For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல் கலாம் உடல் இன்று ராமேஸ்வரம் வருகை.. முழு அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

84 வயதான அப்துல் கலாம் நேற்று முன்தினம் காலமானார். மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Last rites of Abdul Kalam will be held in his native town of Rameswaram

மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கலாம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க், கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Last rites of Abdul Kalam will be held in his native town of Rameswaram

கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கலாமின் உடலை சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மதியம் 1 மணிக்கு கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.

அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது.

நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

அங்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதால் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் உடலை எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர்க் கடலில் ஆழ்ந்துள்ளது.

English summary
The last rites of former President APJ Abdul Kalam will be held in his native town of Rameswaram in keeping with his family's wishes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X