For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி வாழ்த்து, ஜெ. வரவேற்பு: எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல எதையோ தெரிவிக்கிறது- கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது, மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அ.தி.மு.க. தெரிவிக்காமல் இருப்பதும் - ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்த்துப் பேசுவதும், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போல எதையோ "சூசகமாக" தெரிவிக்கின்றது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கை கோர்ப்பா? அல்லது கழுத்தறுப்பா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: சுரேஷ் பிரபுவின் மத்திய ரயில்வே பட்ஜெட்டையும், அருண் ஜெட்லியின் பொது பட்ஜெட்டையும் எல்லோரையும் முந்திக் கொண்டு ஜெயலலிதா வரவேற்று அறிக்கை கொடுத்தது எதைக் காட்டுகிறது?

கருணாநிதி: தமிழக அரசின் சார்பில் முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் பன்னீர்செல்வம் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பற்றியோ, பொது பட்ஜெட் பற்றியோ கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், ஏன் வாயையே திறக்காத நிலையில், வீட்டிலிருந்து வெளியேயே வராத, முன்னாள் முதல்வர், நீதிமன்றத்தால் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் - ஜெயலலிதா எல்லோரையும் முந்திக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளை வரவேற்று அறிக்கை கொடுத்திருப்பதும் -

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு எல்லோரையும் முந்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருப்பதும் - மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அ.தி.மு.க. தெரிவிக்காமல் இருப்பதும் - ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்த்துப் பேசுவதும், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போல எதையோ "சூசகமாக" தெரிவிக்கின்றது! இதற்கிடையே "தினமலர்" நாளேடு 1-3-2015 அன்று "பா.ஜ.க.வுடன் நெருங்கும் அ.தி.மு.க." என்ற தலைப்பில் இது பற்றி ஒரு செய்தியே வெளியிட்டுள்ளது.

ஊதிய உயர்வு பிரச்சனை

ஊதிய உயர்வு பிரச்சனை

கேள்வி: ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சென்ற தொழிற்சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய செய்தியும், புகைப்படங்களும் அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளதே?

கருணாநிதி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான 12வது ஊதிய ஒப்பந்தம் 1-9-2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. அரசு பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்காமல் காலம் தாண்டி நடத்தியதால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உட்பட 11 போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

அதன் பிறகு தான் வழிக்கு வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர், பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தார். கூடுதல் நிதித் துறைச் செயலாளர், உமாநாத், ஐ.ஏ.எஸ்., தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்தது. இந்தக் குழுவினரும், பேச்சுவார்த்தை நடத்தாமல், கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டனர்.

அதன் பிறகு மீண்டும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பினைக் கொடுத்தன. அதன் பிறகு, குரோம்பேட்டையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. 42 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றாலும், முக்கியப் பிரச்சினைகளில் உடன்பாடு வராததால், மீண்டும் இந்த மாதம் 12ஆம் தேதி பேச்சுவார்த்தையைத் தொடருவ தென்றும், வேலை நிறுத்தத்தை நடத்துவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டு, தொழிற் சங்கத்தினர் வெளியே வந்திருக்கிறார்கள்.

அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினரும், அவர்கள் அழைத்து வந்த குண்டர்களும் சேர்ந்து மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகத்தின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்.

இதைத் தடுக்க முற்பட்ட காவல் துறையினரையும் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். இதில் 7 தொ.மு.ச. தொழிலாளர்கள் உட்பட 10 போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் மண்டை உடைந்துள்ளது.

தொ.மு.ச. உள்ளிட்ட மற்ற தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, கல் வீச்சில் ஈடுபட்ட அ.தி.மு.க. தொழிற்சங்கத் தொழிலாளர்களைத் தாக்கச் சென்றபோது, காவல் துறையினர் தடுத்துள்ளார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க.வின் மேலிடம் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிற்சங்கத்தினரை மிரட்ட நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

பவானிசிங்

பவானிசிங்

கேள்வி: பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக்கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே, இது எதைக்காட்டுகிறது?

