For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன நடக்கிறது கதிராமங்கலத்தில்.. வெள்ளை அறிக்கை வெளியிட உண்மை அறியும் குழு கோரிக்கை

ஓஎன்ஜிசி இப்பகுதியில் செய்துவருகிற, செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும் என்று உண்மை கண்டறியும் குழு கோரியுள்ளது.

Google Oneindia Tamil News

கும்பகோணம்: முழுமையாக ஆய்வுகள் எல்லாம் செய்யப்பட்டு மக்களின் ஐயங்கள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு அது ஏற்கப்படும் வரை ஓஎன்ஜிசி இப்பகுதியில் பணிகளை செய்யக் கூடாது என்று உண்மைக் கண்டறியும் குழு கூறியுள்ளது.

கடந்த மாதம் 30 தேதி கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதுகுறித்து ஆய்வு செய்ய பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று கதிராமங்கலம் சென்றது.

இந்தக் குழு வெளியிட்டுள்ள உண்மை அறியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பார்வைகள் மற்றும் பரிந்துரைகள்:

எமது பார்வைகள்:-

எமது பார்வைகள்:-

1.இப்பகுதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரம் அழ்ந்து வருவதற்கு ONGC இப்பகுதியில் செய்து வரும் பணிகளே காரணம் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளி வைத்தீஸ்வரன் - கவிதா ஆகியோரின் மகன் வருண் குமார் (17) கடந்த சில ஆண்டுகளாக சதைச் சிதைவு நோய்க்கு ஆட்பட்டுள்ளார். இது மரபணு தொடர்பான வியாயதியாயினும் தங்கள் மரபில் யாருக்கும் இதுவரை இப்படியான நோய்கள் வந்ததில்லை எனச் சொல்லும் பெற்றோர், தங்கள் மகனின் இந்த நோய்க்கு ONGC செயல்பாடுகளே காரணம் என உறுதியாக நம்புகின்றனர்.

தடியடி கண்டிக்கத்தக்கது

தடியடி கண்டிக்கத்தக்கது

2. இப்படியான ஒரு நிலையில் அரசு தலையிட்டு உண்மை நிலையை வெளிக் கொணரவும், உரிய பாதுகாப்புகளை மேற்கோள்ளவும், பாதுகாப்புகள் சாத்தியமே இல்லை எனும்பட்சத்தில் திட்டத்தை விரிவுபடுத்துவதை நிறுத்துவதும், தேவையானால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவற்ரையும் நிறுத்தி வைப்பதையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளையும், அச்சங்களையும் முன்வைத்துப் போராடும்போது காவல்துறையை அனுப்பித் தடியடி நடத்துவது, கைதுகள் செய்வது என்பது மட்டுமே தனது பணி என நினைத்துச் செயல்படுவது கண்டிக்கத் தக்கது.

ஓஎன்ஜிசியின் அலட்சியம்

ஓஎன்ஜிசியின் அலட்சியம்

3. ONGC ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய ஒன்று. 68 சத ‘ஈக்விடி ஸ்டேக்' உள்ள ஒரு லாபம் ஈட்டக்கூடிய துறை. 1958 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 26 பகுதிகளில் தன் பணிகளைச் செய்து வருகிறது. 11,000 கி.மீ நீளமுள்ள வாயுக் குழாய்களை அது பயன்படுத்தி எரிபொருளைக் கொண்டு செல்கிறது. இப்படியான ஒரு நிறுவனம் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளாமையும், மக்கள் பிரச்சினைகளில் அக்கறையற்றும் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று. மக்கள் எதிர்ப்பால் இப்போது மீதேன் எடுப்பது கைவிடப்பட்ட பின்னர் அப்படி எடுப்பது ஆபத்தானது என இன்று ஏற்றுக்கொள்ளும் ONGC அதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது இதை வெளிப்படையாகக் கூறவில்லை. பத்திரிகைச் செய்திகளை விரிவாக ஆய்வு செய்தோமானால் மிகப் பெரிய விரிவாக்கத் திட்டங்களுடன் அது செயல்படுவதும் தேவையானால் சுற்றுச் சூழல் கலந்தாய்வுகளுக்கு விலக்களிக்க அது கோருவதும் விளங்குகிறது. ஆனால் அது குறித்து பகுதி சார்ந்த மக்களிடம் அது உரையாடுவதோ கருத்துக்கள் கேட்பதோ இல்லை. விபத்துக்கள் ஏற்பட்டு மூவர் இறந்தது வரை இந்த ஆபத்தான எரி பொருள் குழாய்களை குடியிருப்புப் பகுதிகள் வழியாகத் தரை மீது கிடத்தப்பட்டிருந்ததி இருந்ததை என்னவென்று புரிந்துகொள்வது. இன்று ONGC செயல்பாடுகளை ஆதரித்து மக்கள் மத்தியில் பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரிக்கு அந்தச் சம்பவமே தெரிந்திருக்கவில்லை என்பது ONGC யின் அலட்சியப் போக்கை விளக்கும். இப்படியான விபத்துக்களில் மக்கள் உயிர்கள் பலியாக்கப்பட்ட பின்தான் உரிய பாதுகாப்புகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படும் என்றால் இதன் பொருள் என்ன? மக்கள்தான் ONGC யின் சோதனை எலிகளா?

