• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியரென் தலைவன்....தியானம் கலையுங்கள்

By Mathi
|

-ஆரூர் தமிழ்நாடன்

மனம் பின்னோக்கி விரைகிறது. ஆண்டுகளின் நெரிசலில் விறுவிறுப்பாய் நுழைந்து, 1924-ஆம் ஆண்டை இனம் கண்டுப் பூரிக்கிறது.

அந்த ஆண்டின் கதவு திறந்து மாதங்களின் ஊடே வகிடெடுத்துச் சென்று, ஜூன் 3 ஆம் நாளை பூரிப்பாய்த் தரிசித்து மனம், மனம் உருகுகிறது. அந்த வைகறை நாளைப் புத்தி புல்லரிப்போடு இருகை கூப்பி இதமாய் வணங்கி நெகிழ்கிறது.

Poet Arur TamilNaadans Article on Karunanidhi

95 ஆண்டுகளுக்கு முன்பான அந்த நாள், கருணை காட்டத் தவறியிருந்தால், தமிழகம் கருணாநிதி எனும் அந்த மாதலைவனைக் கண்டிருக்காது. அந்த வைகறைத் தலைவனின் வெளிச்சத்தைத் தரிசிக்காமல், தமிழகம் இன்னும் இருளடைந்த மண்ணாகவே இருந்திருக்கும்.

திருக்குவளை என்னும் குக்கிராமத்தில் பிறந்து, திருவாரூர்த் திருநகரில் வளர்ந்து, சேலம், கோவை என திரைப் பணிகளுக்காக மெல்ல மெல்ல நகர்ந்து, ஈரோட்டுப் பாசறையில் நுழைந்து, காஞ்சிபுரத்தின் அறிவுவாசலில் அமர்ந்து, தமிழகத்தின் அரசியல் அரியணையில் அசைக்க முடியாத தலைவனாக வீற்றிருந்தபடி, தனது 75 ஆண்டுகாலப் பொதுவாழ்வைக் கடந்திருக்கிறார் முத்தமிழறிஞர் கருணாநிதி.

இவரைப் போன்ற ஒரு சிகரத் தலைவரை, எட்டுத் திசைகளையும் சலித்தாலும் எட்டிப்பிடிக்க முடியாது.

அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, திராவிட இயக்கப் பிரச்சாரத் திருப்பணியில் தன்னைக் கரைத்தபடியே, தி.மு.க.வின் தலைவராக அமர்ந்தவர் கருணாநிதி. அவரது அரசியல் சாதனைகளையும் ஆட்சியியல் சாதனைகளையும் பட்டியலிடவேண்டுமானால், பல ஆண்டுகளை பரவசமாய்ச் செலவிட நேரும்.

இந்தி எதிர்ப்புக் களத்தில் களமாடிய கருணாநிதியின் வீறுமிகும் வேகம்தான், இன்றும் தமிழ் மொழிக்கு அரணாகத் திகழ்கிறது. கல்லக்குடியும், பாளையங்கோட்டையும் கருணாநிதியின் வரலாற்றுத் துறைமுகங்களாய், இன்றும் நினைவலைகளை வீசி நெஞ்சம் நனைக்கிறது.

57ல் முதல் முதலாகக் குளித்தலையில் தேர்தல் களம்கண்ட கருணாநிதி, மொத்தம் 13 முறை, தேர்தலைச் சந்தித்திருக்கிறார். அத்தனை முறையும் வெற்றிபெற்று, இப்படியோர் தலைவனா? என வெற்றி தேவதையின் தோள் சாய்ந்து வரலாற்றையே வியக்கவைத்திருக்கிறார். ஏறத்தாழ 60 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக, தனது பொழுதுகளை மதிப்பாய்ச் செலவிட்ட மா தலைவர் அவர்.

அவர் ஆட்சியில் இருந்தபோது, கண்ணொளித் திட்டம், கை ரிக்‌ஷா ஒழிப்புத் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்று ஆரம்பித்து 108 ஆம்புலன்ஸ் திட்டம் வரை வியத்தகு மக்கள் நலத்திட்டங்கள் அணிவகுத்தன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியதோடு, தமிழுக்குச் செந்தமிழ் மகுடத்தையும் சூட்டியவர் கருணாநிதி.

பூம்புகார், வள்ளுவர்க் கோட்டம், கட்ட பொம்மன் கோட்டை, குமரி முனையில் வானளாவிய வள்ளுவர் சிலை என்றெல்லாம் கலை நுணுக்கப் பண்பாட்டுச் சின்னங்களை நிர்மாணித்த வரலாற்று நாயகன், நம் ஆரூர் நாயகனே.

20 வயதிலேயே ஜுபிடர்ஸ் தியேட்டர் நிறுவனத்தில் பேனா பிடித்து, ராஜகுமாரி, அபிமன்யூ. மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் தன் விரலின் வீரியத்தைத் திரைமறைவில் காட்டி, பின்னர் பராசக்தி, மந்திரிகுமாரி என 40 படங்கள் வரை வீறுமிகும் தமிழால் வசன வித்தகம் காட்டி, தமிழர்களின் நாவில் தமிழன்னையை நடனமாட வைத்த தனிபெரும் கலைஞனும் அவர்தான்.

திரைப்பாடல்கள் மூலமும் தமிழுக்குத் திருவிழா நடத்திய கருணாநிதி, குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா, ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் என எண்ணற்ற நூல்களாலும் அன்னைத் தமிழழுக்கு ஆரங்கள் சூட்டிய அறிவாளர் ஆவார். அறிஞர்களையும் புலவர்களையும் கவிஞர்களையும் போற்றிய குடிமக்களின் கோன் அவர். கவியரங்குகளை மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்த கவிஞர்களின் காதல் நாயகன் அவர்.

மாநில உரிமைகளைக் காக்க மத்திய அரசோடு அவர் நடத்திய போராட்டங்கள், அரிசியல்வாதிகள் கற்கவேண்டிய அரியபாடங்களாகும். சனாதனவாதிகளோடும், சர்வாதிகாரிகளோடும் சளைக்காது போரிட்ட சரித்திர நாயகரும் கலைஞரே.

தன் நாவையும் பேனாவையும் ஆயுதங்களாக ஆக்கிக்கொண்டு களமாடிய அந்த வரலாற்று நாயகர், இன்று, பேசமுடியாமலும் எழுத முடியாமலும் முதுமையெனும் வனாந்தரத்தில் தியானம் மேற்கொண்டிருக்கிறார். அவரது மெளனத்தையும், வெற்றிடத்தையும் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கிறது தமிழகம்.

அய்யா தியானம் கலையுங்கள் என இதயம் இறைஞ்சுகிறது.

'இம்மை மாறி மறுமையாயினும்

நீயாகியரென் தலைவனை

யாமாகியர் நின்

நெஞ்சு நேர் உடன்பிறப்புகளே'-என கருணாநிதியை எண்ணி இதயம் நெகிழ்ந்துகரைகிறது.

கருணாநிதி நீடு வாழ்க!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here the Poet Arur TamilNaadan's Article on DMK President Karunanidhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more