For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவள்ளூர்: இரு கிராம மக்களிடையே மோதலால் பதற்றம்- அதிரடிப்படை குவிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் அருகே இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே உள்ள அணைக்கட்டில் செண்பகாதேவி அம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழாவுக்கு கொசஸ்தலை ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள புன்னபாக்கம் கிராம மக்களும், தெற்கு பகுதியில் வசிக்கும் வெள்ளியூர் கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்போது புன்னபாக்கம் கிராம மக்களுக்கும், வெள்ளியூர் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புன்னப்பாக்கம் கிராமமக்கள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்நிலையில், புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குருசாமி (வயது 30) என்பவர் தனது வேனில் பூ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தாமரைபாக்கம் வழியாக கோயம்பேடு நோக்கி சென்றுள்ளார். அப்போது வெள்ளியூரை சேர்ந்த சுமார் 25 பேர் உருட்டுக்கட்டைகளுடன் தாமரைபாக்கம் வந்த குருசாமியின் வேனை வழி மறித்து அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக் என்பவரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு வேனையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசார், வெள்ளியூரைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். உடனே, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், உரிய விசாரணையை போலீசார் மேற்கொள்ளவேண்டும் என்று கூறி வெள்ளியூர் கிராம மக்கள் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அம்பேத்கார் சிலை அருகே திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனை அறிந்த புன்னப்பாக்கம் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாமரைபாக்கம் காலனி மக்கள், புன்னப்பாக்கம் கிராமமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் மோதல்

இதைத்தொடர்ந்து, அங்கு இரு பிரிவினரும் உருட்டுகட்டை, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

8 பேர் படுகாயம்

இந்த சம்பவத்தில் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஏட்டு முருகன் மற்றும் வேன் டிரைவர் குருசாமி, கார்த்திக், கஜேந்திரன், டில்லிபாபு, ஏழுமலை, வேலு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிரடிப்படை குவிப்பு

மேலும் மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தாமரைபாக்கம், வெள்ளியூர், பூச்சிஅத்திப்பேடு போன்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடி படை போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். வஜ்ரா வாகனமும் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Tension prevailed in Tamaraippakkam village in the district after clashes between two groups in Periayapalayam area, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X