For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்வளவு நடித்தாலும் கருணாநிதி உத்தமர் ஆக முடியாது- ஓ.பன்னீர் செல்வத்தின் 2வது தாக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைக் கண்டித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2வது காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வம், கருணாநிதிக்கு எதிராக, வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக தனது முதல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது கிரானைட் முறைகேடு விவகார்ததில் சகாயம் நியமனம் குறித்து இன்னொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுவும் முதல் அறிக்கையைப் போல கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் தரும் அறிக்கையாகும்.

பன்னீர் செல்வத்தின் அறிக்கையிலிருந்து:

தான் திருடி பிறரை நம்பான்!

தான் திருடி பிறரை நம்பான்!

'சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரணையில் தாமதம்!' என்று தலைப்பிட்டு, "உடனடியாக சகாயம், ஐ.ஏ.எஸ். விசாரணைக் குழுவினை செயல்படுத்துவதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பதோடு, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கை விட்டு மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்" என கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது, 'தான் திருடி,
பிறரை நம்பான்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் அடிக்கும் பேர்வழி

கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் அடிக்கும் பேர்வழி

கூட்ட நெரிசலில் 'பிக்பாக்கெட் அடிக்கும் பேர்வழி ‘திருடன், திருடன்' என்று கத்திக் கொண்டு கூட்டத்தில் ஓடி மறைவதைப் போல' இந்த அறிக்கை அமைந்துள்ளது.

கிரானைட் முறைகேடு யாருடைய ஆட்சியில் நடந்தது

கிரானைட் முறைகேடு யாருடைய ஆட்சியில் நடந்தது

கிரானைட் முறைகேடு யாருடைய ஆட்சிக் காலத்தில் நடந்தது? இந்த முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? இந்த முறைகேட்டின் மூலம் பலனடைந்தவர்கள் யார்? இந்த முறைகேடு குறித்து முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை எல்லாம் முற்றிலும் மறைத்து, ஒன்றுமே தெரியாதது போல் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது 'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

எப்படியெல்லாம் மூடி மறைத்தார் கருணாநிதி

எப்படியெல்லாம் மூடி மறைத்தார் கருணாநிதி

இந்தத் தருணத்தில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கருணாநிதி இந்த கிரானைட் முறைகேட்டை எவ்வாறு மூடி மறைத்தார் என்பது குறித்தும், ஜெயலலிதா கிரானைட் முறைகேட்டினை வெட்ட வெளிச்சமாக்கவும், தவறு செய்தவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறித்தும் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

கர்நாடகத்தை மிஞ்சும் வகையில் மதுரையில்

கர்நாடகத்தை மிஞ்சும் வகையில் மதுரையில்

'கர்நாடக மாநிலத்தை மிஞ்சும் வகையில் மதுரை அருகே மூன்று கிராமங்களில் மட்டும் 7000 கோடி ரூபாய்க்கு மேல் சுரங்க ஊழல்' என்ற தலைப்பு உள்பட பல்வேறு தலைப்புகளில் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் ஒரு காலை நாளிதழில் செய்திகள் வெளி வர ஆரம்பித்தவுடன் இந்த ஊழல் முறைகேட்டை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க முன் வந்தாரா கருணாநிதி என்றால் நிச்சயம் இல்லை.

பத்திரிகை ஆசிரியர் மீது வழக்குப் போட்டவர் கருணாநிதி

பத்திரிகை ஆசிரியர் மீது வழக்குப் போட்டவர் கருணாநிதி

மாறாக, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர், அவரது மகன் மற்றும் அவரது நண்பர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி. கருணாநிதியின் அராஜகச் செயலைக் கண்டித்து ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும், கிரானைட் முறைகேட்டினை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல், அதை மூடிமறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் தான் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் எடுக்கப்பட்டது.

