அதிமுக நிலையான ஆட்சி அமைக்காது எனில் திமுகவை ஆளுநர் அழைக்க வேண்டும்: கி.வீரமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக நிலையான ஆட்சி அமைக்காது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கருதினால் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் - பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா - நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதமும் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி குமாரசாமியால் ஜெயலலிதா உட்பட நால்வர் மீதான தண்டனை ரத்து செய்து 2015- ஆண்டு மே 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் க.அன்பழகன், சுப்பிரமணிய சாமி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

குன்ஹா தீர்ப்பு

குன்ஹா தீர்ப்பு

அந்த மேல் முறையீட்டின் பேரால் நடைபெற்ற வழக்கில் விவாதங்கள் முடியப்பெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதியரசர் பினாஜி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் - பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா 2014இல் வழங்கிய தீர்ப்பினை அப்படியே உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெ. ஆன்மா

ஜெ. ஆன்மா

மறைந்த ஜெயலலிதாவும் தண்டனைக்குரியவர்தான் என்பதை மறந்திடவோ, மறைத்திடவோ முடியாது - கூடாது! ஜெயலலிதாவின் நல்லாட்சி என்று இனியும் கூறிக் கொண்டிருப்பது அசல் கேலிக்குரியது. ஜெ-யின் ஆன்மா என்றெல்லாம் இனி பேசுவது பொருள் உள்ளதா? நாடக வசனமல்லவா?

கசப்பான உண்மை

கசப்பான உண்மை

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் ஆட்சி அமைப்பு நிர்வாகச் சூழல் குழப்பத்தின் உச்சகட்டத்தில் நெளிந்தது. இன்று ஒவ்வொரு நாளும் வெளிவந்த தகவல்களும், நாட்டு நடப்புகளும், மெச்சத்தகுந்ததாக இல்லை என்பது தான் கசப்பான உண்மையாகும்.

முக்கிய திருப்பம்

முக்கிய திருப்பம்

இந்த வழக்கினைத் தொடுத்து, அதில் இறுதியாக வெற்றி பெற்றவகையில் இந்த வெற்றிக்கான உரிமையைக் கோர திமுகவிற்கு கண்டிப்பாக உரிமையுண்டு. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தவர் என்ற முறையில் - இந்தத் தீர்ப்பு திமுகவுக்கும், அதன் மூலம் நாட்டுக்கும் முக்கியமான திருப்பமே!

சடுகுடு விளையாட்டு

சடுகுடு விளையாட்டு

கடந்த சில நாட்களாக நிலவி வரும் இருளான சூழல் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் விட்டது. மத்திய அரசோ, அதன் பிரதிநிதியான ஆளுநரோ அரசியல் சடுகுடு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.

சசியை அழைக்காதது சரி

சசியை அழைக்காதது சரி

ஓ. பன்னீர்செல்வம் காபந்து முதல்வராகத் தொடர்கிறார். வி.கே. சசிகலா அதிமுக சட்டசபை உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு அந்தத் தகவல் ஆளுநரிடமும் முறையாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது. அந்த சூழ்நிலையில், ஆளுநர் வி.கே.சசிகலாவை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி நாட்டில் பெரிதாகப் பேசப்பட்டது! அது ஒரு அரசியல் சட்டப்படியான சரியான நிலைப்பாடே!

இரு முதல்வர்கள் போட்டி

இரு முதல்வர்கள் போட்டி

இப்பொழுது அந்தக் கேள்விக்கும் இடமில்லை. அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் ஒரு புதிய முதல்வரைத் தேர்வு செய்து, புதிதாக ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கட்டத்தின் சட்டத்தின் நிலை. எடப்படி பழனிச்சாமி முதல்வர் என்று தேர்வு பெற்றுள்ளார் என்ற தகவல் இப்பொழுது வெளிவந்துள்ளது. இப்பொழுது அதிமுகவில் இரு முதல்வர்கள் என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டது.

குதிரை பேரம்...

குதிரை பேரம்...

ஒற்றுமையாக இருந்து அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் செயல்படுவார்களா? அல்லது ஏற்கெனவே அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக அத்தகைய முடிவினை எடுக்க முடியாத நிலை - சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்குறி முக்கியமானதே. இந்த சந்தர்ப்பத்தை மத்திய பாஜக அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேறு வகையான திருவிளையாடல்களில் ஈடுபடப் போகிறதா என்பதை உன்னிப்பாக திராவிட இயக்க அரசுகள் கட்சிகள் கவனித்துத் தக்கதோர் முடிவினை எடுக்க வேண்டும். குதிரைப் பேரங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

நேற்று சென்னையில் கூடிய திமுக உயர் மட்டக் குழுவில்கூட, மத்திய பாஜக அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநர் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளது மிகச் சரியான கருத்தாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சட்டப்படியான அடுத்த கட்ட நடவடிக்கை உடனடியாகத் தொடரப்பட வேண்டும். இதுதான் நாடு எதிர்பார்ப்பதும் ஆகும்.

356-க்கு இடம்தர கூடாது

356-க்கு இடம்தர கூடாது

வெறும் கட்சிப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அதனையும் கடந்து நாட்டு மக்கள் பிரச்சினை என்பதே முக்கியமானது. இந்தப் பிரச்சினைகளின் அசைவுகளை திமுக நுட்பமாகக் கவனித்து உரிய காலத்தில், திராவிட இயக்கப் பார்வையில் உரிய முடிவை எடுக்கும் - எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் 356 பாய இடம் அளிக்கக் கூடாது.

ஸ்டாலினுக்கு அழைப்பு

ஸ்டாலினுக்கு அழைப்பு

இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், மறுபடியும் ஒரு தேர்தல் என்பது தேவையில்லாதது - சிரமமானது - சுமையானது - பொருள் நட்டமானது என்பதே நமது கருத்து. ஜனநாயக முறைப்படி, இந்த இரு பிரிவினர் எண்ணிக்கை மட்டுமல்ல, நிலையான ஆட்சி அமையாது என்ற தெளிவு ஆளுநருக்கு வருமேயானால், எதிர்க்கட்சி சட்டப்பேரவை தலைவரான மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே அரசியல் சட்ட நடைமுறைப்படி சரியான நிலைப்பாடாக இருக்கும் - இருக்கவும் வேண்டும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் தன்மையில் சட்டப்பேரவையை முடக்குவது போன்ற சித்து வேலையில் மத்திய அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது.

இவ்வாறு கி. வீரமணி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dravidar Kazhagam leader K Veeramani suggested that If ADMK fail to prove the majority, TamilNadu Governor should invite the DMK to form the next govt.
Please Wait while comments are loading...