For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாட்டின் முன்னோடி தமிழக காவல்துறையே: ஜெ பெருமிதம்

Google Oneindia Tamil News

சென்னை: சிறந்த தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துவதில் நாட்டின் முன்னோடியாக தமிழக காவல்துறை எப்போதுமே திகழ்ந்து வருவதாக பாராட்டியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கடந்த 22ம் தேதி, சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 4-வது அகில இந்திய அதிரடிப்படையினர் (போலீஸ் கமாண்டோ) திறன் போட்டிகள் 2013 தொடங்கியது.

தமிழ்நாடு போலீசாரால் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில், தமிழ்நாடு, அசாம், மராட்டியம், ஒடிசா, நாகலாந்து, ஜார்கண்ட், டெல்லி உள்பட பல்வேறு மாநில கமாண்டோ படையினர் மற்றும் துணை ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் உள்பட 23 குழுக்கள் கலந்துகொண்டன.

இதன் நிறைவு விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில், போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசளித்தார். அதற்கு முன்னதாக முதல்வருக்கு ஒவ்வொரு அணியின் மேலாளர்கள் மற்றும் நடுவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை, சல்யூட் செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், சிறந்த தொழில்நுட்பங்களைப் பெறுவதில் தமிழக காவல்துறை முன்னோடியாகத் திகழ்வதாகப் பாராட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது :-

திறமையை மேம்படுத்தும் போட்டிகள்.....

அகில இந்திய கமாண்டோ போலீஸ் விளையாட்டு போட்டிகள் என்பது, ஆண்டாண்டு நடக்கும் போலீஸ் போட்டிகளோடு, சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றாகும். தீவிரவாதம், பயங்கரவாதம் எழுந்து, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அதை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு கமாண்டோ படை வீரரும் திறமை மிக்கவராக இருந்தாக வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான், அவர்களுக்கான போட்டிகளும், போலீஸ் விளையாட்டு போட்டிகளில் இடம் பிடித்துள்ளன.

பாராட்டு....

பல்வேறு மனம், உடல் திறன்களை இந்த போட்டிகள் வெளிக்கொணரும். எனவே இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் எனது பாராட்டுக்கு உரியவர்கள். அதோடு அவற்றில் பங்கேற்ற அனைத்து குழுக்களையும் பாராட்டுகிறேன். காடு, நகர்ப்புறங்களில் நடத்த வேண்டிய எதிர்த்தாக்குதலின் திறனை அளவிட்டுக்கொள்ளவும், மற்ற குழுக்களின் யுக்தியை கற்றுக்கொள்ளவும் இந்த போட்டிகள் உதவிகரமாக இருக்கும்.

வீரத்தைத் தீட்டுங்கள்....

ஒரு மரத்தை வெட்ட 6 மணி நேரம் தரப்பட்டால், அதில் கோடாரியை தீட்டுவதற்கு முதல் 4 மணி நேரத்தை நான் எடுத்துக்கொள்ளுவேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கருத்து கூறியுள்ளார். இதைத்தான் நானும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. கமாண்டோக்கள் என்ற கோடாரி நன்றாக தீட்டப்பட வேண்டும்.

முழு சுதந்திரம்...

தமிழக காவல்துறைக்கு அரசு பணிகளில் முழு சுதந்திரத்தை வழங்கி இருப்பதால், சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது எனக்கு பெருமை சேர்க்கிறது. தமிழக காவல்துறையினரின் மகத்தான தலைமை பண்பும், சிறந்த பயிற்சி முறையும், சமுதாயத்தை பாதுகாப்பதில் உந்துதலாக இருக்கின்றன.

சவால்கள்....

மகிழ்ச்சியான நேரங்களில் அல்ல, சவால்கள் நெருக்கடியான நேரங்களில் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்துத்தான் அவர் அளவிடப்படுகிறார் என்று மார்ட்டின் லூதர் கிங் கூறியுள்ளார். சவால்கள்தான் உங்களை மிக சிறந்த அதிகாரியாக உருவாக்கும்.

தமிழகம் உதாரணம்...

பொதுமக்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு மிகுந்த பொறுப்புடன் செயல்படுகிறது. சமீபத்தில் புத்தூரில் பக்ருதீனும் அவனது இரண்டு கூட்டாளிகளும், எந்த உயிரிழப்பும் ஏற்படாதவாறு கைது செய்யப்பட்ட நிகழ்வு இதற்கு உதாரணமாக உள்ளது.

தனிப்பட்ட வாழ்த்து....

இந்தியாவிலேயே, தமிழக கமாண்டோ படை மிக சிறந்தது என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு அந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட 260 தமிழக காவலர்களையும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன். இதற்காக 20 காவலர்களுக்கு துறை ரீதியான பதவி உயர்வு கொடுத்ததோடு, ஒரு லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தேன்.

பரிசுத்தொகை உயர்வு....

அகில இந்திய அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் தமிழக காவல்துறையினருக்கு பரிசுத்தொகையை முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என்று 10 மடங்கு உயர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில் முதலிடம் பெறும் தமிழக போலீஸ் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரமும், இரண்டாவது இடம் பெறும் ஒவ்வொரு அணியினருக்கும் ரூ.30 ஆயிரமும் பரிசளிக்கப்படுகிறது.

தியாகத்துடன் பணி...

தனிப்பட்ட தியாகம், கடின உழைப்பு ஆகியவற்றினால் ஆனதுதான் உங்கள் பணியின் தன்மை. சமுதாயத்தை பாதுகாக்கும் உங்கள் பணியில் நீங்கள் செய்யும் தீரச் செயல்களுக்காக பரிசுகள், சலுகைகள், நிதியுதவி, பதவி உயர்வு போன்றவற்றை வழங்குவது உங்களுக்கு உந்துதலை ஏற்படுத்தும்.

பாராட்டு....

சமுதாயத்தில் கலவரமான சூழ்நிலை நிலவும் போது கூட, ஒவ்வொரு காவலர் மற்றும் பெண் காவலரும் அமைதியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த தைரியத்துடன் பாடுபடும் உங்களின் தியாகத்துடன் கூடிய பணியை பாராட்டுகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்பரிசு...

விழாவில், அனைத்து வகையிலும் ஒட்டுமொத்த சிறந்த குழுவுக்கான முதல் பரிசை தமிழ்நாடு காவல்துறை அள்ளிச் சென்றது. இரண்டாம், மூன்றாம் பரிசுகளை முறையே மராட்டிய மாநில போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பெற்றனர்.

English summary
The Tamil nadu cheif minister Jayalalitha has praised police department that TN police is the only force in India to use latest technologies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X