ஆறுமுகசாமி கமிஷன் அலுவலகத்தில் திடீர் மின்தடை... பூங்குன்றனிடம் விசாரணை நிறுத்திவைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி அலுவலகத்தில் திடீரென ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்குள் நுழையும் காற்று கூட பூங்குன்றனின் அனுமதியுடன் தான் உள்ளே செல்ல முடியும். அந்த அளவிற்கு போயஸ் கார்டனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ஜெயலலிதாவின் உதவியாளராக 17 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பூங்குன்றன்.

ஜெயலலிதாவை சந்திக்கும் வருபவர்கள், அவருக்கு வரும் கடிதம் என எதுவாக இருந்தாலும் பூங்குன்றன் பார்த்து அதனை சசிகலா பார்வைக்கு அனுப்பிய பின் இறுதியில் தான் ஜெயலலிதாவையே அவை சென்று சேரும். வேதா நிலையத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு முழு நேரமும் கட்சிப் பணிகளை செய்து வந்தார் பூங்குன்றன்.

பூங்குன்றனிடம் விசாரணை

பூங்குன்றனிடம் விசாரணை

இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி அவருடைய உடல்நிலை எப்படி இருந்தது? அவருக்கு ஏன் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவி செய்யப்படவில்லை என்பது குறித்தெல்லாம் பூங்குன்றனிடம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற விசாரணையின் போது பூங்குன்றன் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளதாக தெரிகிறது.

அனைத்தும் அறிந்த பூங்குன்றன்

அனைத்தும் அறிந்த பூங்குன்றன்

ஜெயலலிதாவின் அரசியல் ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்தவர் பூங்குன்றன் என்ற முறையில் அவருடைய விளக்கம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பூங்குன்றன் எங்கு இருந்தார், அந்த காலகட்டத்தில் வேதா நிலையத்தில் யாரெல்லாம் பணியாளர்களாக இருந்தார்கள் உள்ளிட்டவற்றையும் ஆறுமுகசாமி கமிஷன் கேள்விகளாக முன்வைத்தது.

ஒரு மணி நேரமாக மின்தடை

ஒரு மணி நேரமாக மின்தடை

இதனிடையே பிற்பகல் 1 மணியளவில் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் நீதிபதி ஆறுமுகசாமி அலுவலகம் உள்ள கலச மஹாலில் மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரமாகியும் மின்சாரம் திரும்ப வராததால் பூங்குன்றனிடம் நடத்தப்பட்ட விசாரணையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு எங்கெங்கு சொத்துகள் உள்ளன, வேதா நிலையத்திற்குள் சுரங்க அறைகள் இருக்கின்றனவா என்பன உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் பூங்குன்றனிடம் தான் பதில் உள்ளது. விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பவர்களின் வாக்குமூலங்கள் வீடியோ மூலம் பதிவு செய்து வருகிறது, இந்நிலையில் மின்வெட்டால் பூங்குன்றனிடம் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து பூங்குன்றனை மீண்டும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரி பெருமாள்சாமி நாளை ஆஜர்

அதிகாரி பெருமாள்சாமி நாளை ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு மருத்துவர் சிவக்குமார் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் இன்று பூங்குன்றன் ஆஜராகியுள்ளார். இதே போன்று ஜெயலலிதாவின் நிழல் போல வெளியில் எங்கு சென்றாலும் அவரது பாதுகாவலராக இருந்த போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி நாளை நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராக உள்ளார்.

டிசம்பர்11ல் மீண்டும் ஆஜராகிறார் ஷீலா

டிசம்பர்11ல் மீண்டும் ஆஜராகிறார் ஷீலா

இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் நாளை மறுதினம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஐராகிறார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர் ஜனவரி 15க்குப் பிறகு கமிஷன் முன்பு ஆஜராவார்கள் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayalalitha's personal secretary Poongundran appeared before justice Arumugasamy commission, because he knows everything in Veda Nilayam and close to Jayalalitha's day to day activities.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X