For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனித் தன்மையைக் காக்க போராடும் சிந்தி மொழி- அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர். மணி

சென்னை: இந்தியாவின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சிந்தி மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது.

ஹிந்தி மொழிக்கும் மூத்த மொழி, சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது சிந்தி மொழி. இந்திய ஆர்ய மொழி குடும்பத்தில் ஒன்றுதான் சிந்தி மொழி. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் அதிகாரபூர்வ மொழி சிந்தி மொழி. இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட, அரசியல் அமைப்பு சாசனத்தின் 8 வது ஷரத்தில் உள்ள (viii th Scehedule) 22 மொழிகளில் ஒன்றுதான் சிந்தி மொழி. ஆனாலும் பெயரளவில் தான் 8 வது அட்டவணையில் இருக்கறிதே தவிர, இந்த பட்டியலில் இருக்கும் மற்ற மொழிகளுக்கு வழங்கப் படும் எந்த சலுகைகளும், அங்கீகாரமும் தங்களுக்கு வழங்கப் படவில்லை என்பதுதான் சிந்தி மொழி பேசும் மக்களின் குற்றச்சாட்டாக, மனக் குமுறலாக இருக்கிறது.

Sindhi language struggling to survive

2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்று இந்தியாவில் சிந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 71,526 ஆக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடுதலாகவே இருக்கும் என்கிறார், செனைனையைச் சேர்ந்த ''சிந்தி டெலப்மெண்ட் சொசைட்டி'' என்ற அமைப்பின் தலைவர் டி.விஜயகுமார். ''எங்களது ஆய்வின்படி இந்தியா முழுவதிலும் சிந்தி மொழி பேசுபவர்கள் சற்றேறக்குறைய ஒரு கோடி பேர் இருப்பார்கள். நாங்கள் தேவநாகிரி எழுத்துருவை பயன்படுத்துகிறோம்''.

இவர்களது தற்போதய முக்கியமான கோரிக்கைகள் சிந்தி மொழி பேசுபவர்களை சிறுபான்மையினர் பட்டியிலில் சேர்க்க வேண்டும் மற்றும் சிந்தி மொழியை மேம்படுத்துவதற்காக ஒரு சிந்தி பல்கலைக் கழகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பவைதான். ''இந்திய அரசியல் அமைப்பு சாசனம் பிரிவு 30 மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்கென்று தனியாக கல்வி நிறுவனங்களை நிர்மாணித்துக் கொள்ள உரிமை கொடுத்திருக்கிறது.

தற்போதய தேவை சிந்தி மொழிக்கென்று, அதன் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக தனியாக ஒரு சிந்தி பல்கலைக் கழகத்தை ஏற்படுத்துவதுதான். நாடு முழுவதிலும், பராமரிக்க போதிய வசதிகள் செய்து கொடுக்கப் படாததால் பல சிந்தி பள்ளிக் கூடங்கள் மூடப் பட்டு விட்டன. இந்த நிலைமை இப்படியே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் சிந்தி மொழி உயிருடன் இருக்காது'' என்கிறார் விஜயகுமார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் பல்கலைக் கழகத்துக்காக போராடும் சிந்தி மொழி பேசும் மக்கள் மத்திய அரசிடம் இருந்து எத்தகைய நிதியுதவியையும் எதிர்ப்பார்க்க வில்லை என்பதுதான். ''நாங்கள் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியுவியையும் எதிர்பார்க்கவில்லை. பல்கலைக் கழகம் கட்ட இடம் வாங்குவது, கட்டிடங்கள் கட்டுவது, மாணவர் சேர்க்கை, தொடர் ஆராய்ச்சி பணிகள் போன்றவற்றுக்கான அத்தனை செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். ஆண்டவன் கிருபையால் நாங்கள் அதற்கான நிதியாதாரத்தை பெற்றிருக்கிறோம்.

நாங்கள் கேட்பதெல்லாம் அரசின் அனுமதியும், ஒத்துழைப்பும் தான். ஏனெனில் பல்கலைக் கழகத்தை நாங்கள் துவங்கினாலும், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் பணியாற்ற முடியுமென்பதால் தான் அனுமதி கேட்கிறோம். தொடர் மொழி ஆராய்ச்சி, பாரம்பரியமான சிந்தி மொழி இலக்கியங்களை பகுத்தாய்வது, பராமரிப்பது, மேலும் செழுமைபடுத்தவது போன்றவற்றுக்கு அரசின் ஒத்துழைப்பு என்பது எப்போதுமே தேவைப் படக் கூடிய ஒன்று. வளர்ந்த நாடுகளில் கூட இதுதான் நிலைமையாக உள்ளது. அதனால் தான் அரசின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் கேட்கிறோம். பணமும், நிதியாதாரங்களும் ஒரு பிரச்சனை அல்ல. அவை எங்களிடமே போதியளவில் இருக்கிறது'' என்று கூறுகிறார் இந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் கீர்த்தி.பி.

''பொருளாதார ரீதியில் வலிமையாகவே உள்ளோம். சிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட ஒருவர் கூட இன்று இந்தியாவில் பிச்சைக்காரர்களாக இல்லை. ஆகவே பொருளாதார மேம்பாடு அல்ல எங்களது பிரச்சனை. நாங்கள் விரும்புவது, போராடுவது எங்களுடைய தாய் மொழியின் தனி அடையாளங்கள் காக்கப் பட வேண்டும், அது அழியாமல் காப்பாற்றப் பட வேண்டும் என்பது தான்'' என்கிறார் கீர்த்தி.பி.

இன்று பல மாநிலங்களிலும் வசிக்கும் சிந்தி மொழி பேசுபவர்களின் வீட்டுக் குழந்தைகள் அந்தந்த பிராந்திய மொழிகளை சரளமாக பேச, எழுத கற்றுக் கொள்ளுகின்றனர். ஹிந்தி, மராட்டி, வங்காளி, உருது, குஜராத்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழி பேசும் மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. இதனால் தங்களது மூன்றாவது மொழியாக கூட சிந்தி மொழியை கற்காத நிலைமை உருவாகி விட்டதாக சிந்தி மொழி பேசுபவர்களிடம் கவலை மேலெழுந்து கொண்டிருக்கிறது.

''நான் நாடு பிரிவினையை சந்தித்த 1947 ம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தேன். இன்று மும்பையில் வசிக்கிறேன். என்னுடைய குழந்தைகள் சிந்தி படித்தார்கள். ஆனால் இன்று என் பேரக் குழந்தைகள் மும்பையில் மராட்டி, ஹிந்தி, ஆங்கிலம் தான் படிக்கிறார்கள். சிந்தி படிப்பதில் ஆர்வம் இல்லை. திரைப்படங்களும் இதர பொழுது போக்கு விஷயங்களும் கூட ஹிந்தி மற்றும் மராட்டியில் தான் என் பேரக் குழந்தைகளிடம் நிரம்பியிருக்கின்றன. மூன்றாவது மொழியாக கூட என் தாய் மொழி சிந்தி மொழி இல்லாதது அடுத்த சில ஆண்டுகளில் என் தாய் மொழியின் எதிர்காலம் என்னவாக இருக்கும், அது உயிருடன் இருக்குமா என்ற அச்சத்தைத் தான் என் போன்றோருக்கு உருவாக்கியிருக்கிறது'' என்று கூறுகிறார் மும்பையைச் சேர்ந்த, சிந்த மொழி பாடகியும், பாடலாசிரியருமான குஷிலால்வாணி.

சிந்தி மொழி பேசுபவர்கள் ஓரிடத்திலேயே குவிந்து கிடக்காததும், அவர்கள் பெரியளவில் வாக்கு வங்கியாக இல்லாததும் அரசியல் கட்சிகள் இவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி போன்றவர்கள் எல்லாம் சிந்தி மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்தான். ஆனால் 1998 - 2004 ம் ஆண்டு காலத்தில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்தியில் வலுவுடன் அரசு அதிகாரத்தில் இருந்த போதுகூட அத்வானியாலேயே சிந்தி மொழியின் எதிர்கால பாதுகாப்புக்கு என்று பெரியதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். இது இவர்களது ஆதங்கத்தை இன்னமும் அதிகப் படுத்தியுள்ளது.

''நாங்கள் இன்று தேசீயளவில், நிலமற்ற குடிமக்கள், ஆங்கிலத்தில் சொன்னால், nationally stateless orphans,'' என்கிறார் சிந்தி டெவலப்மெண்ட் சொசைட்டி யின் நிருவாகிகளில் ஒருவரான ஜேக்கி ஆர் கூப் சந்தானி. தங்களது தனித்தன்மை திட்டமிட்டு அழிக்கப்படு வதற்கு பல உதாரணங்களை கூற முடியும் என்கிறார் கூப்சந்தானி. ''ஆம். எங்களது தனித்தன்மை புறந்தள்ளப் படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வோர் மொழி பேசும் இனத்தவர்களும் இந்தியாவில் அவர்களது புத்தாண்டை கொண்டாடுவர். சிந்தி மொழி பேசுபவர்களின் புத்தாண்டின் பெயர் ''செட்டி சந்த்''. இது ஒவ்வோர் ஆண்டும் தெலுங்கு புத்தாண்டான உகாதி அன்றுதான் வரும். ஆனால் உகாதி க்கு வரும் வாழ்த்துக்கள் எங்களது புத்தாண்டுக்கு கிடைக்காது. எங்களது அடையாளங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகின்றன''.

இந்த விவகாரம் இந்தியாவில் நாடு விடுதலை அடைந்த பிறகு நிலவும் ''ஒரு மொழி ஏகாதிபத்தியத்தின்'' மற்றோர் அடையாளம் என்கின்றனர் மொழி உரிமைக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள். ''சிந்தி மொழி விவகாரம் ஒரு சுவாரஸ்யமான விவகாரம். சிந்தி மொழி மக்கள் பொருளாதார்ரீதியில் மிகவும் வலுவானவர்கள். அவர்கள் பொருளாதார ரீதியிலான, அரசியல் ரீதியிலான கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க வில்லை. மாறாக தங்களது மொழியை காப்பாற்றுவதற்கான சில நடவடிக்கைகளை, சலுகைகளை கூட அல்ல, மத்திய அரசிடன் கேட்கிறார்கள். நிதியைக் கேட்கவில்லை. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆகவே இந்த கோரிக்கையை வைப்பதற்கான அரசியல் சாசனத் தின் படியிலான எல்லா உரிமையும் சிந்தி மொழி மக்களுக்கு இருக்கிறது.