கருணாநிதி: அவர்கள் நடந்து கொண்டது, "நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு" என்பதைப் போலத் தான் இருக்கிறது. குற்றவாளிகள் தரப்பினருக்காக வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்போது, அவ்வப்போது அதற்கு ஆதாரத்துடன் பதில் அளிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், எதுவும் தெரியாததைப்போல அமர்ந்திருக்கிறார்.

நீதிபதி அவர்களே அதைப் பலமுறை நேரடியாகச் சுட்டிக் காட்டியும், அரசு விசாரணை அதிகாரியும், அரசு வழக்கறிஞரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. நடப்பது, அ.தி.மு.க. அரசு - அந்த அரசின் கீழ் பணியாற்றுபவர் விசாரணை அதிகாரி!

அ.தி.மு.க. அரசுக்காக வாதாட அ.தி.மு.க. அரசினால், வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்தான் பவானிசிங். அதுவும் பவானிசிங் கோரிக்கை எதையும் வைக்காத நிலையில், அவசர அவசரமாக அரசு வழக்கறிஞராக நியமிக்க ஒப்புதல் தந்ததுதான் அ.தி.மு.க. அரசு. அந்த பவானிசிங் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் வாதம் செய்யப்போகிறார்!

ஜெயலலிதா ஏற்கனவே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவதற்காக மனுதாக்கல் செய்தபோது, இந்தப் பவானிசிங் தான் முதலில் அவரை ஜாமீனில் விடக்கூடாது என்றும், பிறகு ஜாமீனில் விடலாம் என்றும் இரண்டு வெவ்வேறான கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவித்தவர். தற்போது அவர் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

கேள்வி: காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறைக்குழுவை உடனடியாக அமைக்க நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே?

கருணாநிதி: நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் பற்றி நான் கூறுவதை விட ஏடுகளில் வெளிவந்த செய்தியையே கூறுகிறேன். நீங்களும் படித்து மகிழ்ச்சியடையுங்கள்.

"சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா" என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், "தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய அ.தி.மு.க. எம்.பி.யைப் பார்த்து, ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்துத் தீர்த்தது.

ராஜ்ய சபாவில் தமிழக எம்.பி.யான விஜிலா சத்யானந்திற்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சில வார்த்தைகளைப் பேசி விட்டு, திடீரென "சிந்து நதியின் மிசை நிலவினிலே..." என ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தார். மூன்று நிமிட ஒதுக்கீட்டில் பாடுவதற்கு 2 நிமிடம் எடுத்துக் கொண்டவர், மீதமுள்ள ஒரு நிமிடத்தில் 3 முறை "அம்மா நாமம்" உச்சரித்தார்.

ஒட்டு மொத்த சபையும் "அம்மா, அம்மா" என எடுத்துக் கொடுத்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க. எம்.பி., தம்பி சிவா எழுந்து, மிக சீரியசாக, "மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான நல்லுறவைக் கட்டிக் காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இது மாத்திரமல்ல; கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியில், "போதுமான எம்.பி.க்கள் பலம் இருந்தும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேச முன்வராமல், பின் வாங்கியதன் மூலம், தனக்குரிய முக்கியத்துவத்தை அ.தி.மு.க. தாரை வார்த்துள்ளது.

பேச வரும்படி திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்தும் கூட, வாய்தா கேட்டது தெரிய வந்துள்ளது. 6வது இடத்தில் பேசியிருக்க வேண்டிய அ.தி.மு.க. 20வது நபராக பங்கேற்க நேர்ந்தது. இதன்மூலம் தன் முக்கியத்துவத்தை அந்தக் கட்சி தாரை வார்த்துள்ளது என்றே கூற வேண்டும்" என்று எழுதியிருந்தது. இது தான் அ.தி.மு.க.வின் நாடாளுமன்றச் செயல்பாடு.

காவல் துறை

காவல் துறை

கேள்வி: தமிழகக் காவல் துறையில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதனால் கூடுதல் பணியால் மற்ற அதிகாரிகள் திணறுவதாகவும் செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி: காவல் துறையிலே மாத்திரமல்ல; அரசுத் துறைகள் அனைத்திலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்த இடங்கள் எல்லாம் எதையோ "எதிர்பார்த்து" நிரப்பப்படாமல் உள்ளதாகவும் பேசப்படுகிறது.

