மாநிலத்திற்கு தனிக்கொடி.. சித்தராமையாவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே செய்து காட்டிய கருணாநிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக மாநிலத்திற்கு என்று, சில தினங்கள் முன்பு தனிக்கொடி அறிமுகப்படுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.

காங்கிரஸ் என்ற தேசிய கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தின் முதல்வரான சித்தராமையா, மாநில சுயாட்சி தொடர்பாக எடுத்த இந்த முக்கிய முடிவு நாடு முழுக்க பேசுபொருளாகியுள்ளது. தனிக்கொடிக்கு பாஜக ஒப்புக்கொள்ளாது என்பதால், அதை வைத்து வரும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யாலாம் என்பதுதான் சித்தராமையாவின் நோக்கம் என்பது அவர் இக்கொடியை அறிமுகம் செய்த இக்காலகட்டத்தை வைத்து அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.

Tamil Nadu among the first to raise separate flag for the state demand

ஆனால், மாநில சுயாட்சியை அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக கொண்ட திமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி, தமிழகத்திற்கான கொடி இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு மாதிரியை 1970ல் கருணாநிதி வெளியிட்டார். அதுவும் டெல்லியில் இருந்தபடி. இந்த விஷயத்தில் தமிழகம்தான் முன்னோடி. இதுகுறித்த ஒரு பதிவை சூரிய மூர்த்தி என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதை பாருங்கள்.

கன்னட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கர்நாடக மாநிலத்திற்கான தனிக்கொடி குறித்து ஆய்வு செய்ய ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா என்கிற செய்தி தான் 2017 ஆகஸ்ட் 7 அன்று ஊடகங்களின் முக்கிய செய்தி.. மாநில சுயாட்சி குறித்து தேசிய கட்சியின் முதல்வர் ஒருவர் தீவிரமான நடவெடிக்கை எடுக்க துணிந்தது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. எதிர்பார்த்தது போலவே ஒன்பது பேர் குழு பிப்ரவரி 6 2018 அன்று முதல்வர் மூலம் அமைச்சரவைக்கு அறிக்கையை சமர்பித்தது, தாமதம் ஏதுமின்றி இரண்டே நாளில் 8ம் தேதி கர்நாடக மாநிலத்திற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார் சித்தராமைய்யா

அறிமுகப்படுத்தியதே மிகப்பெரிய சாதனை என்பது ஒருபுறமிருந்தாலும், மாநில அரசுக்கு தனிக்கொடியை அறிவிக்க சட்டபூர்வ உரிமை இல்லை என்பதால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே அந்த கொடி சட்டப்படி கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கொடியாகும், நாடாளுமன்றமும் குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கும்வரை அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது. கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் சித்தராமைய்யா பேசிய வார்த்தைகள் கவனிக்க தகுந்தவை.. இந்த கொடி குறித்த முடிவினை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுப்போம், கொடிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று ரத்தின சுருக்கமாய் அவர் சொல்லி நகர்ந்தாலும்.. மெட்ரோ நிலையங்களில் இந்தி எழுத்துக்களுக்கு தார்பூசியதில் தொடங்கி இந்தி எதிர்ப்பு குழு அமைத்தது வரை கன்னடிகர்களிடம் ஏற்பட்டுள்ள இன உணர்வை முன்வைத்து தேர்தலை மையப்படுத்தி பாஜகவிற்கு செக் வைத்துள்ளார் என்பதே அவர் கொடியை அறிமுகப்படுத்திய காலம் உணர்த்தும் செய்தி

கர்நாடகாவே தனிக்கொடி அறிவித்து விட்டது, மாநில சுயாட்சியின் வேர் நிலம் தமிழ்நாடு இதுகுறித்து சிந்திக்கவே இல்லையா என்று நினைக்கலாம் ஆனால் சற்றேறக்குறைய ஐந்து சதாப்தங்களுக்கு முன்னரே தமிழ்நாட்டிற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தி இந்திய ஒன்றியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார் கலைஞர், அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற கொஞ்ச நாளிலேயே அண்ணா கண்ட மாநில சுயாட்சிக்கு வடிவம் கொடுக்க ராஜமன்னார் தலைமையிலான குழு குறித்த அறிவிப்பை டெல்லியில் அமர்ந்துகொண்டு அறிவித்து டெல்லியை நடுங்கவைத்தவர் அல்லவா அவர்.. அவர் செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம்.

