For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதா... வைகோ கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்திய செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

1400 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சியைத் தலைநகரமாக கொண்டு ஆண்ட பல்லவப் பேரரசு சிற்பம் கட்டிடக்கலைக்கு மத்தவிலாசம் என்னும் நூலை வடித்தனர். வெட்டுதலி, கட்டுதலி, குடைதலி என மூன்றுவிதக் கலையைத் தோற்றுவித்தனர். இன்றைக்குத் தமிழ்நாட்டின் கட்டிடக் கலையை உலகத்திற்குப் பறைசாற்றும் விதத்தில் மாமல்லபுரம் திகழ்கின்றது. உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ (Unesco) அறிவித்து இருக்கின்றது.

Vaiko condemns tourist fee hike in Mamallapuram

இந்தக் கலைக் கருவூலத்தைக் கண்ணை இமை காப்பது போன்று உள்ளூர் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 1958 ஆம் ஆண்டு, இந்திய அரசு, புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறையை உருவாக்கியது. மாமல்லபுரம் உள்ளிட்ட பழமையான சிற்ப நகரங்களை பாதுகாக்கிறோம் எனக் கூறி, சுற்றுச்சுவர் எழுப்பி அதன் மேல் இரும்புக்கம்பிகளால் வேலி அமைத்தனர்.

1999 ஆம் ஆண்டு முதல், கலைச் சின்னங்களைப் பார்வையிடுவதற்கு, இந்தியர்களுக்கு ரூ 10/- என்றும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 10 அமெரிக்க டாலர் என்றும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இது, சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும் என்று, அப்போது மதிமுக சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்த மல்லை சத்யா என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று, பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, நுழைவுக்கட்டணமாக இந்தியர்களுக்கு ரூ 10/- என்றும், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு 5 அமெரிக்க டாலர் என்றும் குறைத்து அறிவிக்கச் செய்தேன்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு, மாமல்லபுரத்தில் குடியிருக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற விதத்தில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மக்கள் விரோதச் சட்டத்தை கொண்டு வந்தனர். இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, 18.08.2010 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டேன்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 108 வைணவ திவ்ய தேசங்களில் 63 ஆவதாக விளங்கும் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் கோவிலைக் கையகப்படுத்துவதற்காக, 20.05.2015 அன்று மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது. இது மக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டித்து, 30.05.2015 அன்றும் 06.08.2015 அன்றும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டேன்.

மாமல்லபுரத்தில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கி வீரியம் நிறைந்த பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுகழகம் முழுமையாகத் துணை நின்றதோடு அல்லாமல், மாமல்லபுரத்தில் எனது தலைமையில் 21.11.2012 அன்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அதன்பிறகு, மத்திய தொல்லியல்துறை ஸ்தலசயனப் பெருமாள் கோவிலைக் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட்டது. அதுமட்டும் அல்லாமல் 2010 ஆம் ஆண்டில் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் தளர்த்தியது.

இந்நிலையில், 01.04.2016 அன்று முதல் பார்வையாளர் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ 30/- என்றும், சார்க் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ரூ 500/- என்றும், ஏனைய ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த நபர் ஒன்றுக்கு ரூ 750/- என்றும் கட்டணம் நிர்ணயித்து அரசு ஆணை வெளியிட்டு வசூலிக்கத் தொடங்கி விட்டனர்.

அத்துடன், மாமல்லபுரம் சிற்பப் பகுதிகளில் திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் பகல் 10 மணி நேரத்திற்கு மட்டும் ரூ 1,00,000/- கட்டணமும், குறும்படம் எடுப்பதற்கு ரூ 50,000/- கட்டணம் நிர்ணயித்து இருக்கின்றார்கள். இது நமது கலையை உலகு அறியச் செய்யும் செயலா? அல்லது கலையை முடக்கும் செயலா?

கட்டண உயர்வு குறித்து, உள்ளூர் மக்களின் கருத்தையும், சுற்றுலா பயணிகளின் கருத்தையும் கேட்கவில்லை. தமிழக அரசும், காஞ்சி மாவட்ட நிர்வாகமும், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும் இது சம்மந்தமாக எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஏற்கனவே மாமல்லபுரத்திற்கு உள்ளே செல்ல வேண்டுமென்றால் 1. கிழக்கு கடற்கரை சாலை - சுங்கவரிக் கட்டணம். 2. மாமல்லபுரம் பேரூராட்சியின் வாகன வரிக் கட்டணம். 3. வாகனம் நிறுத்தக் கட்டணம். 4. சிற்பங்களைப் பார்வையிடக் கட்டணம் என்று சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பகல் கொள்ளை அடிப்பது போல, மத்திய அரசின் வசூல், மாநில அரசின் வசூல், பேரூராட்சியின் வசூல் என்று எல்லாத் துறைகளிலும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தொல்லியல்துறையின் பார்வையாளர் கட்டணத்தை மேலும் உயர்த்துவது முறையற்ற செயல், கண்டனத்துக்கு உரியது. இது மாமல்லபுர மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதாகும். பணம் இல்லையென்றால் மாமல்லபுரம் செல்ல முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள்.

சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கின்ற மாமல்லபுர மக்கள் இந்தக் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த அடாவடிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்திட வேண்டுமென மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன். தவறினால், மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமைக்குழு சார்பில் என்றுடைய தலைமையில், மல்லை சத்யா முன்னிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடைபெறும். மாமல்லபுரம் நலனில் அக்கறையுடைய அனைவரும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

English summary
MDMK general secretary Vaiko has condemned the tourist fee hike in Mamallapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X