காவல் துறையைப் பொறுத்து 1-1-2015 அன்று 21 ஆயிரத்து 100 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து கொண்டு, 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 இலட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களில் முதுநிலைப் பட்டதாரிகள் 2.72 இலட்சம் பேர்; இளநிலைப் பட்டதாரிகள் 3.915 இலட்சம் பேர்; டாக்டர்கள் 8,301 பேர்; மாற்றுத் திறனாளிகள் 1.10 இலட்சம் பேர்;

பொறியாளர்கள் 2 இலட்சம் பேர்களாவர். வகுப்புவாரியாக எடுத்துக் கொண்டால், ஆதி திராவிடர்கள் 18 இலட்சத்து 35 ஆயிரம் பேர்; அருந்ததியர் 1 லட்சத்து 89 ஆயிரம் பேர்; பழங்குடியினர் 62 ஆயிரம் பேர்; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 21 இலட்சத்து 60 ஆயிரம் பேர்; பிற்படுத்தப்பட்டோர் 36 இலட்சத்து 88 ஆயிரம் பேர்; இஸ்லாமியர்கள் 3 இலட்சத்து 32 ஆயிரம் பேர்; இதர பிரிவினர் 3 இலட்சத்து 2 ஆயிரம் பேர்.

வேலைக்காக இத்தனை இலட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்களோ இல்லையோ, அ.தி.மு.க. ஆட்சியினர் வந்ததும் வராததுமாக பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி, அவர்களில் பலரின் சாவுக்கும் காரணமாக இருந்து, தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்திலே உள்ளது.

தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் பராமரிப்புப் பணிகளையெல்லாம் தனியார் ஒருவருக்குக் கொடுத்து விட்டு, அந்தப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சாலைப் பணியாளர்களையும் வீட்டிற்கு அனுப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். தேடித் தேடிச் சென்று அ.தி.மு.க.விற்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களே, இனியாவது இதைப் பற்றியெல்லாம் சிந்தியுங்கள்.

ரயில்வே பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட்

கேள்வி: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டண உயர்வு செய்திருப்பதால் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்று செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி: இந்த ஆண்டு 26ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணத்தை 0.9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். இதில் சிமெண்டுக்கு 2.3 சதவிகிதம், நிலக்கரிக்கு 6.3 சதவிகிதம், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி., மற்றும் இரும்பு
உருக்கு ஆகியவற்றுக்கு 0.9 சதவிகிதம், உரம், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியை ரயிலில் கொண்டு வருவதற்காக தமிழக மின் வாரியம் ஆண்டுதோறும், மத்திய ரயில்வே துறைக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் செலுத்துகிறது. தற்போது நிலக்கரியை சரக்கு ரயிலில் கொண்டு வருவதற்கான கட்டணம் 6.3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது பட்ஜெட்டில் சேவை வரி, 12 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு நடப்பாண்டில், சரக்கு ரயில் கட்டணத்தில் 125 கோடி ரூபாயும், "கிளீன் எனர்ஜி" வரி 275 கோடி ரூபாயும் என கூடுதலாக 400 கோடி ரூபாடீநு செலவு ஏற்படும். "கழுத்துக்கு மேல் போய்விட்டது, சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன" என்று தான் நமது ஆட்சியினர் நினைப்பார்கள்!

சர்க்கரைக் கழகம்

சர்க்கரைக் கழகம்

கேள்வி: தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் நலிவடைந்த நிறுவனமாக மாறிவிட்டதாமே?

கருணாநிதி: தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் 1974ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 3 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள ஆலைகளில் மட்டும் அரவை மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை சர்க்கரை ஆலையானது, 2002 - 2003இல் அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அண்ணா சர்க்கரை ஆலை 2012-2013இல் 7.26 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது. ஆனால் 2013 - 2014இல் 23.63 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது. பெரம்பலூர் சர்க்கரை ஆலை, கடந்த ஆண்டில் 23.59 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, சர்க்கரைக் கழகத்தின் ஒட்டுமொத்த இழப்பு 99.70 கோடி ரூபாய். இதற்குக் காரணமான அந்தத்துறையை நிர்வகித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கும், அமைச்சருக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்கலாம்! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has slammed ADMK men's behaviour in the Rajya Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X