For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சேவுக்கு தலையையும் தமிழருக்கு வாலையும் காட்டி ஏமாற்றிவிட்டார் மன்மோகன் சிங்! - கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: காமன்வெல்த் மாநாடு விஷயத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தலையையும் தமிழருக்கு வாலையும் காட்டி ஏமாற்றிவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங் என்று குற்றம்சாட்டியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கை:

தமிழர் நெஞ்சங்களில் கேமரூன்

உலகத் தமிழர்களும், கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதற்குப் பிறகு, 'காமன்வெல்த்' மாநாடு இலங்கையில் நடைபெற்று முடிந்துவிட்டது.

Karunanidhi

அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு, அந்த மாநாட்டினை நடத்திய இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை; இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கிடைத்த சர்வதேச கவனம். ஈழத் தமிழர்கள் - இலங்கையிலே வாழ்வோர் மற்றும் உலகமெங்கும் வாழ்வோர், ஏன் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் நெஞ்சங்களிலும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இடம் பெற்றுவிட்டார்.

இந்தப் புகழும், பெருமையும் நம்முடைய இந்தியப் பிரதமருக்கும் கிடைத்திருக்கும். எப்போது தெரியுமா? இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், நமது வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் தலைமையிலான குழுவும், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை இழைத்திருக்கும் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்கள் - போர்க் குற்றங்கள் - இனப்படுகொலை ஆகியவற்றையும் கண்டிக்கும் வகையில் இந்தியா அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது; இந்தியாவில் இருந்து பிரதமர் அல்ல, ஒரு ‘‘துரும்பு'' கூட அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது என்று அறிவித்திருக்குமானால், தமிழகமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும். தமிழர்கள் ஒருமனதாக அதைப் பாராட்டி மகிழ்ந்திருப்பார்கள்; பிரதமரும் சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பார்.

கேமரூனுக்கு கிடைத்த பெருமை போல

அதுமாத்திரமல்ல; இலங்கை அதிபருக்கு தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல, இரண்டுங்கெட்டான் நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்லாமல், அதே நேரத்தில் மத்திய மந்திரியை மட்டும் அனுப்ப முன்வந்த சூழலில், அந்தச் செய்தியையாவது பிரதமர் ஓர் அறிக்கையாக இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கே நடத்திய வன்கொடுமைகளைக் கண்டிக்கின்ற வகையில்தான் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாலோ - அல்லது இலங்கைக்குச் சென்ற மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செய்ததைப்போல, ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று, தொடர்ந்து துன்ப துயரங்களை மட்டுமே அனுபவித்து வரும் தமிழர்களுக்கெல்லாம் இந்தியா சார்பில் ஆறுதல் தெரிவித்து, நெஞ்சைக் கலக்கும் அவர்களின் நிலைமைகளை; இலங்கை அதிபரைச் சந்தித்து எடுத்துக்கூறி, ஈழத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் இன்னமும் செய்துவரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும், தவறினால் ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்தியா முறையிட்டுத் தீர்மானம் கொண்டு வர வோம் என்று சொல்லியிருந்தாலே, இன்றைக்கு கேமரூனுக்கு கிடைத்துள்ள அத்தனை பெருமைகளும் இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கும். உலகத் தமிழ்ச் சமுதாயம் நமக்காக இந்திய அரசு துணைபுரிய முன்வந்திருக்கிறது என்றெண்ணி நன்றி செலுத்தியிருக்கும்.

சீனா கூட எதிர்த்ததே

இலங்கையின் நட்பு நாடு என்பதால், ஏராளமான உதவிகளை இலங்கைக்குச் செய்து வரும் சீனாவே கூட, ‘‘பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மாறுபட்டதாக இருக்கிறது; இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியின்காங் நிருபர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை சென்ற நம்முடைய வெளியுறவுத் துறை மந்திரி வாயைத் திறந்தாரா?.

ராஜபக்சே அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும், காமன்வெல்த் மாநாடு பற்றியும், இந்தியாவின் அணுகுமுறை பற்றியும் பலரும் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்திருக்கிறேன். உலகத் தமிழ்ச் சமூகத்தின் ஒன்றுபட்ட பாராட்டினைப் பெறுகின்ற அளவிற்கு, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், மாநாட்டின் முதல் நாளன்றே, அதாவது 15-11-2013 அன்றே யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த பகுதிகளுக்கு எல்லாம் சென்று அங்கே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களையெல்லாம் நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளையெல்லாம் கேட்டிருக்கிறார்.

சுயேட்சையான விசாரணை

1948-ல் பிரிட்டனிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, யாழ்ப்பாணம் சென்ற முதல் வெளிநாட்டு பிரதமரே டேவிட் கேமரூன்தான். 16-11-2013 அன்று டேவிட் கேமரூன் அளித்த பேட்டியில், ‘‘இறுதிக் கட்ட போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கெடு தவறினால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி, சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். போரின் போது தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என வரவழைத்து, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாம்களில் என்ன நடந்தது என்பதை அறிய சர்வதேச விசாரணை அவசியம்'' என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் அவர், ‘‘யாழ்ப்பாணத்துக்கு சில சர்வதேச அமைப்புகளுடன் நான் சென்றதற்குக் காரணம், அங்கு நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவங்களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுவதற்காகத்தான். காமன்வெல்த் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் இதைச் செய்தேன்,'' என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழர் மீது அக்கறை காட்டாத மத்திய அரசு

பிரிட்டன் பிரதமர் செய்ததைத்தான் இந்தியாவும், இந்தியப் பிரதமரும் செய்ய வேண்டுமென்று தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்த்தது. ஆனால் பிரிட்டன் பிரதமர் தமிழ்ச் சமுதாயத்தின் மீது காட்டுகின்ற அக்கறையையும், பரிதாபத்தையும், இந்தியா காட்டுகிறதா? பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாதது பற்றி கருத்து தெரிவிக்கும் போது, அவர் உண்மையிலே தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அதிலே கலந்து கொள்ளவில்லை என்றால், இலங்கைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அதற்கான காரணத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம் அல்லவா?.

ஈழத் தமிழர்களுக்கு இன்னின்ன கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன, அதற்காக ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அந்தக் கடிதத்திலே தெரிவித்திருக்கலாம் அல்லவா?. தமிழர்களின் கோரிக்கைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு, பிரதமருக்குப் பதிலாக அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளியுறவுத் துறை மந்திரி இலங்கைக்கு சென்றாரே, அவர் அங்கே செய்தது என்ன?

இங்கிலாந்து பிரதமர் மாநாட்டின் முதல் நாள் அன்றே யாழ்ப்பாணத்திற்கு ஓடோடிச்சென்று, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம் பார்த்து ஆறுதல் வழங்கினாரே; அதைப் போலச் செய்தாரா?. விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவரைப்போல பேட்டி அளித்தாரா?.

காமன்வெல்த் மாநாட்டிலே இலங்கையிலே நடைபெற்ற கொடுமைகளைப் பற்றியெல்லாம் கர்ஜித்தாரா?. பிரதமர் ஏன் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று காரணங்களை அடுக்கினாரா? எதுவுமே செய்யவில்லை; சல்மானுக்கென்ன; மாண்டு மடிந்தது நமது தமிழ் இன மக்கள்தானே?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK President Karunanidhi strongly condemned Prime Minister Manmohan Singh for not completely boycotting recently concluded Commonwealth Summit in Sri Lanka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X