For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் திரள வேண்டும்.. திருமாவளவன்

Google Oneindia Tamil News

Thirumavalavan calls secular parties to join against Modi
சென்னை: மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போதுதான் மத வெறி ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் காரணமானவர் அவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் அவரை அத்வானி போன்ற தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வற்புறுத்தல் காரணமாக பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதனை பா.ஜ.க.வின் உள்கட்சி விவகாரம் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. நரேந்திர மோடி சிறுபான்மை மக்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகத் திகழும் ஓர் அடையாளம் ஆவார். அவர் இந்நாட்டின் பிரதமராக வந்தால், என்ன ஆகுமோ என்று ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மை மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, பா.ஜ.க.வின் கனவைத் தகர்த்து இந்நாட்டில் சனநாயகத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இப்போது ஒரு வரலாற்றுக் கடமை உள்ளது. இந்த நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டிய பெரும் பணி அவர்கள் முன்னால் உள்ளது. ஆனால், பாஜகவையும் எதிர்ப்போம்; காங்கிரசையும் எதிர்ப்போம்' என்ற அவர்களின் நிலைப்பாட்டின் காரணமாக மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டிய கடமையை அவர்கள் செய்யாமல் உள்ளனர்.

காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவற்றின் மீது எமக்கும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. எனினும், மதவெறி ஆபத்து நிறைந்துள்ள இன்றைய சூழலில், இடதுசாரிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தியா முழுவதும் இருக்கும் மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முன்வர வேண்டுமென்று தோழமையோடு வேண்டுகிறேன்.

பா.ஜ.க.வை எதிர்க்கின்ற காரணத்தால் மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவார்கள் என காங்கிரஸ் எதிர்பார்க்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி தமது மதச்சார்பின்மை நிலைப்பாட் டை உறுதிப்படுத்த வேண்டும். சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மதவாத வன்முறைத் தடுப்பு மசோதாவை சட்டமாக்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதைப் போலவே, தலித் மக்களுக்கு அவர்கள் வாக்குறுதி அளித்தபடி தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் அறிமுகப்படுத்தப்படாமல் தடுக்கப்பட்ட பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தையும் நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைவதற்கு தமிழகத்தின் ஆதரவே காரணம். இன்று அந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி இழந்து நிற்கிறது. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமை தொடர்பாகவும், ஈழப் பிரச்சனை தொடர்பாகவும் தொடர்ந்து எதிர்மறையான அணுகுமுறையையே காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்து வருகிறது.

தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவை மீட்பதற்கும், காவிரி பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கும் காங்கிரஸ் அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் அறிவிக்க வேண்டும். இந்நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் காங்கிரஸ் கட்சி தமிழர் விரோதக் கட்சி அல்ல என்று நாம் நம்ப முடியும்.

மதவெறி அச்சுறுத்தல் இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளாவிட்டால் நாம் எதிர்காலத் தலைமுறைக்குப் பெரும் தீங்கு இழைத்தவர்களாகிவிடுவோம். இதனை உணர்ந்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
VCK leader Thirumavalavan has called all the secular parties to join against Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X