For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தர்மபுரியில் 101 குழந்தைகள் சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக உள்ளதாக அமைச்சர் அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 101 குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாய் சேய் நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத்தான், நாளொன்றுக்கு 1800-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன.

TN health Minister on Dharmapuri infants death issue

உண்மை நிலை இவ்வாறிருக்க, ஏதோ தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், அரசு சுகாதார நிலையங்கள் சரியாக செயல்படவில்லை என்றும் தவறான அறிக்கைகளை சிலர் பத்திரிக்கைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில், 2006ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் 3353 சிசு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு வருடத்தில் 671 சிசு மரணங்கள் நிகழ்ந்தன. அதாவது, சராசரியாக மாதம் ஒன்றுக்கு 56 சிசு மரணங்கள் நிகழ்ந்தன. 2011ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 1834 சிசுக்கள் இறந்துள்ளன. அதாவது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 512 ஆகவும், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 42 ஆக குறைந்துள்ளன.

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், தர்மபுரி மாவட்டத்தில், 2006ல் 30 ஆக இருந்த சிசு மரண விகிதம், தற்போது 18.9 ஆக குறைந்துள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 186 மருத்துவர்கள், 243 செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் 30 செவிலியர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த பிரிவுக்கு பல்வேறு காரணங்களால் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை பொறுத்து தேவைக்கேற்ப இம்மருத்துவமனையில் 45 வார்மர்கள், 10 போட்டோ தெரபி மற்றும் 20 வென்டிலேட்டர்கள் வசதி உள்ளது. மேலும் 3 வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர ஊர்திகளும் அம்மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மையம், கடந்த 2012-13ம் ஆண்டில் சிறப்பான மையத்திற்கான விருதை பெற்று சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் தாய்சேய் நலத்தை தொலைநோக்கு பார்வையுடன் காக்கும் அம்மாவால் கூடுதலாக ரூ.12,000 என உயர்த்தி வழங்கப்படும் திட்டமான டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3½ ஆண்டுகளில் 55,171 பேறுகால தாய்மார்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை பொறுத்தவரை அங்கு முறையான பயிற்சியும் அனுபவமும் மிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றார்கள். இங்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எந்தவொரு தீவிர சிகிச்சைப்பிரிவிலும் அனுபவம் இல்லாத மருத்துவர்களோ, செவிலியர்களோ பணிபுரிகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நிலையில், சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அறிக்கை தருவது, அறிக்கை தருபவர்களின் அனுபவமின்மையை காட்டுகிறது. மருத்துவ துறை என்பது மகத்தான சேவை துறை ஆகும். இந்த சேவை குறித்து வெற்று அறிக்கைகள் மூலம் அரசியலாக்கி யாரும் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொடர்ந்து தீவிரக்கண்காணிப்பில் உள்ளனர். 15.11.2014 முதல் இன்றைய தேதி வரை இம்மையத்தில் 101 பச்சிளம் குழந்தைகள் முழுமையான மருத்துவ சிகிச்சைக்குப் பின் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளனர். சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள மருத்துவர்கள் குழுவும், மருத்துவக்கல்வி இயக்குநரும் தொடர்ந்து அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

பச்சிளம்குழந்தைகளை தாயுள்ளத்தோடு பராமரித்து பாதுகாக்கும் அம்மாவின் வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தாயின் பரிவோடு சேவையை தொடர்ந்து செயலாற்றி வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu health Minister Dr Vijayabaskar has commented on Dharmapuri infants death issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X