கோப்பையே பார்க்காமல் திருப்பிய அனுப்பிய கருணாநிதி

கோப்பையே பார்க்காமல் திருப்பிய அனுப்பிய கருணாநிதி

தமிழ் நாளிதழில் இந்தச் செய்தி வெளியான அன்றே தமிழக அரசின் தொழில் துறையால் முதலமைச்சருக்கு ஒரு சுற்றோட்டக் குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'புவியியல் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த் துறை, நிலம் மற்றும் நில அளவைத் துறை மற்றும் பொதுப் பணித் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் மூலம் குழு அமைக்கப்பட்டு கூட்டாக ஆய்வு செய்தபிறகு அரசிற்கு இறுதி அறிக்கை அனுப்புவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் 6.8.2010 அன்று கையெழுத்திட்டு உள்ளார். அந்தக் கோப்பு முதலமைச்சர் பார்வையிடாமலேயே முதலமைச்சர் அலுவலகத்தால் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அதன் பின்னர் எந்தவித ஆய்வும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரை எடுக்கப்படவில்லை.

கருணாநிதி பேரனைக் காப்பாற்ற அறிக்கை

கருணாநிதி பேரனைக் காப்பாற்ற அறிக்கை

இந்தப் பத்திரிகைச் செய்தி குறித்து 30.7.2010 அன்றே, இரண்டே நாட்களில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் அரசுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், '28.7.2010 நாளிட்ட செய்தித்தாளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் காணவில்லை என கற்பனையாக வெளியிட்ட செய்திகள் முற்றிலும் தவறானது என்றும், அரசுக்கு கிரானைட் குவாரிகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப் பெறும் நிலையிலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வரும் நிலையிலும், செய்தித்தாளில் பொய்யான செய்திகள் வெளியிட்டு தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் மேற்படி செய்தித்தாளில் வரும் செய்திகளை நிராகரிக்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை உண்மையிலேயே விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட அறிக்கையா அல்லது கருணாநிதியின் பேரனை காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்ட அறிக்கையா என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.

ரூ. 16,000 கோடி வருவாய் இழப்பு

ரூ. 16,000 கோடி வருவாய் இழப்பு

ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கிரானைட் முறைகேடு குறித்து விரிவான அறிக்கை பெறப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவிற்கிணங்க, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாகவும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் மூலமாகவும் 3.8.2011, 4.8.2011, 15.9.2011, 22.9.2011, 13.1.2012, 27.1.2012, 8.2.2012, 19.4.2012 மற்றும் 11.5.2012 நாளிட்ட அரசு கடிதங்கள் வாயிலாக தொடர்ச்சியாக கேட்டுக் கொள்ளப்பட்டார். இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சியர் 19.5.2012 அன்று ஓர் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட்ஸ், சிந்து கிரானைட்ஸ் ஆகிய மூன்று குவாரிகளை மட்டும் மாதிரிக்குத் தெரிவு செய்து ஆய்வு செய்ததாகவும், இந்த கிரானைட் குவாரிகளில் ஏற்பட்ட வருவாய் இழப்பீடு மற்றும் கள்ளத்தனமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களுக்கான சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பேரன் துரை தயாநிதி

கருணாநிதி பேரன் துரை தயாநிதி

இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி, வி.எஸ்.சூடாமணி மற்றும் அவரது மகன் எஸ். நாகராஜன் ஆகியோர் ஆவர். கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த சகாயம், ஐ.ஏ.எஸ்., தனது அறிக்கையில், '1.5.2012 அன்று வருவாய் கோட்டாட்சியர், மதுரை துணை ஆட்சியர் (பயிற்சி), வட்டாட்சியர், மேலூர் மற்றும் கனிமவளத் துறை உதவி புவியியலர் ஆகியோருடன் கீழவளவில் இருந்த ஒலிம்பஸ் நிறுவனத்தின் கிரானைட் குவாரியையும், கீழையூர் கண்மாயையும் தணிக்கை செய்தேன். ஒலிம்பஸ் நிறுவனம் சட்டத்திற்கு விரோதமாக கிரானைட் எடுத்திருந்ததை உறுதி செய்தேன்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடே நடைபெறவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதிலிருந்தே கிரானைட் முறைகேட்டிற்கு எந்த ஆட்சி துணை போனது என்பதை எளிதில் தெரியது கொள்ளலாம்.

