For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறட்சியால் 17 விவசாயிகள்தான் மரணமா.. தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

வறட்சியால் 17 விவசாயிகள் மட்டும்தான் மரணம் அடைந்துள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதாது என்பதையும் அவர் கூறியுள

Google Oneindia Tamil News

சென்னை: பருவமழை பொய்த்துள்ளதால் 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள நிலையில் வெறும் 17 விவசாயிகள்தான் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்" என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது மிகவும் காலதாமதமானது என்றாலும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு ஏதோ உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறது என்ற அளவில் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு, பருவமழை ஒரு காரணம் என்றாலும், காவிரி இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகத்திடமிருந்து பேச்சுவார்த்தையின் மூலமோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமோ விவசாயத்திற்கு அதிமுக அரசால் தண்ணீரைப் பெற முடியவில்லை என்பதுதான் அதிமுக அரசின் இமாலயத் தோல்வி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொறுப்பற்ற நிர்வாகம்

பொறுப்பற்ற நிர்வாகம்

அதிமுக அரசின் பொறுப்பற்ற நிர்வாக சீர்கேட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளிலும் ஒரு வருடம் கூட உரிய காலத்தில் பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க முடியாமல், காவிரி டெல்டா விவசாயிகள் இன்று தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் நிலை உருவாகி விட்டது.

120 விவசாயி மரணம்

120 விவசாயி மரணம்

விவசாயம் சருகு போல் பட்டுப் போவதைப் பார்த்தும், நிலங்கள் தரிசாகிப் பாலம் பாலமாக வெடித்துப் போவதைப் பார்த்தும் மனம் தாங்க முடியாமல் இதுவரை 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு விட்டார்கள். காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி, ஈரோடு பகுதியில் உள்ள மஞ்சள் விவசாயிகள், தேனி பகுதியில் உள்ள வாழை விவசாயிகள், வட மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகள் என்று அனைத்து தரப்பு விவசாயிகளும் அதிமுக ஆட்சியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்று வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நிற்கிறார்கள் என்றாலும் அதை "காலவரம்பின்றி" கவலைகொள்ளாமல் இருந்தது அதிமுக அரசு என்பதே உண்மை.

30 ஆயிரம் இழப்பீடு

30 ஆயிரம் இழப்பீடு

விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறோம். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களிடம் நானே நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறேன்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மீண்டும் சமீபத்தில் கூட முதலமைச்சருக்கு கடிதமே எழுதி விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவும், வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்கவும் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறேன். பொறுப்புள்ள எதிர்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அ.தி.மு.க. அரசை முன்கூட்டியே எச்சரித்துள்ளது.

கண்துடைப்பு

கண்துடைப்பு

இந்நிலையில் கண்துடைப்புக்காக அதிமுக அமைச்சர்களை அனுப்பி விவசாயிகள் பாதிப்பு குறித்து பார்வையிடச் சொன்னதையும், அப்படி சென்ற அமைச்சர்கள் "வறட்சி மாநிலமாக அறிவிக்க முடியாது" என்றும், "விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை" என்றும் கொச்சைப் படுத்திய நிகழ்வுகளையும், காட்சிகளையும் கண்டோம். இது போன்றதொரு சூழ்நிலையில்தான் இப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

அந்த அறிவிப்பில் பயிர்கடன்கள் மத்திய காலக்கடன்களாக மாற்றப்படும் என்று கூறியிருக்கிறார். விவசாயமும் இல்லை. விளைச்சலும் இல்லை. வேறு எப்படி விவசாயிகள் அந்தக் கடனை கட்ட முடியும் என்பதை அரசு ஆலோசனை செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே மத்திய காலக்கடனாக மாற்றுவதற்கு பதில் அந்தக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அதுவே விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கையாகும்.

யானைக்கு சோளப் பொறி

யானைக்கு சோளப் பொறி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தும் ஏக்கருக்கு 5465 ரூபாய் இழப்பீடு என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது "யானைப் பசிக்கு சோளப்பொறி" போடுவது போல பயனற்ற அறிவிப்பாக உள்ளது. ஆகவே இந்த இழப்பீட்டை ஏக்கருக்கு 30 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட வேண்டும்.

அரசு வேலை

அரசு வேலை

தமிழகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை உலகமே அறியும் விதத்தில் அவர்களின் படங்களுடன் தொலைக் காட்சிகள் வெளியிட்டு விட்டன. அவர்களின் குடும்பத்தாரின் கருத்துகளையும் ஒளிபரப்பின. ஆனாலும் "விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உடல் நலக்குறைவால் இறந்தார்கள்" என்று அதிமுக அமைச்சர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்கள் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 17 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது போல் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்களால் உயிர்ப்பலியான அனைத்து விவசாயிகளின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து அவர்களின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்கிட வேண்டும்.

வரவேற்பு

வரவேற்பு

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணி வரம்பு 150 நாட்களாக உயர்த்தப்படும் என்பதை வரவேற்கிறேன். ஆனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் உதவும் வகையில் இந்த வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப் பட வேண்டும். தூர் வாருதல், நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் போன்றவற்றை நிறைவேற்ற ஒதுக்கப்படும் நிதி வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்பட வேண்டும்.

சட்டமன்ற சிறப்புக் கூட்டம்

சட்டமன்ற சிறப்புக் கூட்டம்

"மத்திய அரசின் நிதியுதவி கோரி மனு தயார் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். கோரிக்கை மனுவை தயார் செய்து கொண்டு முதலமைச்சரே நேரடியாகச் சென்று பிரதமரை சந்தித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதுகாக்க போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிவாரண உதவி தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தற்கொலை தொடர்வதும் அதிகரிப்பதுமாக இருப்பதால் "தமிழகத்தை வறட்சி மாநிலமாகக் கருதி மத்திய அரசின் நிதியை பெறுவதில்" அதிவேகமாக செயல்பட வேண்டும் எனவும், ஒட்டுமொத்த விவசாயிகளின் நிலை பற்றி விவாதிக்க ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் கோரியபடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
The opposition leader M.K. Stalin condemned Tamil Nadu government’s declaration of 17 farmers died in drought.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X