For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா? மழையால் தப்பிக்குமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் குடிநீருக்காக மக்கள் குடத்தை எடுத்துக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கப்போனவர்களுக்கு காலிகுடத்தோடுதான் வரவேற்பு கிடைத்தது. சிலர் விரட்டியும் அடிக்கப்பட்டனர்.

தேர்தல் முடிந்த உடன் தலைமைச்செயலகத்தில் கடந்த 28ம் தேதி தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் திடீர் கூட்டம் நடைபெற்றது. தலையாய பிரச்சினையான தண்ணீர்தான் முக்கிய விவாதப் பொருள்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் இந்த அவசரக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

''இன்னும் சில வாரங்கள் மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் அதிகமாக குடிநீர் பிரச்னையை சந்திக்கப்போவது உங்கள் ஆறு மாவட்டங்கள்தான்! அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதற்காகவே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறினார் தலைமைச் செயலர்.

Problem of Water scarcity in Tamilnadu

திருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கூவம் ஆறு, ஆரணி ஆறு ஆகியவைதான் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள். இவை பராமரிக்கப் படாததுதான் மாவட்டத்தின் தண்ணீர் தட்டுப்பாடுக்கு முக்கியக் காரணம். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வருடத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் பெற ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.

ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரைக் கொண்டுவர சரியான நடவடிக்கைகள் எடுக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். சேதமான மதகுகள் சீரமைக்கப்படாததாலும், தண்ணீர் வரும் வழியிலேயே ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சிவிடுவதாலும் தண்ணீர் முழுமையாகக் கிடைப்பது இல்லை. வருடத்துக்கு இரண்டு முறை என ஆந்திரா கொடுக்கும் 12 டி.எம்.சி. தண்ணீரில் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் உள்ளது.

பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி நீர் இருக்க வேண்டும். ஆனால், இன்று ஆயிரம் கன அடிகூட இல்லை.

காஞ்சிபுரம் வழியாக பாலாற்றில் இருந்து ஆற்று நீரை கொண்டுவந்து செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து இருக்கின்றார்கள். அந்த ஏரியும் சரியான பராமரிப்பு இன்றி இருக்கிறது.

ஆரணி ஆற்றில் மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழம் மணல் அள்ளப்பட்டுவிட்டதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க பரவலாக வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 10 நாளுக்கு ஒருமுறை நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் தவம் இருக்கின்றனர்.

குடிநீராக போராடும் வேலூர் மக்கள்

வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 163 போராட்டங்கள் நடந்து உள்ளன. 40 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறதாம்.

வறண்ட அணைகள்

வேலூர் மாவட்டத்தில் இப்போது சாதாரணமாக 800 அடிக்கு மேல் போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும் என்பது நிலை. ஒருகாலத்தில் வேலூர் மாவட்டத்தின் தாகம் போக்கிய பாலாறு இன்று மணல் கொள்ளையர்களால் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஐந்து அணைகளும் வறண்டுவிட்டன.

மாதம் ஒருமுறை குடிநீர்

கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது. குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை, சில பகுதிகளில் மாதம் ஒருமுறை என்ற அவலநிலைக்கு மாறியுள்ளது.

அழிவுக்கு காரணமான தொழிற்சாலைகள்

ஆறு தன் தன்மையை இழக்க இன்னொரு காரணம், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். ஆற்றுநீரை உறிஞ்சுவதோடு, கழிவுநீரை சுத்திகரிப்பும் செய்யாமல் ஆற்றில் விடுகின்றனர்'' என்று வருத்தத்துடன் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கலங்கும் கடலூர் மக்கள்

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரி மழையளவு 1,319 மில்லி மீட்டர். தமிழகத்தின் பிரதான வடிகால் மாவட்டம் கடலூர். கடலூருக்கு மேற்கே அமைந்துள்ள ஏழு மாவட்டங்களின் மழைநீர், கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணை, மணிமுத்தாறு ஆகிய ஐந்து ஆறுகள் வழியாகக் கடலில் கலக்கிறது.

குடம் ஏந்தும் மக்கள்

வானம் பொய்த்துப்போனதால் தண்ணீருக்காக விவசாயிகள் மட்டுமல்லாமல், குடிநீருக்காகக் குடங்களை ஏந்தியபடி மக்கள் தினமும் மறியலில் குதிக்கும் நிலை ஏற்பட்டது.

அதளபாதாளத்தில் நீர்

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 300 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், 800 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை.

மேட்டூர் அணை

சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை திறந்துவிட்டால்தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும் குடிப்பதற்கும் தண்ணீர். ஆனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே உள்ளது.