முழுமையான ஆய்வு நடத்திய அதிமுக அரசு

முழுமையான ஆய்வு நடத்திய அதிமுக அரசு

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள 175 கிரானைட் குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பணிக்கப்பட்டதை அடுத்து, 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மொத்தமுள்ள 175 கிரானைட் குவாரிகளில் தனியாருக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்ட 84 கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமுள்ள 84 தனியார் குவாரிகளில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரியின் உரிமம் ஏற்கெனவே இந்த அரசால் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு இன்னமும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 77 குவாரிகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மீதமுள்ள 6 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் கீழ் உள்ளன. இந்தத் தற்காலிக ரத்து ஆணைகளுக்கு எதிராக குவாரி உரிமையாளர்கள் 57 நீதிப் பேராணை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தடையாணைகளை பெற்றனர். இந்த வழக்குகள் அனைத்தும் தொகுப்பு வழக்குகளாக மாற்றப்பட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளன.

வழக்குகளைப் பதிவு செய்தது அதிமுக அரசு

வழக்குகளைப் பதிவு செய்தது அதிமுக அரசு

83 தனியார் கிரானைட் நிறுவனங்களால் முறைகேடாக வெட்டியெடுத்துச் செல்லப்பட்ட கிரானைட் கற்களின் சந்தை மதிப்பை வசூல் செய்யும் வகையில், 13,748 கோடி ரூபாய் செலுத்துமாறு மதுரை மாவட்ட ஆட்சியரால் 83 நிறுவனங்களுக்கும் குறிப்பாணைகள் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுப்பப்பட்டன. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 62 நீதிப் பேராணை மனுக்கள் குவாரி உரிமையாளர்களால் தாக்கல் செய்யப்பட்டு தடையாணைகள் பெறப்பட்டன. இவற்றில் வாதங்கள் முடிவுற்று 57 வழக்குகளை உயர் நீதிமன்றம் 2.9.2014 அன்று தள்ளுபடி செய்தது. மீதமுள்ள 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 90 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. PRP நிறுவனத்தின் மீது மட்டும் 50 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற மதுரை கிளை 24 முதல் தகவல் அறிக்கைகளுக்கு தடையாணை பிறப்பித்துள்ளது. இதனை நீக்கக் கோரும் மனு தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

அரசு புறம்போக்கு நிலங்களின் 121 புல எண்களில் அனுமதி பெறாமல் இருப்பில் உள்ள மொத்தம் 24,751 கிரானைட் கற்களை கையகப்படுத்த 21.4.2013 மற்றும் 27.2.2014 ஆகிய தினங்களில் மதுரை மாவட்ட ஆட்சியரால் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட அறிவிக்கைகளை எதிர்த்து ஆறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்களின் மீதான விசாரணை 8.8.2014 அன்று முடிவுற்று, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதி பெறாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்துண்டங்களை கையகப்படுத்தி ஏலம் விடும் முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தடைகளைத் தகர்த்தெறிய நடவடிக்கை எடுத்தவர் ஜெ.

தடைகளைத் தகர்த்தெறிய நடவடிக்கை எடுத்தவர் ஜெ.

இது தவிர, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய நிறுவனங்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து சாதகமான தீர்ப்பினைப் பெற்றனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. இதனை எதிர்த்து நிறுவனங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அதனை எதிர்த்து வாதாடி அரசுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. கிரானைட் முறைகேட்டினை சட்டப்பூர்வமாக தகர்த்தெறிய தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தவர் ஜெயலலிதா.

