For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: கல்லூரி வளாகத்தில் மோதல், அரிவாள் வெட்டு - கத்தியுடன் மாணவர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பச்சையப்பா கல்லூரியில் இருபிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கத்தி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பேருந்து வழித்தடங்களின் அடிப்படையில் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் மாணவர்களே சில தினங்களுக்கு முன்னர் தங்களுக்குள் 2 கோஷ்டிகளாக பிரிந்து பயங்கர மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி வளாகத்தில் மோதல்

பச்சையப்பா கல்லூரி வளாகத்தில் சில தினங்களுக்கு முன்னர் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

பேருந்து வழித்தட பிரச்சினை

பாரிமுனை பகுதியில் இருந்து பேருந்தில் வரும் மாணவர்களும், திருவேற்காடு பகுதியில் இருந்து வரும் மாணவர்களும் மோதிக் கொண்டதில் சதீஷ் என்ற மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரிவாள் வெட்டு

இது பற்றி தகவல் கிடைத்ததும் கீழ்பாக்கம் போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் மோதலை தடுத்தனர். காயம் அடைந்த மாணவர் சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக சில மாணவர்களை போலீசார் விசாரித்தனர்.

தேடுதல் வேட்டை

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.மோதல் நடைபெற்ற போது சந்தேகத்திற்குரிய வகையில் கல்லூரி வளாகத்தில் திரிந்த மாணவர்களை போலீசார் போட்டோ எடுத்து வைத்திருந்தினர்.

7 மாணவர்கள்

வெட்டுப்பட்ட மாணவர் சதீசிடம் இதனை காட்டி விசாரித்தனர். அப்போது அவர் சூழ்ந்து நின்று தாக்கிய 7 மாணவர்களை அடையாளம் காட்டினார். இதில் செங்குன்றம் புதூரை சேர்ந்த மோகன் (20) என்ற மாணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

கத்தி பறிமுதல்

இவரை தேடி போலீசார் வீட்டுக்கு சென்ற போது தப்பி ஓடினார். அவரை விரட்டிச் சென்று போலீசார் பிடித்தனர். மோகனிடமிருந்து கத்தி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொலை முயற்சி வழக்கு

பி.ஏ. 3-ம் ஆண்டு மாணவரான மோகன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஏழை மாணவர்கள்

மோகனின் குடும்பம் மிகவும் வறுமையானது. குடும்ப சூழ்நிலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோகனைப் போன்று பல மாணவர்கள் தவறான வழிகளில் செல்வதாக போலீசார் கூறினார்கள்.

6 பேர் தலைமறைவு

தலைமறைவாக இருக்கும் 6 மாணவர்களும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். கல்லூரியில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு பின்னர், இந்த 6 மாணவர்களும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர் சம்பவங்கள்

மோகனும் அவனது நண்பர்களும் திருவள்ளூர் பகுதியில் இருந்து வருபவர்கள். வெட்டுப்பட்ட சதீஷ் பூந்தமல்லியில் இருந்து வருபவர். பேருந்து வழித்தடத்தின் அடிப்படையிலேயே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துவந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த வாரம் பூந்தமல்லியில் வைத்து சதீசின் நண்பரான மாணவர் ஒருவரும் வெட்டப்பட்டார். ஆனால் அப்போது அவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

தொடர்கதையாகும் மோதல்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. பேருந்து வழித்தடங்களின் அடிப்படையில், கோஷ்டிகளாக பிரிந்து கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதும், பொதுமக்கள் முன்னிலையில் ஆயுதங்களுடன் தாக்கி கொள்வதும், தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

ஆயுதங்கள் பறிமுதல்

குறிப்பாக மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொண்டனர். மாநில கல்லூரி வளாகத்தில் மரப்பொந்துகளில் இருந்து பயமுறுத்தும் பெரிய கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் நடவடிக்கை

மாணவர்களின் மோதலைக் கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8 மாதத்தில் 31 வழக்குகள்

இந்த ஆண்டு இதுவரை 8 மாதத்தில் 89 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மீது 11 வழக்குகளும், மாநில கல்லூரி மாணவர்கள் மீது 8 வழக்குகளும், நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது 5 வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

45 மாணவர்கள் சஸ்பெண்ட்

கைதானவர்களில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 31 பேரும், தியாகராயா கல்லூரி மாணவர்கள் 8 பேரும் சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்கள்.

162 பேர் சிறையில்

இதே போல கடந்த ஆண்டு மட்டும் மோதலில் ஈடுபட்ட 162 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடுமையான நடவடிக்கை

போலீசார் இதுபோன்ற கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மாணவர்களின் மோதல் சம்பவங்கள் மட்டும் குறையாமலேயே உள்ளது. எனவே, மாணவர்களின் மோதலை தடுக்க, இதைவிட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாமா? என போலீசார் யோசித்து வருகின்றனர்.

English summary
A college student was injured when a group of students from Pachaiyappa’s College of Arts and Science, carrying deadly weapons, stormed into an student house Thursday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X