Recommended Video

    Hunger Strike Against ONGC in Kathiramangalam-Oneindia Tamil
    அக்கறையற்ற அரசு

    அக்கறையற்ற அரசு

    4. சுற்றுச் சூழல் ஆய்வு, அது தொடர்பான விதிமுறை கடைபிடிப்பு ஆகியவற்றை மீறுவதில் மிகவும் இகழ் வாய்ந்த வரலாற்றை உடையது ONGC. உரிய விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனச் சொல்லி காவிரிப் படுகையில் செயல்படும் இதன் எரிவாயுத் தளங்களில் 23 ஐ அனுமதிப்பட்டியலிலிருந்து மத்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் (Union Ministry of Environment, Forests and Climate Change) சென்ற மே 17, 2017ல் நீக்கியது குறிப்பிடத் தக்கது. இந்தச் செய்தியை மேலோட்டமாக வாசிக்கும்போது சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் ONGC பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாலும், மத்திய அரசு அக்கறையுடனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்பது போலவும் தோன்றும். நுணுக்கமாகக் கவனித்தால்தான் இரண்டுமே மாநில மக்களைப்பற்றி இம்மியும் அக்கறையற்றுச் செயல்படுவது விளங்கும்.

    35 சோதனை கிணறுகள்

    35 சோதனை கிணறுகள்

    இன்னொரு செய்தியைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். சுற்றுச் சூழலைப் பாதிக்கவல்ல எந்த ஒரு திட்டமானாலும் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படும் மக்களைக் கூட்டி பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பது விதி. மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தக் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பரிந்துரை செய்வது அவசியம். ஒப்பீட்டளவில் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால் மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அது தயங்கும். சென்ற 2015ல் காவிரிப் படுகையில் மேலும் 35 சோதனைக் கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும் 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூரிலும், 5 தஞ்சாவூரிலும் அமைந்தன. இவற்றில் கடலூர் தவிர பிற மாவட்டங்களில் கருத்துத்துக் கணிப்புகள் நடந்தன. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துறை வழங்கத் தயங்கியது.

    மக்களின் எதிர்ப்பு

    மக்களின் எதிர்ப்பு

    சில காலம் பொறுத்திருந்த ONGC சென்ற 2015 மே 19 அன்று மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. பொதுக் கருத்துக் கணிப்புக் கேட்பது கால விரயத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறது எனவும் ONGC அதனிடம் புகார் கூறியது. அதை அப்படியே ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு உரிய அனுமதியை அளிக்குமாறு சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்ற ஜூன் 9, 2015 அன்று அந்த 35 திட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கியது.

    கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்

    கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்

    சென்ற பிப் 15 (2017) அன்று மோடி தலைமையில் கூடிய ‘பொருளாதார விடயங்களுக்கான அமைச்சரவைக் குழு' (Cabinet Committee on Economic Affairs) 31 பகுதிகளில் இயற்கை வாயு மற்றும் எண்ணை முதலான ஹைட்ரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப்பதற்கான அனுமதியை அளித்தது. 2016 ல் உருவாக்கப்பட்ட மோடி அரசின் "கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்" (Discovered Small Fields) திட்டத்தின் கீழ் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.

