For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் விவாதிக்க இத்தனை முக்கியப் பிரச்சினைகள் உள்ளன.. லிஸ்ட் போட்டு கொடுத்த கருணாநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் மாற்றம், பால் விலை உயர்வு, பெரியார் அணை விவகாரம் என சட்டசபைக் கூட்டத் தொடரில் விவாதிக்கப் பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் சிலவற்றை திமுக தலைவர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் முதல் நாளான இன்று திமுக தலைவர் கருணாநிதி வருகை புரிந்தார். சட்டசபை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Karunanidhi lists issued to be discussed in assembly

அப்போது, தனக்கு போதுமான இருக்கை வசதி ஏற்படுத்தித் தராததால் சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார். மேலும், கையோடு ஏற்கனவே தயாரித்து கொண்டு வந்திருந்த அறிக்கை ஒன்றையும் செய்தியாளர்களிடம் அவர் கொடுத்தார்.

அந்த அறிக்கையில், சட்டசபையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பட்டியலிட்டிருந்தார்.

கருணாநிதி கொடுத்த பிரச்சினைகள் பட்டியல்:

தமிழகச் சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று தான் தமிழகத்திலே உள்ள பல்வேறு எதிர்க் கட்சிகளும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., பா.ம.க., இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் பலமுறை குரல் கொடுத்தன.

பொதுவாக அமைச்சரவையில் அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டாலே அது பற்றிப் பேரவையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்திலே முன்பு இருந்த முதலமைச்சர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு, புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, புதிதாக அமைச்சர்கள் எல்லாம் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையைக் கூட்டி அதுபற்றித் தமிழக மக்களுக்கு விளக்கியிருக்க வேண்டும். முதலமைச்சர் மாறி, முன்னாள் முதலமைச்சர் இருந்த இடம் காலியாகி, அந்தத் தொகுதிக்குத் தற்போது யாரும் உறுப்பினர் இல்லை என்ற அறிவிப்பினை சட்டப் பேரவைச் செயலாளர்; உடனடியாக முறையாகச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் பேரவை செயலாளர் ஏதோ உள்நோக்கத்தோடு பல நாட்கள் அந்த அறிவிப்பினைச் செய்யாமல் இருந்ததோடு, பிறகு அறிவிப்பை செய்த போது தேவையில்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பத்தாண்டுகளுக்குத் தேர்தலிலே போட்டியிட முடியாது என்று தன் மகிழ்ச்சியை (?) அந்த அறிக்கையிலே தெரிவித்தார். ஏற்கனவே பதவி நீட்டிப்பில் இருந்து வரும் அவர், அதற்காக பேரவைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பல நாளேடுகளில் செய்தி வந்தது.

பேரவைத் தலைவர் நீக்கப்படுவதாகக் கூடச் செய்தி வந்தது. முக்கியமான இந்தப் பிரச்சினைக் குறித்துத் தெளிவுபடுத்தும் வண்ணம், அரசின் சார்பிலோ, பேரவையின் சார்பிலோ எந்த விளக்கமும் தரப்படவில்லை. தற்போது முன்னாள் முதலமைச்சரின் அறை அப்படியே காலியாக உள்ளது. அந்த அறையிலே இருந்த பெயர்ப் பலகை கூட இன்னமும் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பவர், முதல் அமைச்சரின் அறைக்கே செல்லாமல் இருப்பதாகவும், அவருடைய அறை வாசலில் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் என்றே பெயர்ப் பலகை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் தமிழகத்திலே ஆட்சி நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஆழமாக ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் தேதியன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில், மு.க. ஸ்டாலின் என்னுடைய ஒப்புதலோடு விடுத்த அறிக்கையில், தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன; பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்களில் நடைபெறும் குளிர் காலச் சட்டமன்றக் கூட்டத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை; மீனவர்கள் பிரச்சினை, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற, தமிழக மக்களை வெகுவாகப் பாதிக்கும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த, பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க வேண்டியிருப்பதால், சட்டப் பேரவையினைக் கூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாத் என்ற இடத்தில் தற்போது இரண்டு அணைகளைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்றும், அதன் மூலம் 48 டி.எம்.சி. நீரைத் தேக்க முடியும் என்றும் கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்து, அந்தச் செய்தி ஏடுகளில் வெளி வந்தது.

கர்நாடக அரசு உத்தேசித்துள்ள இரண்டு அணைகள் கட்டப்படாத நிலையிலேயே, கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு ஆண்டு தோறும் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீர் முறைப்படி வழங்கப்படாதிருக்கும் நிலையில் தற்போது கர்நாடக அமைச்சர் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டப் போவதாகத் தெரிவித்திருப்பது, ஏற்கனவே பல வகைகளிலும் வேதனைகளை எதிர்கொண்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த முக்கியமான உயிர்ப் பிரச்சினை குறித்து, தமிழக அரசு அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அனைவரின் கருத்துக்களையும் அறிந்து, உச்ச நீதி மன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் சட்டப்படி உரிய தீர்வுக்காக முறையிடுவதோடு; தமிழகச் சட்டப் பேரவையினை உடனடியாகக் கூட்டி, அதிலே அவசரத் தீர்மானம் ஒன்றையும் கர்நாடக அரசையும், அந்த அமைச்சரின் அறிவிப்பினையும் எதிர்த்து நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று நான் அறிக்கை விடுத்திருந்தேன்.

