தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர ரஜினி தலைமை ஏற்க வேண்டும்! - தமிழருவி மணியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காந்திய மக்கள் இயக்கம் ரஜினியை ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்று தமிழருவி மணியன் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளார்.

திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க ரஜினிகாந்த் தலைமையில் வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

Tamilaruvi Manian says Rajini's leadership can bring changes in Tamil Nadu

"காந்திய மக்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஓர் ஆரோக்கியமான அரசியலை வளர்த்தெடுப்பதுதான் அடிப்படை நோக்கமாகும். மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற மக்கள் நலன் சார்ந்த இரண்டு இலக்குகளை முன்னிறுத்தியே இந்த மண்ணில் நம் இயக்கம் அரசியல் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் அடிமை ஊழியம் செய்வது இந்த இயக்கத்தின் நோக்கமில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக நேர்மையும் போர்க் குணமும் நிறைந்த வைகோ அவர்களை காந்திய மக்கள் இயக்கம் முதல்வர் நாற்காலிக்கு முன்னிறுத்தியது மறுக்க முடியாத உண்மை.

கடந்த 25 ஆண்டுகளாக, மக்கள் நலனை மையப்படுத்தி, தன் வாழ்வையே ஒரு போராட்டக் களமாக, வைகோ மாற்றிக்கொண்ட நிலையிலும், அவருக்கான ஆதரவு வட்டம் பெருகாமல் போனது வருத்தத்திற்குரியது.

விஜயகாந்த் அவர்களை எந்த நிலையிலும் காந்திய மக்கள் இயக்கம், முதல்வராக முன்னிறுத்தியதேயில்லை. அவரை முதல்வர் நாற்காலிக்கு முன்னிறுத்திய மக்கள் நலக் கூட்டணியையும் காந்திய மக்கள் இயக்கம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

ஆனால், ஊடகங்களிலும், சில அரசியல் மேடைகளிலும் காந்திய மக்கள் இயக்கம் ஒரு நாள் வைகோவை முதல்வராக்கி மறுநாள் விஜயகாந்தை முதல்வராக்கி, இன்று ரஜினிகாந்தை முதல்வராக்க முயற்சிப்பதாக எள்ளி நகையாடுவதில் எந்த அறிவு சார்ந்த உண்மையும் அறவேயில்லை.

நேற்று வைகோவை ஆதரித்தது குறித்து இந்த இயக்கம் வருந்தவுமில்லை; இன்று ரஜினிகாந்தை ஆதரிப்பதற்காக வெட்கப்படவுமில்லை. அரசியலை பிழைப்பாக்கி பணத்தை பல்வேறு வகைகளில் பெருக்கவோ, எப்படியாவது பதவி நாற்காலிகளில் அமர்ந்து அதிகாரத்தைச் சுவைக்கவோ இந்த இயக்கத்தில் ஒருவருக்கும் விருப்பமில்லை.

இதுபோன்ற மலினமான விருப்பங்களில் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் இழித்தும் பழித்தும் எங்களை ஏசுவதன் மூலம் பயனடைய முடியமென்று நம்பினால், அத்தவறான செயலில் அவர்கள் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளட்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக பொதுவாழ்வின் புனிதத்தையே பாழ்படுத்திவிட்ட இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு வலிமையான வாக்கு வங்கியை வளர்த்தெடுக்கக்கூடிய தலைமையை ரஜினிகாந்த் அவர்கள் தரமுடியும் என்ற ஒரே நம்பிக்கையின் அடிப்படையில் காந்திய மக்கள் இயக்கம் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது.

இனம், மொழி, சாதி, சமயம் என்று மக்களைப் பிரிக்கும் அரசியல் சக்திகளுக்கிடையில் அனைத்து மக்களையும் ஒன்றாகப் பாவிக்கும் பண்பு நலனை இந்த மண்ணில் தழைக்கச் செய்வதுதான் இந்த இயக்கத்திற்கான பணி என்று ஈடுபட்டிருக்கிறோம்.

என்னைத் தனிப்பட்ட முறையில் தரகர் என்று பழித்தாலும், வாங்கிய காசுக்கு விலை போனவர் என்று வர்ணித்தாலும், இன்னும் தரம் தாழ்ந்து மேடைதோறும் முழங்கினாலும் அவர்களிடம் எங்களுக்குள்ள அன்பும் நட்பும் என்றும் மாறாது.

தமிழருவி மணியனின் நேர்மைக்கும் தூய்மைக்கும் அவனுடைய இருதயமே சாட்சி. அதற்கு மேல் அவனைப் படைத்த இறைவனே சாட்சி"

இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilaruvi Manian has given explantion in a statement why he and his movement are supporting Rajinikanth. He believes under leadership of Rajinikanth, TamilNadu will be liberated from 50 years rule of Dravidian parties.
Please Wait while comments are loading...