For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இன்னோவா" அன்பளிப்பு இல்லை, வலி நிவாரணம்.. வேற "டிபார்ட்மென்ட்".. நாஞ்சில் சம்பத்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்னோவா சம்பத்... என்னதான் சிறந்த பேச்சாளராக இருந்தாலும்.. நாஞ்சில் சம்பத்தை பலரும் இப்படித்தான் கூப்பிடுகிறார்கள். என்னதான் அட்டகாசமான பேச்சாளராக இருந்தாலும் கூட அப்படியே வைகோவைத் தூக்கிப் போட்டு விட்டு அதிமுகவில் போய் இணைந்து இன்னோவா காரின் சாவியை வாங்கிய காட்சிதான் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் மக்கள் கண்களுக்கு அந்த இன்னோவாதான் தெரிகிறது.. அதற்குப் பின்னால் இருக்கிற வலி யாருக்கும் தெரியாது என்று கூறிச் சிரிக்கிறார் சம்பத்.

பதவி பறிக்கப்பட்டாலும் கூட அவரது சிரிப்பு அவரிடமே இருக்கிறது.. அது பறிபோகவில்லை.. விகடனுக்கு சம்பத் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

அது நீக்கம் அல்ல

அது நீக்கம் அல்ல

என்னை கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்துவிடுவிக்க மட்டும்தான் செய்திருக்கிறார்கள். அது நீக்கம் கிடையாது. இன்னமும் கழகச் சொற்பொழிவாளராகவும் ஊடகத் தொடர்பாளராகவும் இருக்கிறேன். இது ஒரு சிறிய விஷயம். ஊடக வெளியில்தான் இதனைத் தேவையின்றி பெரிதுபடுத்துகிறார்கள். சில நாளேடுகள்தான் தங்கள் விற்பனைக்காக அதைத் திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றன.

வைகோவோடு ஏற்பட்ட மனக் கசப்பு

வைகோவோடு ஏற்பட்ட மனக் கசப்பு

வைகோவோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அரசியலில் ஈடுபடவே வேண்டாம் என்று இருந்தேன். தமிழின மீட்புக்காக, கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க என்னை அரசியலில் ஈடுபட வைத்தவர் அம்மா. இப்போது தலைமையைச் சந்தித்து அதற்கான விளக்கத்தையும் அளித்து இருக்கிறேன்.

வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஜெ.

வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஜெ.

அந்திமக் காலத்தில் இருந்த என்னை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் அம்மா. இதைவிட பல சஞ்சலங்களைச் சந்தித்து இருக்கிறேன். நாஞ்சில் சம்பத் எதற்கும் தயாரானவன். தேர்தல் களத்தில் பணியாற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.''

சாதாரண போன்தான் சார் உள்ளது

சாதாரண போன்தான் சார் உள்ளது

நான் சாதாரண 2,000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசிதான் வைத்திருக்கிறேன். இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ற மனிதனாக நான் மாறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும் எனக்கு இந்த (இன்னோவா) விஷயங்கள் காதுக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. பேசப்படுகிற இடத்தில் இருக்கிறேன் என்று எனக்கு மகிழ்ச்சிதான். விமர்சனங்கள் என் வாழ்வில் புதிது அல்ல.

இன்னோவாவுக்குப் பின் மறைந்துள்ள வலி

இன்னோவாவுக்குப் பின் மறைந்துள்ள வலி

இணையம் என்பது பொதுவெளி. அங்கு இப்படித்தான் பேசவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. ஆனால், இன்னோவா காருக்குப்பின் இருக்கும் வலியை, என்னைக் கிண்டல் அடிக்கும் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு சில சமயங்களில் தொடர்ந்து கூட்டங்கள் இருக்கும். புத்தகங்கள், உடைகள் என பெரிய மூட்டையைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் ஊர் ஊராக அலைந்து கொண்டிருப்பேன்.