    நிலம் கையகப்படுத்தல் சட்டம்

    நிலம் கையகப்படுத்தல் சட்டம்

    சென்ற ஜூன் 28 (2017) ல் அந்த செய்தியின்படி காவிரி டெல்டா பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் ONGC அனுமதி கோரியுள்ளது. ஒவ்வொரு கிணறு தோண்டவும் 2 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் எனவும் ‘நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்' மூலம் உரிய நிலங்கள் குத்தகை அடிப்படையில் கைப்பற்றப்படும் எனவும், உற்பத்தி தொடங்கியவுடன் அந்த நிலங்கள் அவரவர் வசம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்படுகிறது.

    அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன்

    அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன்

    தவிரவும் இப்போது மத்திய அரசு எல்லாவிதமான ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவும் ஒரே உரிமத்தை (sigle license) வழங்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இப்படி ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கத் தொடங்கியுள்ளன. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே இத்திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன என மாநில அமைச்சர் கருப்பண்ணன் இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. .

    எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை

    எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை

    1991 லெயே காவேரிப் படுகையிலிருந்து பெரிய அளவில் ஹைட்ரோ கார்பன் வளங்களை உறிஞ்சி எடுப்பதென ONGC திட்டமிட்டது. அப்போது அதனிடம் ஒன்பது "ரிக்" களும் 12 கிணறுகளுமே இருந்தன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 மடங்கு உற்பத்தியை அதிகரிப்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. மக்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அந்தத் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    மறியல் போராட்டம்

    மறியல் போராட்டம்

    5. 2010 க்குப் பின் ஏற்பட்ட வறட்சியின் விளைவாகத்தான் எல்லாப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன., அதற்கு முன் மக்களுக்கும் ONGC க்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போலச் சொல்வதையும் ஏற்க இயலாது. மீத்தேன் எதிர்ப்பிற்கு முன்பே பல இடங்களில் ONGC .யை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்துள்ளன. தொடக்கத்தில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியன டேங்கரில் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது தொடங்கி அவற்றை மறித்து போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போதும் உடைப்பு, விபத்து ஏற்படும் காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. .

    அச்சத்தை போக்க..

    அச்சத்தை போக்க..

    அடியக்கமங்கலம் பகுதியில் விளைநிலங்களில் பெட்ரோலியக் கசிவு மற்றும் எண்ணெய்ப் படலத்தால் பெருமளவு நிலங்கள் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கும் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இப்போது டேங்கர்களில் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதில்லை எனினும் இரவு நேரங்களில் ரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள் வழியே எண்ணைய்க் கழிவுகள் வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த உண்மைகலை விளக்கி மக்களின் அச்சத்தைப் போக்க இதுவரை ONGC முயற்சித்ததில்லை.

    விழிப்புணர்வு அதிகரிப்பு

    விழிப்புணர்வு அதிகரிப்பு

    ‘வாட்ஸ் அப்பில்' பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்றார் எங்களிடம் பேசிய அதிகாரி. அப்படிப் பொறுப்பில்லாமல் சில வாட்ஸ் அப் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பதில் உண்மை இருக்கலாம். அது ONGC தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவு என்பதையும், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அதரற்கு உள்ளது என்பதையும் அது ஏற்கவில்லை.இவ்வளவு காலங்களையும் விட இப்போது திடீரென போராட்டங்கள் மேலுக்கு வருகின்றன என்றால் இப்போது அதிக அளவில் போராட்டங்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போர்க்குணமும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளன என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

    ஓஎன்ஜிசி லஞ்சம்

    ஓஎன்ஜிசி லஞ்சம்

    6. வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களிடம் நேரடியாக்கப் பேசி அவர்களின் ஐயங்களைப் போக்குவது என்பதற்குப் பதிலாக ஒரு சிலரைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கையூட்டு அளித்துத் தமக்கு ஆதரவாக முன் நிறுத்தும் வேலையை ONGC செய்வதாக ஒரு கருத்து மிகப் பரவலாக நிலவுவதை எங்களால் அறிய முடிந்தது.

