தென்காசியில் அசரடித்த காக்கி சட்டைகள்.. கூட்டுப்பட்டா, தனிப் பட்டா.. அரசு ஊழியர்களுக்கு தேவையா?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: நம்முடைய தமிழகத்தில் பட்டா மாறுதலுக்கு மட்டுமல்ல, தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, அல்லது பட்டாவில் திருத்தம் என எந்த கோரிக்கையுடன் விண்ணப்பித்தாலும் சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு விடுகிறார்கள். 2 நாட்களுக்கு முன்புதான் கரூர் மாவட்டத்தில் சர்வேயர் ஒருவர் கைதாகி இருந்தார்.. இதோ இப்போது திருநெல்வேலியில் ஒரு விஏஓ கைதாகி உள்ளார்.. இவர்கள் இருவருமே தனிப்பட்டா கேட்டு வந்தவர்களிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். இது தொடர்பான நடவடிக்கையையும் போலீசார் கையிலெடுத்துள்ளனர்.

ஒரு பட்டாவில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக குறிப்பிடாமல், மொத்தமாக அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். இதற்கு கூட்டு பட்டா என்பார்கள்.. கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப் பட்டா (Individual Patta) பெற வேண்டும்..

Tenkasi Separate Patta Joint Patta

இந்த தனிப்பட்டா என்பது, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் பெயர், சர்வே நெம்பர் உட்பிரிவு எண் போன்றவை தனித்தனியாக எழுதப்பட்டிருக்கும்.. நிலத்தை பகிர்ந்து தனியாக பட்டா பெறுவதற்கு, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் வேண்டும். பிரிக்கப்பட வேண்டிய பட்டாவிற்கான நிலத்தின் அளவு தெளிவாக வரையறுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிலம் உரிமைச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆவணங்கள், சான்றிதழ்

இந்த தனிப் பட்டாவை பெறுவதற்கு, கையிலுள்ள கூட்டுப்பட்டா, முந்தைய பட்டா நகல், பரிசளிப்பு ஆவணம், விற்பனை சான்று, பகிர்வு உடன்படிக்கை, நில வரைபடம், சொத்து வரி செலுத்திய ரசீது, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, நிலத்தை அளப்பதற்கான கோரிக்கை மனு, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் இப்படி அனைத்து ஆவணங்கள் தேவைப்படும்.

இவ்வளவையும் சேகரித்து தயார் செய்து விண்ணப்பத்தால் சில அதிகாரிகள் கூலாக லஞ்சம் கேட்டுவிடுகிறார்கள்..

நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தன்னுடைய மனைவி, மகன் பெயரில் வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்குவதற்காக ஸ்ரீரங்கம் தாலுகா ஆபீசுக்கு சென்றாராம்.. நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க கோரி விண்ணப்பித்தால், அங்கிருந்த 34 வயது சர்வேயர் அருண், ரூ.24 ஆயிரம் லட்சம் கேட்டாராம். பிறகு பேரம் பேசி ரூ.9 ஆயிரத்துக்கு ஒப்புகொண்டாராம்.

சர்வேயர் - நில அளவை

இறுதியில் அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டு, சர்வேயர் அருண் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.. இந்த சம்பவ அதிர்ச்சி முடிவதற்குள் இப்போது தென்காசியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜா.. இவருக்கு 38 வயதாகிறது.. இவரது மாமனார் சண்முகவேலுக்கு சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரில் ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் சண்முகவேல் மற்றும் 4 பேரின் பெயர்களில் கூட்டு பட்டாவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த நிலம், அவரது மாமனாருக்கு மட்டும் பாத்தியப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

கூட்டுப்பட்டா, தனிப்பட்டா

இதன்காரணமாக, கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப்பட்டா கேட்டு, சண்முகவேல் மற்றும் தங்கராஜா மனைவி பலமுறை சங்கரன்கோவில் தாலுகா ஆபீசிலும், சங்கரன்கோவில் ஆர்டிஓ ஆபீசிலும் மனு தந்திருக்கிறார்கள்.. ஆனால், அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியும், ஏமாற்றமடைந்தார் மாமனார் சண்முகவேல்.. மேலும், அலைய முடியாத சூழலும் ஏற்பட்டது. எனவே, தனிப்பட்டா வாங்க தான் முயற்சி செய்வதாக மாமனார் சண்முகவேலிடம் தங்கராஜா சொல்லி உள்ளார்.

விஏஓ ராஜ்குமார்

அத்துடன், பெரியூர் விஏஓ ராஜ்குமார் என்பவரையும் கடந்த செப்.29ம் தேதி சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது விஏஓ, "நீங்கள் வழங்கியிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது, ஆன்லைனில் அப்ளை செய்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு தனிப்பட்டா வழங்க பரிந்துரை செய்வதற்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்த தங்கராஜா, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று சொல்லி உள்ளார்.. உடனே விஏஓ ராஜ்குமார், 10 நாட்களுக்குள் ரூ.15 ஆயிரத்தை தந்துவிட வேண்டும் என்று கறாராக சொல்லி உள்ளார்.. எனினும் லஞ்சம் தர விரும்பாத தங்கராஜா, இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

தென்காசி போலீஸ் அலர்ட்

உடனே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரையின்பேரில், பெரியூர் விஏஓ ராஜ்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை தங்கராஜா வழங்கியதுமே,
மறைந்திருந்த போலீசார் விஏஓவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அத்துடன் அவரிடம் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

அசரடித்த தென்காசி போலீஸ்

இதனிடையே, தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.. அதில், பொதுமக்களிடம் அரசாங்க ஊழியர்கள் லஞ்சமாக பணம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம்.. அந்த புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தென்காசி போலீசாரின் இந்த அறிவிப்பானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. தமிழக அரசு துறையில், வருவாய்த்துறையில்தான் அதிக லஞ்ச புகார்கள் பதிவாகி வருவதாக புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், காவல்துறையின் இந்த கடிவாளம், பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+