இந்திய அரசியலமைப்பு அவையில் (constitutional assembly) இந்திய ஒன்றியத்திற்கான தேசிய கொடி குறித்த விவாதத்திலேயே தனிக்கொடிகள் குறித்த கோரிக்கைகள் எழுந்ததுண்டு, ஜார்கண்ட் பழங்குடியினத்தை சேர்ந்த ஜெயபால் சிங் முண்டா என்பவர், பல்வேறு பழங்குடிகள் அவர்களின் கலாச்சார அடையாளமாக தங்களுக்கேயான பிரத்யேக கொடிகளை பயன்படுத்துகின்றனர் ஆகவே தேசிய கொடியோடு இணைத்து பழங்குடிகள் தங்களின் கொடிகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி வழங்க வகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். விவாத நிலையிலேயே அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, அதற்கு பின்னர் 1947 ஜூன் 22 அன்று இந்திய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு அவைக்கு தேசிய கொடியினை அறிமுகப்படுத்தினார் நேரு ஆக இந்திய ஒன்றியத்திற்கான ஏக கொடியாக மூவர்ண கொடி மாறியது

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூக தீர்வு எட்டப்பட்டு அரசியலமைப்பு சிறப்பு பிரிவு 370 காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியது. அதை தொடர்ந்து விவசாயிகளின் பெருமையை குறிக்கும் பொருட்டு கலப்பை படத்தோடு கூடிய தனிக்கொடிக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.. அன்று தொடங்கி இன்று வரை தனிக்கொடி உடைய ஒரே மாநிலம் காஷ்மீர் மட்டும் தான்.. எப்படி பார்த்தாலும் ஜெயபால் சிங் முண்டே கோரிக்கையும் சரி, காஷ்மீர் கொடியும் சரி இரண்டுமே சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்னான உருவாக்க காலத்திலும் நடந்து முடிந்துவிட்டன ஆனால் கலைஞர் தனிக்கொடி கேட்ட காலம் அப்படி இயல்பான காலமாக இருக்கவில்லை

சுதந்திரம் பெற்று கால்நூற்றாண்டு காலம் நெருங்கிக்கொடிருந்தது, மொழிவாரி மாநில பிரிவினைகள் மேற்கொள்ளப்பட்டு இந்திய ஒன்றியம் ஏறக்குறைய அதன் இன்றைய வடிவத்திற்கு வந்திருந்தது, அரசியல் ஆட்சி கட்சிகள் என்று எல்லாமே ஒரு நிலையான வலுவான இடத்தில் இருந்தன, அப்படிப்பட்ட 70களில் தான் மாநிலக்கொடி என்ற துணிச்சலான கோரிக்கையை வைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர்

அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போல பிராந்தியங்களுக்கு தனிக்கொடி வேண்டும், 25 பிராந்தியங்களை உள்ளடக்கிய ஸ்விட்சர்லாந்து எல்லா பிராந்தியங்களுக்கும் தனிக்கொடி வைத்திருக்கிறது, இத்தனைக்கும் அங்கே பிராந்தியங்களுக்கான சராசரி மக்கள் தொகையே 25000 வரை தான் என்று அவர் காரணங்களை அடுக்கி கொடி கேட்டபோது இந்திய ஒன்றியத்தின் பிற பிராந்தியங்கள் சற்று ஆடித்தான் போயின

1970 ஆகஸ்ட் 20 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, அமெரிக்கா போன்ற நாடுகளை சுட்டிக்காட்டி இதுகுறித்து மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அறிவித்தார்.. ஏக இந்தியா மீது பற்றுள்ள எல்லா தரப்பும் கொந்தளித்தது.. இன்றைய கார்நாடகத்தின் அன்றைய முதல்வர் (மைசூரு மாநிலம்) வீரேந்திர பாட்டில், மத்திய அரசு இந்த கோரிக்கையை உடனடியாக நேரிடையாக நிராகரிக்க வேண்டும் என்று முழங்கினார்.

ராஜஸ்தானை சேர்ந்த மோகன்லால் சுக்காடியா, ஒரிசாவின் ஆர்.என்.சிங் டியே ஆகியோர் இந்திய ஒற்றுமைக்கு பங்கம் விளைக்கும் நடவடிக்கை என்று எச்சரித்தனர், ஆந்திர எம்.பி தென்னட்டி விஸ்வநாதன் தேசிய கொடியின் ஒரு சிறுபகுதியில் மாநில அரசுகளின் சின்னங்களை அனுமதிக்கலாம் என்ற யோசனையை சொன்னார் இப்படி பெரும் எதிர்ப்பும், சின்ன சின்ன ஆதரவுகளும் (அதுவும் மாற்று யோசனைகளோடு) வந்துகொண்டிருந்த சூழலில் கலைஞரின் இந்த கோரிக்கையை முழுமையாக ஆதரித்தத்தோடு, இது இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் செயல் அல்ல என்று உரக்க சொன்னவர் பஞ்சாபின் முன்னால் முதல்வர் குருநாம் சிங். 1969ல் காங்கிரஸ் இன்டிகேட் சின்டிகேட் என்று பிரிந்த நிலையில் ஸ்தாபன காங்கிரஸும், இன்றைய பாஜகவின் அன்றைய வேரான ஜனசங்கமும் இதை மிகக்கடுமையாக எதிர்த்தன

எதிர்ப்புகள் தீவிரமடைந்த சூழலில் கொடி விவகாரம் தொடர்பாக 25 ஆகஸ்ட் 1970 அன்று டெல்லியில் இந்திராகாந்தியை சந்தித்தார் கலைஞர், மாநிலத்திற்கான தனிக்கொடிக்கு அனுமதி வழங்க கேட்டுக்கொண்டார், அந்த சந்திப்பின்போது இந்திய தேசிய கொடியும் காங்கிரஸ் கொடியும் ஒன்றாய் இருப்பதால் தனியாக ஒரு கொடியை வடிவமைக்க வேண்டும் என்று முன்பொருமுறை ராஜாஜி சொல்லியதை நினைவுபடுத்தி அந்த அம்மையாருக்கு அதிர்ச்சி கொடுக்கவும் அவர் தவறவில்லை பிறகு என்ன நடந்ததென தெரியவில்லை.. இரண்டு நாட்களுக்கு பிறகு டெல்லியில் 1970 ஆகஸ்ட் 27 அன்று செய்தியாளர்களை சந்தித்தவர் தமிழ்நாட்டிற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார், மூன்று மாதங்களில் முடிவு சொல்வதாய் சொன்ன இந்திராகாந்தி பின்னர் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொன்னபோதும் தொடர்ந்து அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருந்தார்

1974 ஆம் ஆண்டு மாநில முதல்வர்களுக்கான கொடியேற்றும் உரிமையை அவர் பெற்றுத்தர பின்னணியிலிருந்தது 71ல் அவர் வைத்த தனிக்கொடி கோரிக்கை என்பது மறுப்பதற்கில்லை.. 48 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு முயன்றதை இன்று கர்நாடகா முயல்கிறது. வெற்றி பெற வாழ்த்துவோம.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu considering the State was among the first to raise separate flag for the state demand nearly five decades ago.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற