For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை: அதுகுறித்த கோப்பிலும் கையெழுத்திடவில்லை; அன்புமணி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை என்றும் அதுகுறித்த எந்த கோப்பிலும் கையெழுத்திடவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த எஸ்.வி. எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியில் பயின்று வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவிகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

statement of PMK youth wing president Anbumani

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும், கல்லூரியின் நிறுவனரான வாசுகி தமது சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உதவியுடன் அரசு நிர்வாகத்தை சரி கட்டியும், சமூக விரோதிகள் மூலம் மாணவர்களை மிரட்டியும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அக்கல்லூரிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது நான் தான் அனுமதி அளித்ததாக சில வீணர்கள் கூறிய அர்த்தமற்ற உளறல்களின் அடிப்படையில் ஊடகங்கள் விஷமத்தனமாக செய்தி வெளியிட்டுள்ளன. ஊடக அறத்தை மறந்து அவதூறு புகார்களை கூறும் சிலரது சதிக்கு பாரம்பரியமிக்க ஊடகங்கள் துணை போவது வருத்தமும், வேதனையும் தருகிறது.

சர்சைக்குரிய கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான எழுப்பப்படும் ஐயங்களை தெளிவு படுத்துவது தான் இந்த அறிக்கையின் நோக்கம். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னர், அக்கல்லூரி மாநிலத்திற்கு தேவை என்ற சான்றிதழ் (Essentiality Certificate) கோரி தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் இணைப்பு நிலை (Affiliation) கோரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசின் சுகாதாரத்துறையும், மருத்துவப் பல்கலைக்கழகமும் தனித்தனியாக ஆய்வு நடத்தி அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அத்தியாவசியத் தேவை சான்றிதழும், இணைப்பு நிலையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கல்லூரி கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுவதால் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு தான் அத்தியாவசியத் தேவை சான்றிதழை வழங்கியிருக்க வேண்டும்.

மாநில அரசிடமிருந்து இத்தகைய இரு சான்றிதழ்களையும் பெற்ற பிறகு தான் மத்திய ஆயுஷ் துறையின் அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பித்தால் அத்துறையால் அமைக்கப்படும் குழுவினர் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தி அதுகுறித்த அறிக்கையை ஆயுஷ் துறையிடம் தாக்கல் செய்வார்கள். அந்த அறிக்கையை துறையில் உள்ள துணை செயலர் முதல் செயலாளர் நிலை வரை உள்ள 4 அல்லது 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுப்பார்கள்.

நான் மத்திய அமைச்சராக இருந்த போது, ஆயுஷ் துறை அப்போதைய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமதி. பனபாக லட்சுமி அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அத்துறை சம்பந்தப்பட்ட எந்த கோப்பும் எனது பார்வைக்கு வராது. மத்திய சுகாதாரத்துறை கேபினட் அமைச்சர் என்ற முறையில் ஆயுஷ் துறை குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவிப்பது மட்டும் தான் எனது பணி ஆகும்.

எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் வந்தது குறித்தோ, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்தோ எதுவும் எனக்கு தெரியாது. நானும் அனுமதி அளிக்கவில்லை. அக்கல்லூரிக்கு எந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது என்பதைக் கூட ஊடகங்கள் மூலம் தான் அறிந்துகொண்டேன். ஒருவேளை பனபாக லட்சுமி தான் அனுமதி அளித்ததாக வைத்துக் கொண்டாலும், அவரே நேரடியாக சென்று அனைத்துக் கல்லூரியையும் ஆய்வு செய்ய முடியாது. இது தொடர்பாக ஆய்வு செய்த குழுவினரும், அதிகாரிகளும் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் தான் இறுதி முடிவை எடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய கல்லூரிக்கு அனுமதியை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்த போது சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, அக்கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்து அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி ஆணையிட்டதாகவும் அறிகிறேன். இதையெல்லாம் அறியாமல், நிதானமின்றி நடந்து கொள்ளும் ஒரு தலைவர் வாய் போன போக்கில் உளறியிருக்கிறார். இறந்தவர் வீட்டில் நின்று கொண்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த நன்றிகளை தெரிவிப்பது, புகழ்பெற்ற மூத்த இசையமைப்பாளர் மறைந்த போது அவரது வீட்டில் நின்று அவருக்கு இசையமைக்கவே தெரியாது எனக் கூறுவது போன்ற உளறல்களுக்கு ஒப்பானது தான் அவர் கூறியுள்ள இந்த குற்றச்சாற்றும்.

அந்த தலைவரின் நெருங்கிய உறவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கில் நன்கொடை பிடுங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைத் தடுப்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை இல்லாமல் இவரைப் போன்றவர்கள் எழுப்பும் குற்றச்சாற்றுகள் உண்மையானவையா? என்று உறுதி செய்துகொண்டு அதன் பின் ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தான் ஊடகஅறமாக இருக்கும்.

மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்த எந்த கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை. இந்த விஷயத்தில் நடந்த உண்மை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

English summary
Anbumani has said that he has not issued permission to start the SVS college, where three female students suicuided
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X