For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைக்கால பட்ஜெட் ஒரு வெத்து வேட்டு அறிக்கை: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட் உரை அதிமுக ஆட்சியின் 5 ஆண்டு கால இருண்ட வரலாற்றின் பக்கங்கள் போல் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும் தமிழக மக்களுக்கு கடுகளவேனும் ஆறுதல் அளிப்பதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

"ஐந்தாண்டுகளுக்கு முன்பு 5-2-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், அன்றைய நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் படித்த 2011-2012ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை குறித்து அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர், 6-2-2011 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கையாக அமைந்துள்ளது.

TN budget Dark side of ADMK government: Karunanidhi slams

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வில்லை என்பதும், சட்ட விரோதக் கும்பலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. மொத்தத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் எழுச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழகம், கவர்ச்சித் திட்டங்கள் மூலம் வறட்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த நிதி நிலை அறிக்கை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது" என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

அவர் கூறிய வாசகங்களே, இன்று (16-2-2016) பேரவையில் வைக்கப்பட்ட 2016-2017ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கைக்கு முழுதும் பொருத்தமானவை என்பது வெட்கக்கேடான உண்மை!

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுக்குக் காரணிகளான நிதிப் பற்றாக் குறையையும், தமிழ்நாடு அரசின் மொத்தக் கடனையும் முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு குறைத்திருக்கிறார் என்று முக்கியமான இந்தக் கட்டத்தில் பார்த்தால்; 2015-2016ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை ரூ. 31,829.19 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இன்று 16-2-2016 சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை ரூ 36,740.11 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-12ஆம் ஆண்டு இடைக்கால நிதி நிலை அறிக்கையில் 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை இருந்த போது, அதனைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா இது தான் கருணாநிதியின் ஐந்தாண்டு காலச் சாதனை என்று அறிக்கை விடுத்தார்.

தற்போது ஐந்தாண்டு காலத்தில் நிதிப்பற்றாக்குறையை இரண்டு மடங்காக உயர்த்தியிருப்பதற்குப் பெயர் தான் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால சாதனையா என்று அவர் பாணியிலேயே கேட்கலாம் அல்லவா?

31-3-2011 அன்று தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் 1,01,541 கோடி ரூபாய் என்பதை ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறி, இது தான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனை என்றாரே, இப்போது தமிழ்நாடு அரசின் மொத்தக் கடனை எவ்வாறு குறைத்திருக்கிறார் என்று தெரியுமா?

31-3-2017 அன்று நிலுவையில் உள்ள பொதுக் கடன் என்று இந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை அறிக்கையிலே பக்கம் 79-ல் தெரிவித்துள்ள தொகை 2,47,031 கோடி ரூபாய் என்றால் இந்தக் கடன் சுமை தான் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு காலச் சாதனையா?

தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து, இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஏதாவது அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்த்து போராட்டங்களில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினரின் கோரிக்கைக்கும் இந்த நிதி நிலை அறிக்கையிலே பதில் இல்லை.

அ.தி.மு.க. ஆட்சியின் இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையைப் புரட்டிப் பார்க்கும்போது, ஐந்தாண்டு கால இருண்ட வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதைப் போல இருக்கிறது. விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும் தமிழக மக்களுக்கு கடுகளவேனும் ஆறுதல் அளிப்பதாக இல்லை.

இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை பற்றி விமர்சனம் செய்த அவர்களுடைய தொலைக்காட்சியே முதலமைச்சருக்கு ஓ.பி.எஸ். புகழாரம் - தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிய ஜெயலலிதா - மக்கள் மனம் மகிழ வளர்ச்சியை ஏற்படுத்திய ஜெயலலிதா - இலங்கைப் பிரச்சினையில் உலகக் கவனத்தை ஈர்த்த ஜெயலலிதா என்று வர்ணித்ததைப் போல, பாராட்டு புராணமாகவும், பொய் - புனைவுகளின் தொகுப்பாகவும்தான் இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை உள்ளது" என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK chief M Karunanidh today flayed the Tamil Nadu budget, saying is dark side of 5 years admk government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X