கால்நடைகள் இறந்த பரிதாபம்

வானம் பொய்த்துப்போக, கர்நாடகா கைவிரிக்க... காய்ந்து கிடக்கிறது இரும்பு நகரம். சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, ஆத்தூர் என்று பல இடங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்த கொடுமையெல்லாம் அரங்கேறியிருக்கிறது.

சேலத்திற்கு குடிநீர்

சேலம் மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது மேட்டூர் அணைதான். அங்கேயும் இப்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. 15 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வந்தாலே மக்கள் சந்தோஷப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. பல இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபடுவது இங்கே அன்றாடக் காட்சியாகிவிட்டது.

வெளியேறும் விலங்குகள்

ஏற்காடு மலைப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டு எருமை போன்ற விலங்கினங்கள் உள்ளன. மலைகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வனங்களை விட்டு அவை வெளியே வரத் தொடங்கிவிட்டன. மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களுக்குப் பலியாகும் கொடூரமும் நடந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால், இன்னும் சில வாரங்களில் சேலத்தில் குடிநீர் பஞ்சம் விவரிக்க முடியாத துன்பங்களை உண்டாக்கும்.

தண்ணீர் தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் பஞ்சம். குப்பநத்தம் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா அணை என பல அணைகள் இருந்தாலும்... இப்போது தட்டுத் தடுமாறி 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

பாலைவனமாகும் அபாயம்

கிணறு, போர்வெல் மூலம் பாசனம் செய்யப்படும் பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,965 ஏரிகளும் உள்ளன. ஆனாலும், இங்கே மழை அளவு குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் திருவண்ணாமலை மாவட்டம் பாலைவனமாக மாறிடும் என்பது விவசாயிகளின் கவலை.

கான்கிரீட் காடுகள்

ஒருகாலத்தில் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், இப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களின் பார்வையில் சிக்கி, கான்கிரீட் காடுகளாகிவிட்டது. அதனால், மழையும் பொய்த்துவிட்டது.

1000 அடிக்கு கீழே

சாதாரணமாக 100 அடி போர் போட்டால் தண்ணீர் வரும் பாலாறு படுகைப் பகுதியில் இப்போது 1,000 அடி போட்டாலும் புகைதான் வருகிறது.

மணல் கொள்ளை போன பாலாறு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அடிப்படை நீர் ஆதாரம் பாலாறு. பாலாற்றில் உள்ள மணல்தான் நீரை தேக்கிவைத்து கொடுக்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால், அதில் இருந்து ஏரிகளுக்கு நீர் போகும். இப்போது பாலாற்றில் வெள்ளமும் வருவது இல்லை. நீரைத் தேக்கிவைக்க அங்கே மணலும் இல்லை.

வற்றிய மதுராந்தகம் ஏரி

மழைவரத்துக் குறைவான ஸ்ரீபெரும்புதூரில் நிறைய தொழிற்சாலைகள் நீர் ஆதாரங்கள் கொள்ளை போகிறது.

வற்றாத ஏரியான மதுராந்தகம் ஏரிகூட நீர் இல்லாமல் வற்றிவிட்டது. காஞ்சிபுரம் நகரில் இதுவரை இப்படியொரு குடிநீர் பஞ்சம் வந்ததே கிடையாது என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

குறைந்த நிலத்தடி நீர்மட்டம்

தமிழகம் முழுவதும், நினைத்துப்பார்க்க முடியாத அளவில், அசுர வேகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் நிலத்தடிநீர் அதிகபட்சமாக 1000 அடி வரை இறங்கி உள்ளது. கரூரில் 750 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது.

மேற்கு மாவட்டங்களின் நிலை

மேற்கு மாவட்டங்களில் சிக்கல் மேற்கு மாவட்டங்களான, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

ஒரு குடம் ரூ.10

தெற்கு மாவட்டங்களான மதுரை, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குடிநீர் கேட்டு மக்கள் போராடி வருகின்றனர். ஒரு குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

காப்பாற்றிய வருணபகவான்

தலைமைச்செயலகத்தில் தண்ணீருக்காக விவாதக்கூட்டம் ஒருபுறம் நடந்தாலும் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழைக்காக வருணஜெபமும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி வருகிறது. பற்றாக்குறை காலத்தில் மட்டுமே ஆலோசனைகளை நடத்தாலும் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே சமூக ஆர்வர்களின் கோரிக்கையாகும்.

வீணாகும் தண்ணீர்

கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி., நீரை சேமிக்க, கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்கு, 1,921 டி.எம்.சி., நீர் தேவை. மக்கள் தொகை அதிகரிப்பால், இது, 2050ல், 2,038 டி.எம்.சி.,யாக உயரும். வழக்கமாக, 0.106 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
The water scarcity problem is at the peak in Tamilnadu. Government is also taking many steps to overcome the problem of the water scarcity in Tamilnadu. Lets discuss about the major criterion for water scarcity in this particular resource.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X