For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் - மதிமுக

Google Oneindia Tamil News

விருதுநகர்: மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்...

இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்தொழிலுக்குச் செல்லும் நமது தமிழக மீனவர்களை, சிங்கள் கடற்படை சுட்டுக் கொல்வதும், அவர்களை கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்வதும், மீனவர்களின் உடைமைகளை நாசமாக்குவதும், அன்றாடச் செய்திகள் ஆகிவிட்டன.

Retrieve Kachatheevu from Sl: MDMK

இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் வேட்டையாடப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை, தமிழக மீனவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்து உள்ளனர். இன்று கச்சத்தீவுக்கு அருகில் செல்லவும் முடியாத நிலைமையில் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துகிறது.

இலங்கையின் அத்துமீறல்களை தட்டிக்கேட்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என்று உபதேசிப்பதும், கச்சத்தீவு விவகாரம் முடிந்துவிட்டது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் டெல்லிக்கு வந்து கூறி இருப்பதை அப்படியே வழிமொழிவதும், இலங்கை இந்தியாவின் நட்புநாடு என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கூறுவதும் கடும்கண்டனத்துக்கு உரியதாகும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா-இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத்தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடற்பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் எந்த நாட்டுக்கும் கொடுக்கப்படவில்லை" என்று, உண்மைக்கு மாறான தமிழகத்திற்கு பச்சைத் துரோகமான கருத்தைத் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

கூடங்குளம் அணு உலையை அகற்றுக

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசு அமைத்து உள்ள அணு உலை, தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து இருக்கின்றது. அணு உலைகளால் ஏற்படும் கதிர் இயக்கம் மனித குலத்தை எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதற்கு, 1978 இல் மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவும், 1986 இல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ரஷ்யாவும் சான்றுகளாக உள்ளன.

2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் நாட்டின், புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், 80 சதவீத ஜப்பானியர்கள் அணு உலைக்கு எதிராக வாக்கு அளித்து இருக்கின்றனர்.
ஜெர்மனி, புதிய அணு உலைகள் திறக்கத் தடைவிதித்து உள்ளதுடன், பழைய அணு உலைகளையும் மூடிவருகிறது.

2034 ஆம் ஆண்டுக்குள், அனைத்து அணு உலைகளையும் மூட சுவிட்சர்லாந்து அரசு முடிவு எடுத்து உள்ளது. இன்று உலகில் உள்ள 205 நாடுகளில், 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்கு அணுமின் நிலையங்களைச் சார்ந்து உள்ளன. உலகில் கிடைக்கும் யுரேனியத்தில் 23 சதவீதம் ஆÞதிரேலியாவில் உள்ளது. ஆனால் அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை.

அணுமின் நிலையங்களின் செயல்பாட்டில் இருந்து உண்டாகும் அணுக்கழிவுகள் வெளியேற்ற முடியாதவை. அவற்றை அழிக்க ஆக்கபூர்வமான முறையில் எந்தத் திட்டமும் இதுவரை நடைமுறையில் இல்லாததால், அணு உலை இயங்கும் பல நாடுகள் தவித்துக் கொண்டு இருக்கின்றன.

அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் ரத்தப்புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் முதலிய கொடிய நோய்கள் பரவுவதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெளிவாக்குகின்றன.

எனவே, கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி இடிந்தகரையில் இரண்டு ஆண்டுகாலமாக மக்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு இடிந்தகரை மக்கள் நடத்திவரும் அணு உலைக்கு எதிரான போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

மாறி வரும் உலக மக்களின் கண்ணோட்டத்தை உணர்ந்து கொண்டு, மத்திய அரசு, கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்றும்
இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் மேலான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக நிபந்தனை இன்றித் திரும்ப பெற வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

உணவு பாதுகாப்புச் சட்டம்

இந்தியாவின் கூட்டு ஆட்சி முறைக்கு எதிராகவும், மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கவும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்து இருக்கின்றது. காங்கிரஸ் அரசின் திட்டங்களால் நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டு, மறுபுறம் 75 சதவீத மக்கள் உணவுக்கு வழியின்றி அல்லல்படுவதால் உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்று கூறி, உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைபடுத்துவது முரண்படாக இருக்கின்றது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோக முறையை அடியோடு சீர்குலைக்கவே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. மாநில அரசுகளின் கருத்துகளை அறிந்து, நாடாளுமன்றத்தில் தேவையான விவாதங்களை நடத்தி, முன்மொழியப்பட்ட திருத்தங்களையும் ஏற்று, முறையாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், அவசர அவசரமாக நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக, குறைபாடுகள் நிரம்பிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் மூலம் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு கண்டனம் தெரிவிக்கின்றது.

தமிழ்நாட்டுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் 36.78 இலட்சம் மெட்ரிக்டன் அரிசியை கிலோ ரூ.3 விலையிலேயே தொடர்ந்து வழங்க வேண்டும் என்று, மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

English summary
MDMK has urged the union govt of India to retrieve Kachatheevu from Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X