பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை- கபில்சிபல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் மைனாரிட்டி அரசு சட்டவிரோதமாக தொடரும். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை என்றும் வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு ஆளுநர் உத்தரவிட கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

Madras HC today Hear MK Stalin’s Petition Against CM Palaniswami

சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபையில் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 233 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெருன்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 113 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.

இதுவரை அவருக்கு ஆதரவளித்து வந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 21 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆகஸ்ட் 22ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். திமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 119ஆக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு 113 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது.

இதனடிப்படையில் பெரும்பான்மையை நிருபிக்க முதல்வருக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென ஆளுநரை ஆகஸ்ட் 22ம் தேதி சந்தித்து மனு கொடுத்தோம். அந்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் செப்டம்பர் 9ம் தேதியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநரை சந்தித்தோம். எங்கள் கோரிக்கைக்கு ஆளுநர் இதுவரை செயல்படுத்தவில்லை.

எங்கள் கோரிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை. பெரும்பான்மை நிரூபிக்க அழைப்பு விடுப்பதை தாமதிப்பது என்பது குதிரைபேரம் நடக்க வழி ஏற்படுத்திவிடும். ஆளுநரின் இந்த காலதாமதம் என்பது எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாக அமைந்துவிடும்.

இந்நிலையில், குட்கா ஊழலை வெளிக்கொண்டுவருவதற்காக சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்களை காட்டியதையடுத்து, பேரவைக்குள் குட்கா பொருள்கள் எடுத்து சென்றதாக திமுக உறுப்பினர்கள் 21 பேருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கத்துடன் திமுக உறுப்பினர்கள் 21 பேருக்கு பேரவை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் தற்போதை நிலையில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாமல் செயலிழந்த நிலையில் உள்ளது. அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படவும், ஜனநாயகம் காக்க தற்போது போதிய பெரும்பான்மை இல்லாமல் இந்த அரசு சட்ட விரோதமான அரசாக செயல்படுகிறது.

அதிமுக டி.டி.வி.தினகரன் அணியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளனர். எனவே, தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வருக்கு அளுநர் உத்தரவிட வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை அரசின் முக்கிய முடிவுகள் அல்லது கொள்கை முடிவுகளை முதல்வர் எடப்பாடி எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

அவ்வாறு நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்பார்வையிட பொது பார்வையாளர் ஒருவரை உயர் நீதிமன்றமே நியமித்து, அவர் முன்னிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றி ஆளுநர் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற முயற்றி செய்கிறார்கள் என்றும் வாதிட்டார்.

எஸ்ஆர் பொம்மை வழக்கை மேற்கோள் காட்டி கபில் சிபல் வாதாடினார். கணக்குகளை மாற்றி காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முயற்சி செய்வதாகவும் கபில் சிபல் வாதிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் மைனாரிட்டி அரசு சட்டவிரோதமாக தொடரும் என்றும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது முதல்வர் எடப்பாடி கடமை என்றும் வாதிட்டார்.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை என்றும், ஆளுநரிடம் மனு கொடுத்தும் எந்த பதிலும் தரவில்லை என்றும் வாதிட்டார் கபில் சிபல்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் கபில் சிபல் குறிப்பிட்டார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras High court today hear case by Stalin to seek floor test of CM Palanisamy government.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற