For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறியியல் படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தகவல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination - JEE (Main)) பொறியியல் படிப்புக்கும் நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆபத்தானது

ஆபத்தானது

‘'மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதைப் போன்று பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வை விட மோசமான இந்நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை அடியோடு துடைத்தெறியும் ஆபத்து கொண்டதாகும்.

மத்திய அரசின் நோக்கம்

மத்திய அரசின் நோக்கம்

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம் உயர்கல்வியை முழுக்க தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. அதன் ஒருகட்டமாகத் தான் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த 2013 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மருத்துவ நுழைவுத் தேர்வு, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர மீதமுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக அறிமுகம் செய்து விட்ட மத்திய அரசு அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

பொறியியல் பொது நுழைவுத் தேர்வு

பொறியியல் பொது நுழைவுத் தேர்வு

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(NITs), இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination - JEE (Main)) பொறியியல் படிப்புக்கும் நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக சகஸ்ரபுதே கூறியுள்ள போதிலும், அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

முறையற்றது

முறையற்றது

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களை எப்படி பாதிக்குமோ, அதேபோல், முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வும் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களை பாதிக்கும். மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக முன்வைக்கப்படும் அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு என்பது முழுக்க முழுக்க மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுமே அந்த பாடத்திட்டத்தை படிப்பதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கென தனிப்பாடத் திட்டத்தை உருவாக்கி பின்பற்றுகின்றன. அவ்வாறு பல்வேறு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களை மத்தியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவது, நீர்நிலைகளில் நீந்தக்கூடிய மீன்களை தரையில் தூக்கி வீசி மான்களுடனான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கச் செய்வதற்கு ஒப்பானதாகும்.

தமிழக பாடத்திட்டம் - சிபிஎஸ்சி

தமிழக பாடத்திட்டம் - சிபிஎஸ்சி

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE -Main) மூலம் தான் நடைபெறுகிறது. இதில் சேரும் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். உதாரணமாக, கடந்த ஆண்டு ஐ.ஐ.டிக்களிலுள்ள 10,000 இடங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே. இது மொத்த இடங்களில் 0.09% மட்டுமே. அதேநேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை படித்த மாணவர்களில் 179 பேருக்கு ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சிபிஎஸ்இ., மாணவர்கள் கைப்பற்றும் நிலை

சிபிஎஸ்இ., மாணவர்கள் கைப்பற்றும் நிலை

பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தினாலும், தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தால் ஒற்றைச்சாளர முறையில் தான் நிரப்பப்படும். அப்போது முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE -Main) மதிப்பெண் தான் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பதால் தமிழகத்தில் உள்ள முன்னணி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களே முற்றிலுமாக கைப்பற்றும் நிலை ஏற்படும். மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தரமற்ற கல்லூரிகளில் மட்டுமே சேரும் நிலை உருவாகும்.

ரத்து செய்ய வேண்டும்

ரத்து செய்ய வேண்டும்

இதற்கெல்லாம் மேலாக கல்வி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். மருத்துவம் - பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விதிகளை மத்திய அரசு உருவாக்குவது மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிடும் செயலாகும். எனவே பொறியியல் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்து பொதுநுழைவுத் தேர்வை தடுக்க வேண்டும்''

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Pattali Makkal Katchi Founder Ramadoss said that central government have tried to bring Joint Entrance Examination - JEE for Engineering course and urged that all Tamilnadu political parties have to raise voice against it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X