ஆனால் மத்திய அரசு அசைந்து கொடுக்க மறுக்கிறது. ஆகவே இது மத்திய அரசின் அப்பட்டமான சட்ட உரிமை மீறல்'' என்கிறார் மொழி உரிமைக்கான சென்னை பிரகடனத்தின் (Chennai Declaration of Language Rights) முக்கிய காரியகர்த்தாக்களில் ஒருவரும், ''கிளியர்'' (CLEAR - Campaign For Language Equality and Rights) என்ற அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், பத்திரிகையாளருமான ஆழி செந்தில்நாதன்.

இன்று இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளும் இந்த நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறுகிறார் ஆழி செந்தில்நாதன். ''கடந்த ஓராண்டாக எனக்கு கிடைத்த அனுபவம் ஹிந்தி மொழியின் ஆக்கிரமிப்பால அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது தென்னிந்திய மொழிகள் அல்ல. மாறாக வட இந்திய, கிழக்கிந்திய மொழிகள்தான். மராட்டி, வங்காளி, ராஜஸ்தானி, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸாமியா உள்ளிட்ட பல மொழி பேசும் இனத்தவர்களின் குழந்தைகள் இன்று ஹிந்தியை முதல் மொழியாக கற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் ஹிந்தி மூன்றாவது இடத்திற்குத் தான் போட்டி போடுகிறது. ஆனால் தமிழகத்துக்கு வெளியே ஹிந்தி மொழி முதல் இடத்திற்கே போட்டிப் போடுவதுதான் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது. இதனால் தான் இன்று நாடு முழவதிலுமே ஹிந்தியின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. மும்பையில் ஒரு மராட்டி குடும்பத்தில் உள்ள குழந்தை வீட்டிலேயே, தாய் மொழியை தவிர்த்து விட்டு ஹிந்தியில் அதிகமாக பேச துவங்கியதை சகிக்க முடியாமல் அக் குழந்தையின் தந்தை என்னிடம் மனங் குமுறியது வேதனையானது. காரணம் பள்ளிக் கல்வியிலேயே ஹிந்தி யின் ஆதிக்கம் அந்தளவுக்கு புரையோடிப் போய்க் கொண்டிருப்பதுதான்'' என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

இன்று அரசியல் அமைப்பு சாசனத்தின் எட்டாவது அட்டணையில் சேர்க்கப் படுவதற்காக சுமார் 40 மொழிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. ராஜஸ்தானி, போஜ்பூரி, துலு, உள்ளிட்ட மொழிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தை ஆளுவது பாஜக அரசு. முதலமைச்சர் வசுந்திரா ராஜே சிந்தியா. அம் மாநிலத்தில் பாஜக வும், காங்கிரஸூம் ஒன்று சேர்ந்து போராடியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும் கூட இதில் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. அத்வானி அசைக்க முடியாத சக்தியாக தேசீய அரசியிலில் கோலோச்சிய காலகட்டத்திலும் அவரது தாய் மொழியான சிந்திக்கு ஒரு பல்கலைக் கழகத்தை கொண்டு வர முடியவில்லை. லால் பஹதூர் ஷாஸ்த்திரி யின் தாய் மொழி போஜ்பூரி. இம் மொழியை 2 கோடி பேர் பேசுகிறார்கள். ஆனால் பிரதமர் ஷாஸ்திரியால் அவரது தாய் மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்க முடியவில்லை என்பதுதான் முக்கியமானது.

சிந்தி மொழி வளர்ச்சிக்கான தேசீய கவுன்சில் என்ற அமைப்பினை தொடங்கியதை தவிர மத்திய அரசு இதுவரையில் உருப்படியாக சிந்தி மொழி வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. நாடு முழுவதிலுமே இன்று தமிழ் உள்ளிட்ட ஒரிரு மொழிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து மாநில மொழிகளையும் அந்தந்த மாநிலங்களின் முதல் மொழி என்ற அந்தஸ்திலிருந்து ஹிந்தி வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது. வாக்கு வங்கி உள்ள மொழிகளே திண்டாடிக் கொண்டிருக்கும் போது சிந்தி மொழி இந்த பெருந்தாக்குதலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது, தன்னுடைய தனித்தன்மையை எப்படி காப்பாற்ற போகிறது என்று புரியவில்லை.

இன்று இந்தியாவில் ஏராளமான மொழிகள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. நேர்மையானதோர் தேசீய மொழிக் கொள்கை உருவாக்கப் பட்டு, அது நியாயமாக கடைபிடிக்கப் பட்டால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். ஆனால் இது நடக்குமா என்றால் அதற்கு பதில் சொல்லுவது மிகவும் கடினம்.

English summary
Sindhi language speaking people struggling to save their identification, says columnist R,Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X