For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வரை இழிவுபடுத்திய விவகாரம்: ராஜபக்சே பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: திருமாவளவன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தியதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Thirumavalavan condemns Sri Lankan article criticising Jayalalithaa

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள இனவெறி அரசு தனது இராணுவத்துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிங்கள இனவெறியர்களின் இந்த நடவடிக்கையானது, தமிழக முதல்வரை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகும்.

அத்துடன், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியையும் அக்கட்டுரையின் மூலம் அவமதித்துள்ளது. இராஜபக்சே கும்பலின் இந்த அநாகரிகமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்கள இராணுவத்தினரின் சிறுபிள்ளைத்தனமான, முதிர்ச்சியில்லாத இந்நடவடிக்கையானது, தமிழ்நாட்டு மீனவர்களின் அவலம் குறித்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதங்களைக் கேலி செய்யும் வகையில் வெளிப்பட்டுள்ளது.

தமிழர்களையும் தமிழ்நாடு மற்றும் இந்திய ஆட்சியாளர்களையும் நீண்ட காலமாகவே மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் விமர்சித்து வருகின்றனர். ‘இந்திய நாடு பல்வேறு நாடுகளாக உடைந்து சிதறும்' என்றெல்லாம் கடந்த காலங்களில் சிங்கள இனவெறிக் கும்பல் தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது, அநாகரிகத்தின் உச்சத்தில் நின்று தமிழக முதல்வரை கேலி செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியவுடன், அதற்காக அதே இணையத் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிங்கள இனவெறியர்களின் பொறுப்பில்லாத, போக்கிரித்தனமான இத்தகைய அநாகரிக நடவடிக்கைகளை எவ்வாறு மன்னிக்க இயலும்?

இந்திய அரசு, சிங்கள இனவெறியர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், அவ்வரசுடனான அரசியல் பொருளாதார உறவுகளை உடனடியாகத் துண்டித்திட வேண்டும். ராஜபக்சே வெளிப்படையாக சர்வதேசச் சமூகத்தின் பார்வையில் தமது அறுவறுப்பான இச்செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
VCK leader Thol. Thirumavalavan demand an apology from Sri Lankan President Mahinda Rajapaksa for remarks against Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X