தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்: தமிழக சட்டசபையில் அனல் பறக்கும்
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 21ம் தேதி தாக்கல் செய்தார். அதன் பின்னர் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக 3 நாட்கள் சட்டசபை நடைபெறவில்லை. பட்ஜெட் உரையை படித்து பார்க்க ஏதுவாக விடுமுறை விடப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பிற்பகல் 1.30 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியது. இந்த கூட்டத்தில் ஜூலை 25ம் தேதி மீண்டும் பேரவை கூடுகிறது. அன்று முதலில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன் பிறகு, திருத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது.
28ம் தேதி வரை விவாதம் நடக்கும். விவாதத்துக்கான பதிலுரையை நிதியமைச்சர் 29ம் தேதி அளிப்பார். அதன் பிறகு, துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கு கிறது. முதல்வர் ஜெயலலிதா நிர்வகிக்கும் காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செப்டம்பர் 1ம் தேதி நடக்கிறது. மானியக் கோரிக்கை விவாதங்கள் செப்டம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகின்றன. அன்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்யப்படும் சட்ட, சட்டத்திருத்த மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.

சட்டசபை கூட்டம்
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறும். இதுகுறித்து உறுப்பினர்கள் பேசுவார்கள். தொடர்ந்து நாளையும், நாளை மறுநாள், 28, 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.

எதிர்கட்சிகள் தயார்
பட்ஜெட் விவாதத்தின்போது பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை. கொலை, கொள்ளை அதிகரிப்பு, டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

அனல் பறக்கும்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது, கல்விக்கடன் வாங்கிய மாணவன் மீது தாக்குதல் சம்பவம் குறித்தும் பிரச்னை எழுப்ப திமுகவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

15 நாட்கள் விடுமுறை
இந்த கூட்டத்தொடருக்கான காலம் மொத்தம் 44 நாட்கள். இதில், பட்ஜெட் தாக்கலான நாளுடன் சேர்த்து 29 நாட்கள் அவை அலுவல் நாட்கள் ஆகும்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், 25ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமைகள், மற்றும் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என 15 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த நாட்களில் பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!