For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் பிரச்சனைக்காக வெளிநடப்பு செய்தாலும், தங்கள் கடமையை திமுகவினர் தட்டிக் கழிக்கவில்லை: கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்காக திமுகவினர் வெளிநடப்பு செய்தாலும், தங்கள் கடமையை அவர்கள் தட்டிக் கழிக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசின் அவதூறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமை. தனி நபரே அரசை விமர்சிக்கலாம் என்றுள்ளபோது அரசியல் கட்சித் தலைவர்கள் அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும்? வேண்டுமென்ற அவதூறு வழக்குகளை நடத்தினால் அதிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை.

karunanidhi statement about DMK walkout from assembly

முதல்வர் என்பவர் பொதுவாழ்வில் உள்ள முக்கியப் பிரமுகர். அதனால் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வழக்கு தொடரும் மாநிலம் தமிழகம் மட்டும்தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என தெரிவித்துள்ளனர்.

நல்லவேளை இது நீதிபதிகளின் கருத்து. வேறு யாராவது இதனைக் கூறியிருந்தால் அதற்காக ஒரு அவதூறு வழக்கு போடப்பட்டிருக்கும். முன்பெல்லாம் வெளிநடப்பு என்றால் அன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு சென்று விடுவார்கள். ஆனால், இப்போது ஒரு பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதன் அடையாளாக வெளிநடப்பு செய்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் அவைக்குச் சென்று நடவடிக்கைகளில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால், ஒரு சில பத்திரிகைகள் இதனை கிண்டல் செய்து எழுதுகின்றனர்.

திமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக எத்தனை முறை வெளிநடப்பு செய்தது என்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. 1998-ல் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தபோதும் நாடாளுமன்றத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், மக்கள் நலன் சார்ந்த ஒருசில பிரச்சினைகளில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதை பெரிதுபடுத்துகிறார்கள்.

கடந்த 07.01.2011 திமுக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றியபோது அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதற்காக 9 அதிமுக உறுப்பினர்கள் அந்தத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அடுத்தநாள், வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என முதல்வராக இருந்த நான் கேட்டுக் கொண்டேன்.

18.10.2007-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சல் குழப்பம் விளைவித்து அவரை பேச விடாமல் தடுத்தனர். எனவே, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் தன்னை அப்புறப்படுத்த வந்த காவலரின் தொப்பியைப் பிடுங்கி பேரவைத் தலைவர் மீது தூக்கி எறிந்தார்.இதற்காக அவரை 6 மாதம் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், நான் தலையிட்டு அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் 10 நாட்களுக்கு மட்டும் இடைநீக்கம் செய்தால் போதும் எனக் கூறினேன். அப்படியே செய்யப்பட்டது. அதுபோல 13.11.2008-ல் நான் பேரவையில் இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அவர்கள் மின்துறை மானியக் கோரிக்கையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கே அனுப்பி அவைக்கு வருமாறு அழைக்கச் செய்தேன். ஆனாலும் அவர்கள் அவைக்கு திரும்பி விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. திமுக பின்பற்றி வரும் ஜனநாயக நெறிமுறைகள் வேறு, அதிமுகவின் அணுகுமுறை வேறு. இந்த ஆண்டுக்கான காவல் துறை மானியக் கோரிக்கை எதிர்க்கட்சிகளே இல்லாமல் நடந்துள்ளது. இதுவரை இவ்வளவு மோசமாக நடந்தது இல்லை.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் 80 பேர் இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். ஆனால், அன்றைய தினம் 79 பேர் மட்டுமே பேரவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். பேரவையில் பிரச்சினை ஏற்பட்டபோது க.பொன்முடி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அவையில் இல்லை. ஆனால், அவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்கூட்டியே இரண்டு மூன்று முறை எச்சரிக்கை விடுத்த பிறகே வெளியேற்ற முடியும். இந்த காரணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்படும்.

கண்டெய்னர் லாரிகளில் கடத்தப்பட்ட பணம், ரயில் வண்டியில் பணம் கொள்ளை ஆகிய சம்பவங்களின் மூலம் நம் நாட்டில் வங்கிகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நிதி விவகாரங்களில் நீதி கிடைக்க வேண்டும். ஆனால், நீதி கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி நடைபெறும் போரட்டத்தில் திமுகவினர் அனைவரும் பங்கேற்று விவசாயிகளுக்கு குரலுக்கு வலு சேர்க்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief karunanidhi statement about on DMK MLa's walkout from assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X