அ.தி.மு.க. அரசின் மீது குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் என்று முதல் அமைச்சர் கேட்டார். நான் உடனே அ.தி.மு.க. ஆட்சிக்கெதிரான எண்ணற்ற பிரச்சினைகள் இருந்தாலும், இந்த ஆட்சியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற சம்பவங்களின் பட்டியலை மட்டும் தொகுத்து வெளியிட்டேன்.

பின்னர் வேறு வழியின்றி, பல முனைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்குப் பணிந்து எதிர்க் கட்சிகளின் அறிக்கைகளில் உண்மை இருப்பதை உணர்ந்து கொண்டோ என்னவோ, டிசம்பர் 4ஆம் தேதி பேரவை கூடுமென்று அறிவித்து, அவ்வாறே இன்று பேரவைக் கூட்டம் தொடங்குகிறது.

பேரவையில் தமிழக மக்கள் சார்ந்த விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் ஏராளம், ஏராளம்! எனவே குறைந்த பட்சம் ஒரு வார காலத்திற்காவது பேரவை நடைபெற்றால் தான் அவற்றையெல்லாம் ஓரளவுக்காவது விவாதிக்க முடியும்.

எனவே கூட்டத் தொடர் பத்து நாள்கள் நடைபெற வேண்டுமென்று நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் கலந்து கொண்ட மொத்தம் ஆறு கட்சிகளில்; திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய நான்கு எதிர்க் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்க மறுத்து, மூன்று நாள்கள் மட்டுமே பேரவை நடைபெறுமென்று முடிவெடுத்த போது, இந்த நான்கு கட்சிகளும் அதனையேற்க மறுத்து, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்து விட்டன.

தமிழக மக்களைப் பெரிதும் பாதித்திருக்கும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகளையும் முழுமையாக இங்கே பட்டியலிட வாய்ப்பில்லை எனினும், பேரவையில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினைகள் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

அவை வருமாறு :-

பேரவையில் விவாதிக்கப்படவேண்டிய முக்கிய பிரச்சினைகள்:

தமிழகத்தில் முதல் அமைச்சர் மாற்றம்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது

முல்லைப் பெரியாறு அணை - பேபி டேம் - கேரள அரசு

அமராவதி - பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவது

வரலாறு காணாத வகையில் பால் விலை உயர்வு

தொடரும் மின்வெட்டு; மின் கட்டண உயர்வு

முதியோர் உதவித் தொகை ரத்து -7 லட்சம் போலிகள் கண்டுபிடிப்பு.

100 நாள் வேலை நிறுத்தம்

தர்மபுரி, சேலம் மருத்துவ மனைகளில் சிசுக்கள் இறப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி அழைத்துப் பேச வேண்டும்.

வட கிழக்குப் பருவ மழை பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்.

கடும் விலை வாசி உயர்வு

தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சல், பறவைக்காய்ச்சல் சம்பந்தமாக.

வடகிழக்கு பருவ மழை காரணமாக நெடுஞ்சாலைத்துறையின் பொறுப்பில் உள்ள சாலைகள் சேதம் - போக்குவரத்து பெரும் பாதிப்பு

வடகிழக்குப் வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னர், ஏரி, குளம், வரத்து வாய்க்கால் தூர் வாராததால் தண்ணீர் வீணாக கடலில் கலப்பது.

தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தவிப்பு.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு.

பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம்.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவு - கொலைக்களமாகி வரும் கல்விக் கூடங்கள், கொலைகள் மலிந்து வரும் தென் மாவட்டங்கள்.

மின்வாரியம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது பற்றிய பிரச்சினை

பேரவைச் செயலாளர் நீக்கம் - பேரவைத் தலைவர் நீக்கம் - சென்னை மாநகர மேயர் மாற்றம் என்றெல்லாம் ஏடுகளில் தொடர்ந்து வந்த பிரச்சினைகள்

சத்துணவு முட்டை வாங்குவதில் ஊழல் - ஆவின் பால் விற்பனையில் ஊழல்.

கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க நீதிமன்றம் நியமித்த சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரணைக் குழு பற்றிய விவரங்கள்.

அங்கன்வாடிப் அங்கன்வாடிப் பணியாளர் நேர்முகத் தேர்வு திடீர் ரத்து.

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு

தாது மணல் கொள்ளை மீதான விவகாரம்.

English summary
The DMK president Karunanidhi has listed a series of issues that has to be discussed in Tamilnadu assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X