For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் பதவியில் ஜெயலலிதா இன்னுமா நீடிக்க வேண்டும்? கேட்கிறார் ஸ்டாலின்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் இதற்கு மேலும் எதற்கு ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமக்கு நாமே பயணத்தின் 7வது நாளான இன்று மதுரை மாநகரத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காலை 6 மணிக்கு நடைபயணத்தை மதுரை கே.கே.நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மேற்கொண்டார். அப்போது அவரை சூழ்ந்த மதுரை மாநகர மக்கள், மாநகராட்சியின் பல்வேறு அவலங்களை அவரிடம் எடுத்துறைத்தனர். நிச்சயம் உங்கள் குறைகளை போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Stalin

தொடர்ந்து பி.பி.குளம் பகுதியில், மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய பெண்கள் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் இந்த பகுதியில் பெண்கள் தவித்து வருவதாக இந்த அரசால் ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு இன்னல்களையும் எடுத்துரைத்தனர்.

மக்கள் சக்தி

பெண்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் நமக்கு நாமே, என்ற பயணமே உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்வதற்கு மட்டுமின்றி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வதற்காகவும்தான். நமக்குநாமே பயணத்தின்போது என்னோடு எந்த பொதுமக்களும் சந்திக்கக்கூடாது என்பதற்காக, ஆளுங்கட்சியினர் இலவசங்களை வழங்க தொடங்கியுள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் மீறி நீங்கள் வந்திருப்பது, எத்தனை யுக்தியை அவர்கள் மேற்கொண்டாலும் மக்கள் சக்திதான் வெல்லும் என்பதை நீங்கள் உணர்த்தியிருக்கிறீர்கள் என்றார்.

2016ல் ஆட்சி மாற்றம்

உங்கள் சக்தி 2016ல் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். பெண்கள் பாதுகாப்பிற்காக 13 அம்ச திட்டத்தை வகுத்து பாதுகாப்பேன் என்றெல்லாம் ஜெயலிதா சொன்னார். ஆனால் இப்போது பாதுகாப்பதற்கு பதிலாக, பெண்களை அச்சத்திலும், வேதனையிலும் இந்த பெண் முதல்வர் ஆழ்த்தியிருக்கிறார். நிச்சயம் உங்களுக்கான ஆட்சியை உருவாக்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என ஸ்டாலின் கூறினார். பின்பு அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலைஅணிவித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நடைபயணம்

செல்லூர் சந்திப்பு சாலையில் நடைபயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலினிடம் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் கோரிக்கை மனுக்களை நீண்ட வரிசையில் நின்று வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் உங்கள் கோரிகக்கைள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மாணவர்கள் கோரிக்கை

கல்லூரி மாணவர்களோடு ஸ்டாலின் உரையாடினார். அப்போது பேசிய மாணவர்கள், மதுரையை சுற்றியுள்ள கல்லூரிகளில், பொதுவாக அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும், சுகாதார வசதியும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். மாணவர் சமுதாயத்தை முன்னேற்ற, நீங்கள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

திமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், கடந்த திமுக ஆட்சியில் பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். அதெல்லாம் முடிவடையும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, வடவாஞ்சியில் 248 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது என்றார்.

மாபெரும் சக்தி

இளந்தகுளம் பகுதியில், 16 கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று, 75 சதவீதம் முடிவடைந்தும் விட்டது, வடபழஞ்சியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டிருந்தால், சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் சிறிதும் அக்கறை இல்லாத அதிமுக அரசு இருந்துகொண்டு, இளைஞர்களின் எண்ணங்களை எல்லாம் எரித்துக்கொண்டிருக்கிறது. மாணவர்கள் மாபெரும் சக்தி என்று வரும் தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும் என்று அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வர் ஜெயலலிதா

நேற்று மதுரை புறநகர் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், மேலூரில் பேசிய போது, அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் இதுவரைக்கும், 7,150-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாகவும், 19,696 கொள்ளைகள் நடந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக, பெண் டிஎஸ்பி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், இதற்கு மேலும் எதற்கு ஜெயலலிதா முதல்வர் பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டார். இவற்றை பற்றி எல்லாம் சட்டமன்றத்தில் பேசாமல், நம்முடைய நமக்கு நாமே பயணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே நமக்கு நாமே பயணத்தைக் கண்டு அஞ்சி பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகிறது என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

குறைகள் சரி செய்யப்படும்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என போகும் இடம் எங்கும் உறுதி அளித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அதேநேரத்தில் அரசியல் பற்றியும், ஆளும் அரசை குற்றம் சொல்லியும் பேசும் ஸ்டாலின் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்றும் ஒரே பாணியில் பேசுவதாகவும் மக்கள் மத்தியில் குறையாக உள்ளது.

English summary
MK Stalin, treasurer of the Dravida Munnetra Kazhagam (DMK) has continued his election yatra in Madurai on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X