For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவில் சேர்ந்தால் உங்கள் நன்மதிப்பை இழப்பீர்கள்!- ரஜினிக்கு கூடங்குளம் உதயகுமாரன் கடிதம்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எக்காலத்திலும் பாஜக தலை தூக்க முடியாது. அந்தக் கட்சிக்கு உதவ நினைத்து சேர்ந்தால் உங்கள் நன்மதிப்பையும், சூப்பர் ஸ்டார் புகழையும் இழப்பீர்கள் என்று சுப உதயகுமாரன் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுப.உதயகுமாரன் ட்விட்டரில் ரஜினிக்கு எழுதிய கடிதம்:

SP Udhayakumar's open letter to Rajini

வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

ஆனாலும் தமிழகத்தின் வாக்காளர் என்ற முறையில் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

தங்கள் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்து வேலை நிமித்தம் இங்கே தமிழகத்துக்கு வந்தீர்கள். கடினமாக உழைத்து ஓர் உயர்ந்த நிலையையும் அடைந்தீர்கள். தங்கள் நடிப்பை தமிழக இளைஞர்கள் விரும்பி, தங்களை ஆதரித்து மாபெரும் வெற்றிபெறச் செய்தனர். கேளிக்கையும், வேடிக்கையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த உறவை மாற்றியமைத்து தமிழ் மக்களை வழிநடத்துவதற்கும், வருங்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அனுமதியாக தாங்கள் பார்க்கக்கூடாது.

திரைப்படத் துறையினர் தமிழக அரசியலில் புகுந்து, அசிங்கத்தையும், அவலத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசியல் அறிந்த அனைவரும் இதனை ஆமோதிப்பார்கள். நடிகர் அரசியல்வாதிகளையும், அரசியல் நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டினாலொழிய தமிழினத்துக்கு விடிவு கிடையாது எனக்கொண்டு, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான தொடர்பை அறுத்தெறிய என் போன்ற பலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் பொதுவாழ்வுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகிறது.

தமிழ் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமே பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

தமிழகப் பொது வாழ்வில் இந்தத் துறையினரின் ஆதிக்கம் முடிவுக்கு வராதா என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களின் அரசியல் வருகை தமிழ் மக்களை பெரும் புயலாகத் தூக்கிச் செல்லாது என்றாலும், ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

பாரதிய ஜனசங்க காலத்திலிருந்தே முயன்றும், தமிழகத்தில் ஒரு கல்லைக்கூட அசைக்கமுடியாத ஒரு மதவாதக் கட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில அரசியல் மாற்றங்களை பயன்படுத்தி தங்கள் தோளில் ஏறி கரைசேர விரும்புகிறது. அதேபோல வாழ்நாள் முழுவதும் தாங்களுக்காக உழைத்து தங்கள் வாழ்க்கையை இழந்துநிற்கும் ரசிகர்கள், தங்களால் ஓர் அரசியல் முக்கியத்துவம் வராதா, அதிகாரம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தமக்கு ஓர் அரசியல் வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள தங்களை பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

இதனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலை தூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் "சூப்பர் ஸ்டார்" எனும் புகழையும் இழந்து விடுவீர்கள்.

தங்களின் இனப் பின்புலம் கேள்விக்குள்ளாக்கப்படும். இந்தியர் ஒருவரை மணந்து, இந்தியாவை தாயகமாக ஏற்று, இந்தி மொழியினை சரளமாகப் பேசி, இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகும், திருமதி சோனியா காந்தி இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, கன்னடத்துக்காரரான தாங்கள், தமிழகத்துக்கு தலைவராவதை தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இதனை இனவெறி என்று தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நடிகர் ராஜ்குமார் விவகாரம் முதல் எத்தனையோ பிரச்சினைகளில் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தாங்கள் தமிழ் மக்கள் இன்னல் களைய எதுவும் செய்யாத நிலை என பல விடயங்கள் மக்களால் பேசப்படும், அலசப்படும். இம்மாதிரியான பல கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் பேசிய நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தமிழர்களுக்கு இப்படி அறிவுரைத்தார்: "நீங்கப் பாக்குறீங்க. அக்ட் நல்லா செய்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது. அதேமாதிரி எங்களப் பார்த்தா அபிப்பிராயம், நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிடணும். அதனால நாங்கதான் பெரிசுண்ணும், காலம்பூரா எங்களையேவா நெனச்சுக்கிட்டு இருக்கிறது," இந்த அறிவுரை தங்கள் ரசிகர்களுக்கும், பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

சினிமாக்காரர்கள் தலைவராவது பற்றி, எம். ஆர். ராதா அவர்கள் இப்படிச் சொன்னார்: "உங்களுடைய பணத்தாலே முன்னேறியக் கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது." இதையும் மீறி ஒரு நடிகர் தலைவராக விரும்பினால், ராதா அவர்கள் அறிவுரைத்தார்: "ஜெயிலுக்குப் போய்ட்டு அப்புறம் அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்துறதா இருந்தா மொதல்ல ஜெயிலுங்கிற காலேஜில போய் படிக்கணும்."

தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்கவும், வாழ்வுரிமைகளை மீட்கவும், வருங்காலத்தைப் பேணவும் தமிழகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களோடு ஜெயிலுக்கு வாருங்கள். சேர்ந்து படிப்போம். பட்டறிவும், பாங்கான தகுதிகளும் பெற்ற பிறகு, அரசியலுக்கு வாருங்கள். தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன."

இவ்வாறு அந்தக் கடிதத்தில் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.

தவ்ஹீத் ஜமா அத்

இதேபோல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி தனது ட்விட்டர் பக்கத்தில் "ரஜினிகாந்த் பிஜேபியின் மாயவலையில் விழுந்துவிடக்கூடாது. அவர் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்."என்று கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
In a letter to Rajinikanth, SP Udhayakumaran, coordinator of People's Movement Against Nuclear Energy requested that he wouldn't join in BJP at any cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X