெரும்பாலானவற்றை அவற்றுக்கு உரியவர்கள் தேவையான சான்றுகளைக் காட்டி பெற்றுச் சென்றுவிட்டனர்.

அதே நேரத்தில், தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்ந்திருக்கிறது. அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளுங்கட்சி கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு ரூ. 300 முதல் ரூ.500 வரை வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.40 கோடி முதல் ரூ.65 கோடி வரை வினியோகிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் ரூ.1560 கோடி முதல் ரூ.2535 கோடி வரை வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

எதிர்கட்சிகள் கொடுத்த பணம் மற்றும் பரிசுப் பொருட்களையும் கணக்கில் சேர்த்தால் மொத்த மதிப்பு ரூ.3000 கோடியை எட்டும். இந்த பணம் முழுவதும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து தான் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாக்குப்பதிவு நாளன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நீங்கள், ‘‘வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புப் படைகள் மற்றும் மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுப்பது பெரும் சவாலாக இருந்தது'' என்று கூறியிருந்தீர்கள்.

உண்மையில் பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு பல உதாரணங்களை என்னால் கூற முடியும். தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் சில எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் பணம் கொடுக்க முயன்றபோது அவர்களை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் இணைந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆளுங்கட்சியினரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரால் முடியும். ஆனால், அவர்களில் ஒருவர் கூட (பொது மக்களால் பிடித்து தரப்பட்ட சிலரைத் தவிர) கைது செய்யப்படவில்லை. காரணம் ஆளுங்கட்சியினரின் தவறுகளை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டும் காணாமலும் இருந்தது தான். தங்களுக்கு முன்பு தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய திரு. நரேஷ் குப்தா அவர்களால் சில இயலாமைகள் காரணமாக தேர்தலில் பண வினியோகத்தை தடுக்க முடியாமல் போனதே தவிர, பணப் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால், புதிய தொழில்நுட்பங்களும், வசதிகளும் பெருகிவிட்ட நிலையில் பணப்புழக்கத்தை எளிதாக தடுக்க முடியும் என்ற போதிலும், அப்படிப்பட்ட எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதையே தங்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வந்த போது பொதுக்கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்ட போதும், கூட்டத்திற்கு கூட்டிவரப்பட்டவர்களுக்கு பணம், பிரியாணி மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்ட போதும், பின்னர் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வாரி இறைக்கப்பட்ட போதும் அதை தடுக்கக் கோரி உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடமும், தங்களிடமும் பல முறை புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த புகார்களின் மீது தாங்களோ அல்லது தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் வாங்குவதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123 ஆவது பிரிவின்படி குற்றம்; இதற்காக இந்திய தண்டனை சட்டத்தின் 171 ஆவது பிரிவின்படி ஓராண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம் என்றும் பல தளங்களில் விளம்பரம் செய்கிறீர்கள்; ஆனால், இந்தக் குற்றத்தை செய்யும் ஆளுங்கட்சினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறீர்கள். இது எந்த வகையில் நியாயமான, நேர்மையான தேர்தலாக இருக்கும் என்பதை தங்களது மனசாட்சியின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு வழக்கில் கூட எவரும் தண்டிக்கப்படவில்லை.அப்படியானால் தேர்தல் குற்றம் தொடர்பான வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும். இதற்கு தேர்தல் ஆணையத்தின் அலட்சியமும் ஒரு வகையில் காரணம். இந்த தேர்தலிலும் கிட்டத்தட்ட 3000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளைக் களைந்து, இப்போது பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகளிலாவது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் இரு உரிமைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் முதலாவது அரசியல் சட்டத்தில் 21 ஆவது பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமையின் அடிப்படையில் தான் கல்வி, வீட்டுவசதி, பேச்சு, எழுத்து, கருத்து கூறுவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது உரிமை சிவில் உரிமைகள் ஆகும். இதில் தான் வாக்குரிமை உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றில் முதலாவது வாழ்வதற்கு வகை செய்கிறது என்றால் இரண்டாவது நம்மை ஆட்சி செய்வது யார்? என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை நமக்கு வழங்குகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற தகுதியை வழங்குவது வாக்குரிமை தான்.

இத்தகைய விலை மதிப்பற்ற உரிமையை ரூ.500க்கும், ரூ.1000க்கும் ஆளுங்கட்சியும், பொருளாதார பலமுள்ள கட்சிகளும் கொள்ளையடித்துச் செல்வதை தடுக்க முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தால் என்ன பயன்? இதை மிகப்பெரிய அவமானமாக தேர்தல் ஆணையம் கருத வேண்டாமா? இனி வரும் தேர்தல்களில் ஒரு வாக்கு விற்பனை செய்யப்பட்டால் கூட அதை மன்னிக்க முடியாத குற்றமாக கருதி கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

இந்தக் கடிதத்தைக் கூட நான் புகார் மனுவாக கருதி அனுப்பவில்லை. இனிவரும் தேர்தல்களிலாவது பணப் பயங்கரவாதமும், பொருளாதார வன்முறைகளும் தடுக்கப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை தாங்களும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தனிப்பட்ட முறையிலான கடிதமாகத் தான் இதை நான் அனுப்பியுள்ளேன்.

2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதன்பின் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் பணப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை செய்யவும், அரசாணைகளை பிறப்பிக்கவும் தேர்தல் ஆணையத்தின் மூலமாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1) தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். அது மட்டுமின்றி, மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வு விளம்பர படங்களில் தோன்றி, ‘‘எங்கள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் வேறு ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்'' என அறிவுரை வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வுப் படங்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்பட வேண்டும்.

2) மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்ட வேண்டும். இந்த தேர்தலில் பணப் பயங்கரவாதம் எந்தளவுக்கு தலைவிரித்தாடியது என்பதை விளக்கி, இனி எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களுக்கு முன்பாகவும் இதேபோன்ற கூட்டத்தைக் கூட்டி , ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்' என்ற வாக்குறுதியை பெற வேண்டும்.

3) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பில் பணம் தரப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அந்தக் கட்சியின் வேட்பாளர் தான் பொறுப்பு என்று அறிவித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

4) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

5) ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்கு பதிவாகியிருந்தால், அந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை அத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.

6) இதனால், ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் தொடர்பான வழக்குகள் வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் கால சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் ஆராயலாம்.

7) ஒரு தேர்தலில் ஏதேனும் ஓர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர் விசாரணையின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும்.

8) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை கையும் களவுமாக பிடித்துக் கொடுப்பதுடன், குற்றச்சாற்றுகளை விசாரிக்க துணை நிற்பவர்களுக்கு ஒரு லட்சரூபாய் பரிசாக வழங்க வேண்டும்.

9) அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களையும், பேரூந்துகளையும் அனுப்பும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

10) தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் காவல்துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையத்தால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், ஆட்சியாளர்களைத் தான் தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும், எந்த ஒரு அதிகாரியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி தேர்தல் காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்; அவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தம்மை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவரை மீண்டும் பணியில் சேர்க்கக் கூடாது.

சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக நான் முன்வைத்துள்ள மேற்கண்ட யோசனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss has given ten suggestions to election commission to control money power during election time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X