For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் ஜெயலலிதாவிற்காக காத்திருப்பதா? - ராமதாஸ் கண்டனம்

மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் ஜெயலலிதாவிற்காக திறக்கப்படாமல் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா விரைவில் முழு நலம் பெற்று பணிகளை கவனிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். ஆனால், ஜெயலலிதா எப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவருக்காக அனைத்து மக்களும் அவதிப்பட வேண்டும் என்பதை ஏற்கமுடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Ramadoss asks why TN govt not opened finished bridges in Chennai?

சென்னை மாநகரின் முக்கியப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற கதையாக அவை இன்னும் போக்குவரத்துக்கு திறந்து விடப்படவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று அவரது கைகளால் தான் திறக்கப்பட வேண்டும் என்பதற்காக இவை முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையையும், கிழக்குக் கடற்கரை சாலையையும் இணைக்கும் 100 அடி சாலையான ஜவகர்லால் நேரு சாலையில் வடபழனி சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையடுத்து அங்கு மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அப்பாலம் தடையாக இருக்கும் என்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை முடித்த பிறகு இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதன்பின் 2011 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டு, பல மாத தாமதத்திற்குப் பிறகு அக்டோபர் மாதத் தொடக்கத்தில் முடிக்கப்பட்டன. பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த பாலம் இன்னும் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவில்லை. இதனால் ஜவகர்லால் நேரு 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகரின் முக்கியமான சாலை சந்திப்புகளில் வடபழனி 100 அடி சாலை -ஆற்காடு சாலை சந்திப்பு மிக முக்கியமானது ஆகும். தினமும் ஜவகர்லால் நேரு சாலை வழியாக 1.85 லட்சம் வாகனங்களும், ஆற்காடு சாலை வழியாக 50 ஆயிரம் வாகனங்களும் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, அந்த இடத்தைக் கடப்பதற்கு 30 நிமிடம் வரை ஆகிறது. ரூ.56 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் திறக்கப்பட்டால் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இதனால் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் அதிக பலன்கள் கிடைக்கும்.

அதேபோல், தந்தை பெரியார் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அண்ணா வளைவு அருகில் இரு எல் வடிவ பாலங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் ஒரு பாலம் தேர்தலுக்கு முன் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக பெரியார் சாலையின் ஒரு புறத்தில் தொடங்கி அண்ணா வளைவு வழியாக அண்ணா நகர் செல்லும் சாலையில் அண்ணா சித்த மருத்துவமனை வளாகம் வரை எல் வடிவத்தில் ரூ.117 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் தயாராகி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை திறக்கப்படவில்லை. பாலங்கள் திறக்கப்படாததற்கான காரணங்கள் என்ன? என்பதையும் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவுடன் அவரது கைகளால் தான் இந்த மேம்பாலங்களை திறக்க வேண்டும் என்பதற்காகத் தான் இரு பாலங்களையும் தமிழக ஆட்சியாளர்கள் அடைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால், அது உடனடியாக மக்களின் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டு விடும். அதற்குப் பிறகு ஆட்சியாளர்களுக்கு வசதியான நாளில் திறப்பு விழாவை நடத்திக் கொள்வார்கள். ஆனால், இந்த பாலங்களை மக்கள் பயன்படுத்துவதற்குக் கூட அனுமதிக்கப் படவில்லை. இதனால் முக்கியமான இந்த இரு சாலைகளிலும் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

சென்னையில் கண்ணுக்குத் தெரிந்து இந்த இரு பாலங்கள் என்றால், கண்ணுக்குத் தெரியாமல் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளன. இதற்குக் காரணமும் ஜெயலலிதாவின் கைகளால் இத்திட்டங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது தான். ஜெயலலிதா விரைவில் முழு நலம் பெற்று பணிகளை கவனிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். ஆனால், ஜெயலலிதா எப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவருக்காக அனைத்து மக்களும் அவதிப்பட வேண்டும் என்பதை ஏற்கமுடியாது.

வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தண்டிக்கப் பட்ட ஜெயலலிதா முதல்மைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், ஜெயலலிதா ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களை திறக்க வேண்டும் என்பதில் தமிழக ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்ததனர். இதனால் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் நாசமடைந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடக்கி வைக்கப்படாததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். அதே போன்ற நிலையை இப்போதும் ஏற்படுத்த நினைப்பது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும்.

சென்னை வடபழனி மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம் உட்பட நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனே தொடங்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரு பாலங்களையும் பாட்டாளி மக்கள் கட்சியே திறந்து வைக்கும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.

English summary
PMK Founder Dr Ramadoss has askded why TN govt has not opened finished bridges in Chennai? and asked for an explanation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X