
சென்னை : நடிகர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதற்கான அறிவிப்பை வெளியிடும் டெட்லைன் நாளை தான். 2017ம் ஆண்டு முடிவில் ரஜினி என்ன சொல்லப் போகிறார், பிறக்கப் போகும் 2018 ரஜினி ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக இருக்குமா என்று காத்திருக்கின்றனர்.
"ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" அருணாச்சலம் படத்தில் ரஜினி சொல்லும் இந்த வசனம் தான் ரஜினிகாந்த் நீண்டகாலமாக தனது அரசியல் வருகைக்கும் பதிலாக வைத்திருக்கிறார். நம் கையில் என்ன இருக்கிறது ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை செய்வதே நம்முடைய வேலை, ஆண்டவன் என்னை நடிகனாக்கினார், அதன் பிறகு அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்வோம் என்று சொல்லி வருகிறார் ரஜினி.
முத்து படத்தில் ஒரு பாடலில் கட்சி தொடங்க வேண்டும் என்று வரும் வரிகளுக்கு ரஜினி நோ சொல்வது போல வரிகள் அமைக்கப்பட்டிருந்தன. கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று ரஜினி பதில் சொல்வது போல அந்த பாடல். 1995ல் வெளிவந்த அந்த படத்திலேயே ரஜினி தன்னுடைய அரசியல் வருகை குறித்து வெளிப்படையாக சொன்ன வார்த்தைகளாக இது பார்க்கப்பட்டது. இதே போன்று அந்தப் படத்தில் தும்மல், இருமல், விக்கல், கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பிறப்பு, இறப்பு, பணம்,பட்டம், பதவி இதெல்லாம் கேட்டு வராது, வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது போனாலும் யாராலும் தடுக்க முடியாது என்று வசனம் பேசி இருப்பார் ரஜினி.

இன்னொரு முகம் இருக்கு
இதனைத் தொடர்ந்து பாட்ஷாவில் 'நான் ஒரு தடவை சொன்னா', எனக்கு இன்னொரு முகம் இருக்கு அதை பார்த்தா தாங்க மாட்ட என்று ரஜினியின் படங்களில் அவ்வபோது அரசியல் குறித்த பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றுக் கொண்டு தான் வந்திருக்கின்றன. பாபா படத்தில் கவுண்டமணி ரஜினியை அரசியலுக்கு இழுத்து வம்பு பேசும்படியாக ஒரு டயலாக் இருக்க அண்ணா நம்பள விட்ருங்க நமக்கு இதெல்லாம் வேண்டாம் என்று அப்போதும் எஸ்கேப் ஆனார்.

உயிர் வாழ்ந்தால் இங்கே தான்
பாபா க்ளைமாக்ஸ் காட்சியில் இமயமலை செல்லும் ரஜினி பின்னர் திரண்டிருக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் மக்களுடனே இணைவார். உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிடமாட்டேன் என்று அப்போது பேக்ரவுண்டில் பாடல் பின்னி பெடலெடுக்கும்.

மாஸ் பஞ்ச் டயலாக்
சிவாஜி படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியிடம் இருந்து பணத்தை எடுத்து கல்லூரி தொடங்கி, ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் கதாபாத்திரத்தில் ரஜினி அசத்தியிருப்பார். "கண்ணா பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளா தான் வரும்" என்று ரஜினி அந்த படத்தில் பேசிய வசனம் மாஸ் காட்டியது.

போர் பிரகடனம் முழங்கிய ரஜினி
திரைப்பட பஞ்ச் டயலாக்குகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் மார்ச் மாதத்தில் பேசிய ரஜினி முதன்முறையாக மேடையில் பேசிய பேச்சில், போருக்குத் தயாராக இருங்கள் போர் வரும் போது சொல்கிறேன் என்று கூறி இருந்தார். இது அரசியலுக்கான கட்டியம் தான் என்று ரசிகர்கள் குஷியானார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தேசிய கட்சியுடன் கூட்டணி சேர்வார், தனிக்கட்சி தொடங்குவார் என்று பல பரபரப்புகள் கிளம்பின.

பச்சைத் தமிழன்டா
ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்ற பேச்சு எழுந்ததுமே, அனைவராலும் கிளப்பி விடப்பட்ட சர்ச்சை. தமிழன் அல்லாத ரஜினி எப்படி தலைமை ஏற்க முடியும் என்பதாக இருந்தது, இதற்கு தனது ஸ்டைலில் பஞ்ச் டயலாக் சொன்னார் ரஜினி நான் பச்சைத் தமிழன் என்று உரக்கச் சொன்னார். "என் வழி தனி வழி" என்று ரஜினி திரைத்துறையிலும், அரசியலிலும் தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார்.

வியூகம் முக்கியமம்
இந்நிலையில் 6 மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்த ரஜினி, டிசம்பர் 26ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசும் போது போர்னா தேர்தல் தானே. இப்போது என்ன தேர்தலா வந்துவிட்டது என்று கேட்டார். அதோடு, "போருக்குப் போனா ஜெயிக்கனும்" ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது அரசியல் வியூகமும் வேண்டும் என்றார்.

ரஜினியின் அந்த வார்த்தைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
திரைப்படத்தில் வசனங்கள், பாடல்கள் என்று ஏதாவது ஒரு வகையில் அவ்வபோது ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கு பதில் கொடுத்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் நாளை அவர் சொல்லப்போகும் அந்த பஞ்ச் என்ன என்பதை கேட்க ஆவலோடு நாளை பொழுது புலர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!