For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவ.12ல் முழு அடைப்பு: மாணவர்களுக்கு வைகோ அழைப்பு!... ரயில் மறியலில் வைகோ பங்கேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற உள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மதுரையில் நடைபெறும் ரயில்மறியல் போராட்டத்தில் வைகோ பங்கேற்க உள்ளார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது அநீதி என்பதை எடுத்துரைக்கும் வகையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மாணவர்களுக்கத்தான் இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, அவர்களின் ரத்தம் கொட்டப்பட்ட பூமியில் கோலாகலமாக கொண்டாட்டம் நடத்தப் போகிறது மகிந்த ராஜபக்சேயின் சிங்கள அரசு. 53 காமன்வெல்த் நாடுகளின் அதிபர்கள் கூட்டம் நவம்பர் 15, கொழும்பில் தொடங்குகிறது.

Vaiko calls students to participate enmasse in Nov 12 traders bandh

அதற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம், காமன்வெல்த் இளைஞர் மய்யத்தையும், மக்கள் மய்யத்தையும் ராஜபக்சே தொடங்கி வைத்துள்ளார். பிரிவினைவாதிகளால் 30 ஆண்டுகள் அழிவையும், ரத்தக் களறியையும் தன்னுடைய நாடு சந்திக்க நேர்ந்தது என்று விடுதலைப்புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளார்.

லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, எண்ணற்ற இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்த சிங்கள அரசு, இன்று கொட்டம் அடிக்கிறது. இந்தக் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் செல்லாமல், யாரையாவது அனுப்பி வைத்து ஒரு கபட நாடகத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு நடத்தும் என்று தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.

காமன்வெல்த்தினுடைய செயலாளர் நாயகமாக தற்போது செயல்படும் கமலேஷ் சர்மா என்ற இந்தியரைக் கொண்டுதான் இந்தச் சதித் திட்டத்தை நடத்தியது. இந்தியாவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் கலந்துகொள்ளாவிட்டாலும்கூட, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் காமன்வெல்த் அமைப்புக்கு மகிந்த ராஜபக்சேதான் தலைவராக செயல்படுவார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை, அந்த உண்மைகளை உலகத்தின் கண்களுக்கு புலப்பட விடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும்.

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொழும்பில் அம்மாநாடு நடக்கக்கூடாது என்ற மானத் தமிழர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற வாய்ப்பு இல்லை. மாநாடு நடக்கத்தான் போகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியான்னன் என்பவரும், நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேன் லோகி என்பவரும் இலங்கைத் தீவின் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அழிவுகளைப் பார்வையிட்ட பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்திக்க அவர்களுக்கு சிங்கள அரசு அனுமதி மறுத்ததுடன், விசாரணையும் நடத்துகிறது.

உலகில் எந்த ஒரு இனத்துக்கும் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தால் அந்த இனத்தின் இளந்தலைமுறையினர் எரிமலையாக வெடித்திருப்பார்கள். பிரளயமாகச் சீறி இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் பித்தலாட்டத்தால், இளந்தலைமுறையினர் முழு உண்மை நிலையை அறியாத சூழலில் இருப்பது மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது. இளைஞர்களும், இளநங்கைகளும்தான் நீதிக்காக, உரிமைக்காக அச்சமின்றிப் போராடும் ஈட்டிமுனைகளாவார்கள்.

தமிழகத்தில் தன்மான உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை என்பதை உணர்த்தவும், இளந்தலைமுறையினரை, குறிப்பாக மாணவர்களை போராட்டக் களத்துக்கு அழைக்கத்தான், வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் உடலுக்கு நெருப்பு வைத்து உயிர்களை பலிகொடுத்தனர்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது அநீதி என்பதையும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்காதது மனிதகுலத்தின் மனசாட்சி தமிழர்களைப் பொறுத்தமட்டில் செத்துப்போய்விட்டது என்பதைத் தெரியப்படுத்தவும், தாய்த் தமிழகத்து மக்கள் தங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்காக கிளர்ச்சி செய்கிறார்கள் என்பதையும், தமிழ்ச் சாதி நாதியற்றுப்போய்விடவில்லை என்பதையும் உலகத்துக்கு உணர்த்தவும், இந்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தவும் நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மாணவர்களுக்கத்தான் இருக்கிறது.

மாணவச் செல்வங்களே! மார்ச் மாதம் நீங்கள் நடத்திய போராட்டத்தினால்தான் ஈழத் தமிழர் துன்பமும் துயரமும் உலகத்துக்குத் தெரிந்தது.

இந்தியாவில் பிற மாநிலங்களிலே வாழுகிற பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஈழத் தமிழர்கள் படுகொலையைத் தெரிவிப்பது மாணவர்களின் கையில்தான் உள்ளது.

மாணவக் கண்மணிகளைப் போராட்டத்துக்கு அழைக்கிறேன். அரசியல் எல்லைகளைக் கடந்து உடன் பிறவாத சகோதரனாக அழைக்கிறேன். முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் பெயரால் அழைக்கிறேன். நாளைய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். நானும் மதுரையில் நடைபெறும் ரயில் மறியலில் கலந்துகொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko has called the students to participate the November 12, traders bandh enmasse and make it a big success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X