இதிலிருந்தே தெரியவில்லையா

இதிலிருந்தே தெரியவில்லையா

இந்த விவரங்களில் இருந்தே, உரிமங்கள் ரத்து, அனுமதி பெறாமல் இருப்பில் உள்ள 24,751 கிரானைட் கற்களை கையகப்படுத்தி ஏலம் விடுதல், முறைகேடாக வெட்டியெடுத்துச் செல்லப்பட்ட கிரானைட் கற்களின் சந்தை மதிப்பை வசூல் செய்தல், குற்ற வழக்கு தாக்கல் செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்தது என்பது தெளிவாகிறது. எனவே தான், உயர் நீதிமன்றமும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பற்றி எவ்வித அபிப்ராயத்தையும் தெரிவிக்கவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியரின் ஆய்வு அறிக்கை சரிதானா என்பதை ஆய்ந்து அறிக்கை தாக்கல் செய்யத்தான் சகாயம், ஐ.ஏ.எஸ்.ஸை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கிரானைட் முறைகேடு குறித்து அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பல மாதம் ஓடி ஒளிந்த பேரன்

பல மாதம் ஓடி ஒளிந்த பேரன்

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட தனது பேரன் பல மாதங்கள் ஓடி ஒளிந்து கொண்டபோது வாய் திறக்காத கருணாநிதிக்கு, பேரனை கைது செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தபோது பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சனம் செய்த கருணாநிதிக்கு, கிரானைட் முறைகேட்டில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்ற ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசுக்கு அறிவுரை கூறும் அருகதை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகாயம் அறிக்கை வெளியாகும் வரை

சகாயம் அறிக்கை வெளியாகும் வரை

கருணாநிதி சுட்டிக்காட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் 28.10.2014 நாளைய தீர்ப்பில், '"It is not as if we were unaware of the contents of the counter affidavit, but the fact remains that the scam remained undetected till report was submitted by Mr. U. Sagayam, I.A.S. If the Government acted in an efficient manner, such a situation ought not to have come to pass. This is not some minor issue to remain undetected. ( It is only when these irregularities were brought to notice by an officer with the State Government, that action was sought to be taken. ( It (Executive) failed to perform qua the irregularities that arose right under its nose over a long period of time' என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது, சகாயத்தால், அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது என்பதுதான் உண்மை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

ஜெயலலிதாதான் அறிக்கை கேட்டார்

ஜெயலலிதாதான் அறிக்கை கேட்டார்

ஜெயலலிதா அரசு தொடர்ந்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்தால் 19.5.2012 அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தான், மதுரை மாவட்டத்தில் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முழு முதற் காரணமாக விளங்கியவர் ஜெயலலிதா தான். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் முறைகேட்டை மூடிமறைக்கும் முயற்சி தான் நடைபெற்றது என்பது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

மடியில் கனமிருந்தால்தான் பயம்

மடியில் கனமிருந்தால்தான் பயம்

'மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம்' என்று ஒரு பழமொழி உண்டு. ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசைப் பொறுத்தவரையில், மடியில் கனமில்லை, இந்த கிரானைட் முறைகேட்டை கண்டு அஞ்சவும் தேவையில்லை.

வெட்டவெளிச்சமாக்கியவர் ஜெயலலிதாதான்

வெட்டவெளிச்சமாக்கியவர் ஜெயலலிதாதான்

கிரானைட் முறைகேட்டை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து விசாரணைகளும் முடிந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், புதிதாக ஒருவர் விசாரணை செய்தால் ஏற்கெனவே எடுத்த நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படும் என்பதன் அடிப்படையில் தான் சகாயத்தின் நியமனம் அவசியம் இல்லை என்று தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ததே தவிர, வேறு எந்தவித அச்சமும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்பதையும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் மூடி மறைக்கப்பட்ட கிரானைட் முறைகேட்டினை வெட்ட வெளிச்சமாக்கியதே ஜெயலலிதாவின் அரசு தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி உத்தமர் ஆக முடியாது

கருணாநிதி உத்தமர் ஆக முடியாது

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசுக்கு அறிவுரை கூறி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார். 'கங்கையில் மூழ்கினாலும் காகம் அன்னம் ஆக முடியாது' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, எவ்வளவு நடித்தாலும் கருணாநிதி உத்தமர் ஆக முடியாது. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியதுவிடும்' என்பதற்கேற்ப விரைவில் கருணாநிதியின் 'குட்டு' வெளிப்பட்டு விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

English summary
CM O Pannerselvam has given a fitting reply to DMK chief Karunanidhi on Sagayam probe issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X