டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசு.. ஸ்டாலின் சீற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழக விவசாயிகள் மிகக் கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, காவிரிப்படுகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான். இதன் காரணமாக, 200க்கும் அதிகமான விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி மரணத்திலும் பலியாகியுள்ளனர்.

 டெல்லியில் போராட்டம்

டெல்லியில் போராட்டம்

தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக விவசாயிகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு உடடினயாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது உள்பட தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் போராட்டம் வெயிலிலும், குளிரிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 அரசுகள் மெத்தனம்

அரசுகள் மெத்தனம்

போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை தி.மு.க எம்.பி திருச்சி சிவா சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளார். போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

 தமிழகத்தில் வறட்சி

தமிழகத்தில் வறட்சி

காவிரி நீர் கிடைக்காமல், டெல்டா மாவட்ட விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன. பருவ மழை தவறியதால் தமிழகத்தின் பல பகுதிகளும் பாலைவனங்களைப் போலக் காட்சியளிக்கின்றன. விவசாயிகளின் கடன் சுமை அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழுத்திக் கொண்டிருக்கிறது.

 விவசாயக் கடன் தள்ளுபடி

விவசாயக் கடன் தள்ளுபடி

தி.மு.க ஆட்சியில் கருணாநிதி பதவியேற்பு மேடையிலேயே கையெழுத்திட்டு 7000 கோடி ரூபாய் கடன்தொகையைத் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.இன்றைய அ.தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. மேலும், தேசிய வங்கிகள் மூலம் பெற்றுள்ள கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயப் பெருங்குடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 பயிர்காப்பீட்டுத் தொகை

பயிர்காப்பீட்டுத் தொகை

அண்டை மாநிலங்களில் இத்தகைய கடன்களை அரசே ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தில் அதற்கான சிந்தனை கூட ஏற்படவில்லை. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடுகளோ போதுமான அளவில் இல்லை. பயிர்காப்பீட்டுக்கானப் பங்குத் தொகையைக்கூட அ.தி.மு.க அரசு உரிய அளவில் செலுத்தவில்லை.

 மத்திய அரசு துரோகம்

மத்திய அரசு துரோகம்

மாநில அரசு தமிழக விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து வரும் நிலையில், மத்திய அரசும் தமிழகத்தின் உரிமைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. தமிழக விவசாய நிலங்களைப் பாதிக்கும் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவற்றைக் கைவிடும் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

 விவசாயிகளின் வேதனை

விவசாயிகளின் வேதனை

இரு அரசுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தமிழகத்தில் போராடினால், செயலிழந்த அரசின் காதுகளில் விழாது என்பதால் டெல்லிக்கு தங்கள் சொந்த செலவில் சென்று போதிய உணவு உள்ளிட்ட வசதிகள் எதுவுமின்றி, குடிநீர்கூட கிடைக்காத நிலையில், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண் - பெண் என்ற பேதமின்றி பலரும் பங்கேற்று நடத்தும் போராட்டமும் அதில் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் இதயமுள்ள எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். 5 நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை நோக்கி மத்திய அரசின் பார்வை திரும்ப வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President MK stalin urged centre to take necessary steps on to fullfill farmers demands those who were sitting in a protest at Delhi, Since March 14.
Please Wait while comments are loading...