For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவு கற்பனை செய்தாலும் குலை நடுங்குகிறதே: கருணாநிதி இரங்கல்

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கோ.சி. மணியின் மறைவிற்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருந்த கோ.சி. மணி அவரது இல்லத்தில் இன்று மறைந்தார். உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு. கருணாநிதி, கோ.சி. மணிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்?

குடந்தைக்கு ஓடத் துடிக்கும் மனது

குடந்தைக்கு ஓடத் துடிக்கும் மனது

காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் என்னிடம், தஞ்சை மாவட்டத்தில் எனக்கு தளகர்த்தராகவும், உற்ற காவலராகவும் இருந்து கழகம் வளர்த்த அருமைத் தம்பி கோ.சி. மணி மறைந்து விட்டார் என்ற செய்தியினைத் தயங்கித் தயங்கிச் சொன்னபோது, மருத்துவ மனையிலிருந்து எழுந்து குடந்தைக்கு ஓடோடிச் சென்று, மணியின் மாணிக்க முகத்தை கடைசியாகக் காண வேண்டுமென்று என் மனம் துடிதுடித்தது!

வாலிபம் தொட்டு தொடர்ந்த உறவு

வாலிபம் தொட்டு தொடர்ந்த உறவு

தஞ்சைத் தரணியின் தளகர்த்தர் - தமிழ்க் குலம் தன்மானத்தோடு தழைத் திடவும் - இனப்பற்று - மொழிப்பற்று என்றென்றும் எழுச்சியுறவும், வாலிபப் பருவந்தொட்டே வாட்டம் சிறிதுமின்றி "என் கடன் இயக்கப் பணி" ஒன்றே என இன்முகம் காட்டி எந்நாளும் உழைத்திட்ட என்னருமைத் தோழர் கோ.சி. மணி மறைந்து விட்டார்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் அருகிருந்து பழகி அவர் தம் அன்பையும், பாசத்தையும் அளவின்றிப் பெற்ற இலட்சிய முரசம் கோ.சி. மணி. கொட்டியும், ஆம்பலும் போல ஒட்டி உறவாடி இயக்கத்தின் கொள்கை காத்த குணக்குன்று கோ.சி. மணி.

அண்ணா மதித்த கோ.சி. மணி

அண்ணா மதித்த கோ.சி. மணி

என்னைப் பற்றி யாராவது குறை காண முனைந்தால், அதனை எதிர்த்து ஆவேசத்துடன் முதல் குரல் எழுப்புவது கோ.சி. மணியாகத் தான் இருக்கும். பேரறிஞர் அண்ணா அவர்களே, ஒருமுறை தனது சுற்றுப் பயணத்தின் போது, திடீரென மேக்கிரிமங்கலம் சென்று வீட்டில் இல்லாததால், தம்பி கோ.சி. மணியை அவருடைய வயலுக்கே சென்று பணியாற்றிக் கொண்டிருந்த அவரைச் சென்று சந்தித்தார் என்றால் அவரது பெருமையை உணர்ந்து கொள்ள முடியும்.

நீங்கா நெஞ்சின் அலை

நீங்கா நெஞ்சின் அலை

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் என்னுடைய சுற்றுப் பயணம் என்றால், அவர் மேடையில் இல்லாமல் நான் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றியது கிடையாது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாகப் பயணம் செய்ய முடியாத நிலையிலும், எப்படியாவது இரண்டு பேர் துணையோடு சென்னை வந்து என்னைச் சந்திப்பார். அவர் வந்து சென்ற பிறகு, ஒரு சில மணி நேரம் கோ.சி. மணி தான் என் சிந்தையிலே ஊன்றி இருப்பார். அவருடன் கழித்த அந்த நாட்களின் நினைவுகள் எல்லாம் என் நெஞ்சக் கடலில் நெடுநேரம் அலைஅலையாக எழும்!

படமாகி பாடமான மணி

படமாகி பாடமான மணி

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அந்தக் காலத்தில் உடனடியாக வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவம் அய்யர், உக்கடை அப்பாவுத் தேவர், நெடும்பலம் சாமியப்பா போன்ற பெயர்கள் மட்டுமே நினைவுக்கு வந்த காலம் போய், மன்னை நாராயணசாமி, ஆடுதுறை கோ.சி மணி, விளநகர் கணேசன், மயிலாடுதுறை கிட்டப்பா, முத்துப்பேட்டை தர்மலிங்கம், தஞ்சை நடராசன், குடந்தை கே.கே. நீலமேகம், பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, நாடியம் ராமையா, நன்னிலம் நடராஜன் போன்ற தொண்டர்தம் பெருமைப் பெயர்கள் பேசப்பட்டு, அந்தப் பட்டியலில் மிச்சமிருந்த குடந்தை கோ.சி. மணியையும் இன்று இழந்து விட்டோம். நம்மிடையே நடமாடிக் கொண்டிருந்த மணி இன்று படமாகி விட்டார்; தூய தொண்டுக்கும், தோழமைக்கும் அனைவர்க்கும் பாடமாகி விட்டார்.

மணி இல்லாத தஞ்சை மண்

மணி இல்லாத தஞ்சை மண்

கோ.சி. மணியின் இறுதிப் பயணத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் பங்கேற்கச் சென்றுள்ளார். அவருடன் தம்பிகள் பொன்முடி, ஆ. ராஜா ஆகியோரும் சென்றுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்? என்று கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader has paid tributes to veteran DMK leader Ko.Si. Mani today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X