    10 பேர் கைது

    6. ஜூன் 30 சம்பவங்களைப் பொறுத்த மட்டில் அன்று காலை முதல் மக்கள் அங்கு கூடி நின்று மாவட்ட ஆட்சியர் அங்கு நேரடியாக வர வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆபத்தான நிலையில் எரிவாயு கசிந்து கொண்டுள்ள சூழலில் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் இறுதிவரை அங்கு வந்து மக்களைச் சந்திக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சப் கலெக்டர் ஏற்கனவே கொடுத்த உறுதி மொழிகள் பொய்த்துப் போனபின் மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியை மட்டுமே நம்ப முடியும் என்கிற மக்களின் கருத்திற்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பளித்திருக்க வேண்டும். அன்று மட்டும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்திருக்கும். தேவை இல்லாமல் தடி அடி நடத்தி, பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, இன்று அம்மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதை எல்லாம் தவிர்த்திருக்கும் வாய்ப்பை மாவட்ட நிர்வாகமும் ஆட்சியரும் தவற விட்டதும், அன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியும் கண்டிக்கத் தக்க ஒன்று.

    எமது பரிந்துரைகள்:-

    எமது பரிந்துரைகள்:-

    சிறைவைக்கப்பட்டுள்ள பத்து பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எந்த நிபந்தனைகளும் இன்றி நீக்கப்பட வேண்டும்.

    வேலிக்கு ஓணான் சாட்சி

    காவிரிப் படுகையில் எரிபொருள் தோண்டிவரும் ONGC யின் செயல்பாடுகளின் ஊடாகக் கடந்த காலத்தில் நடைபெற்ற விபத்துகள் மட்டுமின்றி மக்களின் நியாயமான ஐயங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்ய பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் உரிய ஆலோசனைகள் வழங்க துறை சார்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனித உரிமைச் செயலாளிகள் ஆகியோர் இணைக்கப்பட வேண்டும்.
    தற்போது ஜூன் 30 அன்று நடைபெற்ற எரிவாயு மற்றும் திரவக் கசிவு தொடர்பாக ONGC அளவில் ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்க இயலாது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அவர்களின் முடிவு நம்பகத் தன்மை உடையதல்ல.

    ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்த வேண்டும்

    ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்த வேண்டும்

    தற்போது கதிராமங்கலம் பகுதியில் ONGC யின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழுமையாக இந்த ஆய்வுகள் எல்லாம் செய்யப்பட்டு மக்களின் ஐயங்கள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு அது ஏற்கப்படும்வரை ONGC யின் பணிகள் இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.

    வெள்ளை அறிக்கை

    ONGC இப்பகுதியில் செய்துவருகிற, செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை குறித்து பல செய்திகள் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளி வருகின்றன. பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் திட்டமிடப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை ஒன்றை உடனடியாக ONGC வெளியிட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக அது பலமுறை மத்திய - மாநில அரசு நிறுவனங்களாலும். இது குறித்த ஆர்வலர்களாலும் அது கண்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அந்த வெள்ளை அறிக்கை பேச வேண்டும்.

    மக்களுக்கு பாராட்டு

    மக்களுக்கு பாராட்டு

    எதிர்காலச் செயல்பாடுகள் அனைத்திலும் ஊர் மக்கள் ஏற்றூக் கொள்ளக் கூடிய உள்ளூர்த் தலைவர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ONGC வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். அமைதியான முறையில், ஆனால் அதே நேரத்தில் உறுதியாகப் போராடி வரும் கதிராமங்கலம் மக்களை இக்குழு பாராட்டுகிறது.

    வாட்ஸ் அப் செய்திகளில் கவனம்

    போராடுபவர்கள் வாட்ஸ் அப் முதலான நவீன சாதனங்களைப் பயன்படுத்தும்போது அதன் உண்மைத் தன்மைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேறெங்கோ நடந்த ஒரு விபத்தைக் கதிராமங்கலத்தில் நடந்ததாக ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டதை எங்களிடம் பேசிய அதிகாரி சுட்டிக் காட்டினார். இது போன்ற செய்திப்பரப்பல்களில் நம்பகத் தன்மை மிக மிக முக்கியம் என்பதையும் நாங்கள் நினைவூட்டுகிறோம். இவ்வாறு உண்மைக் கண்டறியும் குழு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

    English summary
    Fact finding team headed by prof. A. Marx issued a report about Kathiramangalam protest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X