
ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி! அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் -எ.வ.வேலு பேச்சு!
கள்ளக்குறிச்சி: ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என பேசியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.
மேலும், கிராமப்புற கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் வேலு பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ஆவின் புதிய நிர்வாகிகள் பொறுபேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேரு, வேலு நாச்சியார், பாரதியாரை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலு அங்கு நடைபெற்ற ஆவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கிராமப்புற கோயில்களுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் பற்றி பட்டியலிட்டார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைச்சர் சேகர்பாபு ஆற்றி வரும் பணிகளை பெருமை பொங்க பேசினார் எ.வ.வேலு. அதனைத் தொடர்ந்து பேசிய அவர், அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆன்மிகம் பற்றி பேச்சு
மேலும், ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் எனவும் பேசினார். இதுமட்டுமல்லாமல் சேகர்பாபுவை அந்த துறைக்கு அமைச்சராக்கி இருப்பதன் மூலம் திருக்கோயில் பணிகள் செம்மையாக நடைபெற்று வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ஆவின் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆன்மிகம் பற்றி பேசி கவனம் ஈர்த்துள்ளார் இவர்.

திராவிட மாடல்
திராவிட மாடல் ஆட்சி என்றால் அதற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு இல்லை என நினைத்துவிடாதீர் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் கூட தமிழகம் முழுவதும் 2,000 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை நடத்த ரூ.40 கோடி வைப்புத் தொகைக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்சாக வரவேற்பு
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கள்ளக்குறிச்சி திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக உட்கட்சித் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ள புதிய நிர்வாகிகள் அமைச்சர் வேலுவுக்கு பொன்னாடை அணிவிக்க போட்டி போட்டு வரிசையில் நின்றனர்.