ஒரு கார் கூட வாங்க முடியாமல் போன நிலை

ஒரு கார் கூட வாங்க முடியாமல் போன நிலை

இத்தனை ஆண்டுகால பொதுவாழ்வில், தமிழுக்கு உழைத்ததில் ஒரு கார்கூட வாங்கக் கூடிய நிலை ஏற்படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. என் மீது எத்தனை முறை தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்று தெரியுமா அவர்களுக்கு? பொழிச்சலூர், தாம்பரம், குளித்தலை, வத்தலகுண்டு போன்ற இடங்களில் நடந்த கொலைவெறித் தாக்குதல்களில் எத்தனை முறை காயம்பட்டிருக்கிறேன் தெரியுமா? ஆனால், என்னுடைய சிரமங்களை அறிந்த அம்மா, காரை ஓர் உதவியாக வழங்கினார். அது ஒன்றும் அன்பளிப்பு இல்லை; வலி நிவாரணம்.''

ஆவடி குமாருக்கு என்னால் பிரச்சினையா...

ஆவடி குமாருக்கு என்னால் பிரச்சினையா...

எனக்கு முன்பே கழகப் பேச்சாளராக இருந்தவர் ஆவடி குமார். அப்படி எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆவடி குமார், பண்ருட்டி ராமச்சந்திரன், சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், டாக்டர் சமரசம் ஆகியோரை ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அம்மா ஆணையிட்டு இருக்கிறார். சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறோம். நீங்கள் சொல்கிற கொடுமை எல்லாம் திமுகவில்தான் நடக்கிறது.

துரைமுருகன் எங்கே.. கோவை ராமநாதன் எங்கே..

துரைமுருகன் எங்கே.. கோவை ராமநாதன் எங்கே..

கோவை ராமநாதன், புள்ளிவிவரங்களைத் தெறிக்கவிடும் திருச்சி செல்வேந்திரன், ஆங்கிலப் புலமைப் பெற்ற விடுதலைவிரும்பி, நவரசப் பேச்சாளர் துரைமுருகன் ஆகியோர் எல்லாம் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அங்குதான் சுதந்திரமற்ற போக்கு நடக்கிறது. இங்கு சொற்பொழிவாளர்கள் மனநிறைவோடு இருக்க முதல்வர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

கல்லூரியிலேயே

கல்லூரியிலேயே

கல்லூரிப் பருவத்திலேயே அரசியலுக்குள் வந்தவன் நான். திராவிடப் பிடிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்ததால், இயற்கையாகவே திராவிடக் குருதி என்னுள் இருப்பதால்தான் இன்றுவரை திராவிட இயக்கங்களின் கொள்கையை மக்களின் மனதில் விதைத்து வருகிறேன். இத்தனை ஆண்டுகால அரசியலில் இருந்தும் எனக்கு தேர்தல் அரசியல் மீது ஈடுபாடு இல்லை. என் கண் முன்னே அரசியலில் நுழைந்து, தேர்தலில் வெற்றி பெற்று வளர்ந்தவர்கள் பலர். அதைக்கண்டு வெதும்ப, நான் அரசியல்வாதியும் கிடையாது. நான் ஒரு சொற்பொழிவாளன்.

பேசப் பிடிக்கும்

பேசப் பிடிக்கும்

மக்களின் மாற்றங்களுக்காக மக்களிடம் பேசுபவன். அதுதான் எனக்குப் பிடித்திருந்தது. மக்களிடம் அரசியல் பார்வையை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இன்னமும் அதற்கான பயணம் போய்க்கொண்டே இருக்கிறது. அதனால், என்றும் தேர்தல் அரசியல் ஆகாது எனக்கு. என்னுடைய சுதந்திர வாழ்வுக்கு நானே பூட்டுப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை.

தேர்தல் வியூகம்

தேர்தல் வியூகம்

எதிர்வரும் தேர்தல் என்பது அம்மாவின் முதல்வர் பதவியைப் புதுப்பித்துக்கொள்ளும் நேரமே. அதில் என்ன வியூகம் வைத்திருக்கிறார் என்பது எங்கள் தலைமை, எங்களுக்குத் தேவைப்படுகிற நேரத்தில் தெரிவிக்கும். வேண்டுமென்றால், சூழ்நிலையைப் பொறுத்து, கூட்டணி தேவைப்பட்டால் தெரிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். அவரின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம், தேர்தல் பணியாற்ற என்று கூறியுள்ளார் சம்பத்.

English summary
ADMK speaker Nanjil Sampath has opened his mind in an interview to Vikatan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X