For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது - பெ. மணியரசன் குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை எனவும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழு, இன்று (19.09.2016), 21.09.2016 முதல் ஒரு நாளைக்கு ஒரு நொடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டுமென்று முடிவு வழங்கியுள்ளது. இந்த மேற்பார்வைக் குழு கர்நாடகத்திற்கு அஞ்சி அம்மாநிலத்தின் மனம் நோகாமல் வழங்கிய தீர்ப்பு இது! 3,000 கன அடி தண்ணீர் சம்பா சாகுபடிக்கு சிறிதளவுகூட போதாது. இது ஒருதலைச்சார்பான தீர்ப்பு!

P. Maniyarasan statement issues about Cauvery Supervisory Board

ஏனெனில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறைக் காலப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில், இப்பொழுது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகித நீரை கணக்கிட்டு அந்த அடிப்படையில், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மேற்பார்வைக் குழுக் கூறியிருந்தால், அது சட்டப்படியான ஒரு முடிவாக இருக்கும். அவ்வாறான கணக்கை மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை!

காவிரி மேற்பார்வைக் குழு தன் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி, அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு, பற்றாக்குறைப் பகிர்வு விகிதப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருக்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழு தனது கடமையில் தவறியிருக்கிறது!

தமிழ்நாடு அரசு உருப்படியாக வாதம் செய்கிறதா என்றால், அதுவும் இல்லை!

கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தண்ணீர் 64 டி.எம்.சி. என்றும், அதைத் திறந்துவிட ஆணையிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், தமிழ்நாடு அரசு வாதிட்டிருந்தால் அது சரியான வாதமல்ல!

தற்போது, கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் பற்றாக்குறைப் பகிர்வுத் திட்டப்படி எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி வாதிட்டு, அதற்கு வலு சேர்க்கும் வகையில் கர்நாடகம் தர வேண்டிய பாக்கித் தண்ணீரின் அளவை கூறியிருந்தால், தமிழக அரசின் வாதம் வலுவாக இருந்திருக்கும்.

பொதுவாகவே கடந்த ஆகத்து 22-ஆம் நாள் முதல் இன்றுவரை, தமிழ்நாடு அரசு காவிரி வழக்கில் கடைபிடித்திருக்கும் வாத முறைகள் முன்னுக்குப்பின் முரண்பட்டும் முதன்மைப்படுத்த வேண்டிய தர்க்கத்தை முதன்மைப்படுத்தாமல் பின்னுக்குத் தள்ளியும் வந்திருப்பது தெரிகிறது. இவ்வழக்கு வாதங்கள் இராணுவ இரகசியங்கள் அல்ல. இவற்றை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

கர்நாடகப் பொதுப்பணித்துறை தனது இணையதளத்தில், அம்மாநிலத்திலுள்ள காவிரி அணை நான்கிலும் 19.09.2016 அன்று 26.17 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகக் குறைத்துக் காட்டியுள்ளது. இவ்வழக்கு 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, 51 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பு கூறியது. அதன்பிறகு, 12.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் 41 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியது. இப்போது, 26.17 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் தவறானத் தகவல்கள்! அவர்களின் பொய்க்கணக்குப்படியே பார்த்தால்கூட, கடந்த 14 நாட்களில் 25 டி.எம்.சி. தண்ணீர் எங்கே போனது?

நான்கு அணைகளிலும் உள்ள நீர் மட்டுமின்றி, 437 ஏரிகளை நீர்த் தேக்கங்களாக விரிவுபடுத்தி அவற்றில் சேமித்து வைத்துள்ள தண்ணீரையும் கர்நாடகத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு தனது பொதுப்பணித்துறை அதிகாரிகளை கர்நாடகத்திற்கு அனுப்பி அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை கணக்கெடுத்து அதை உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் தாக்கல் செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது.

ஆனால், தமிழ்நாடு அரசு உழவர்களின் ஓலக்குரலை கண்டு கொள்ளவே இல்லை! சரியான முன் தயாரிப்பு இல்லாமல், இறுதித் தீர்ப்பில் மாத வாரியாக வழங்கப்பட்ட நீரின் அளவை மட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டு, இவ்வளவு பாக்கி - அவ்வளவு பாக்கி என்று சத்தற்ற வாதம் செய்து வருகின்றது.

நாளை (20.09.2016) உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வரவுள்ளது. அதில், சரியான தர்க்கத்தை முன்வைத்து வாதாடி தமிழ்நாட்டு உரிமையை நிலை நாட்ட - சம்பாவிற்கு உரிய தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு முழுமூச்சாக முன் தயாரிப்புப் பணியில் இறங்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மணியரசன் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
coordinator of the Cauvery Rights Retrieval Committee P. Maniyarasan have issues statement about about Cauvery Supervisory Board
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X