ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதி தேவை: வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதி தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் நீராதாரமாகத் திகழும் முக்கிய ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டு ஆற்று வளம் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் ஆறுகள் அனைத்தும் மணல் மாஃபியாக்களின் பிடியில் சென்றுவிட்டது.

அதிகார வர்க்கத்தினர் ஆளும் கட்சியின் கூட்டணியோடு மணல் கொள்ளையை தங்கு தடையின்றி நடத்துவதால் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும்கூட, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மணல் கொள்ளை நடப்பதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

மக்கள் தன்னெழுச்சி போராட்டம்

மக்கள் தன்னெழுச்சி போராட்டம்

அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பும் மக்களுக்குப் பயன்படாமல், ஆளும் கட்சியினர் வாரிச் சுருட்டுவதற்குத்தான் வழிகோலியது என்பது மறுக்க முடியாத உண்மை. மணல் கொள்ளையை அனுமதித்தால் நிலத்தடி நீராதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டதால் கரூர், திருச்சி, கடலூர், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் திரண்டு வந்து அரசு மணல் குவாரிகளை முற்றுகையிட்டு, தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மணல் தேவை அதிகரிப்பு

மணல் தேவை அதிகரிப்பு

ஒரு சில இடங்களில் இயங்கும் அரசு மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் ரூ.525க்கு கிடைக்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் மணல் சென்னையில் 4 யூனிட் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்யபட்டு, கொள்ளை நடக்கிறது. அதோடன்றி, தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் 86 இலட்சத்து 40 ஆயிரம் கன அடி மணல் கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

பிற மாநிலங்களுக்கு கடத்தல்

பிற மாநிலங்களுக்கு கடத்தல்

கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மணல் எடுக்க தடை உள்ளதால், தமிழக ஆறுகளில் எடுக்கப்படும் மணல் அம்மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரம் லாரிகள் மணல் விற்பனை செய்வதாக கணக்குக் காட்டி விட்டு, 90 ஆயிரம் லாரிகளில் மணல் எடுக்கப்பட்டது. இதனால் தற்போது மணல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அரசுக்கு குறைவான வருவாய்

அரசுக்கு குறைவான வருவாய்

மணல் குவாரிகளால் அரசுக்கு ஒரு நாளைக்கு வெறும் 2.5 கோடி ரூபாய் வருவாய். ஆனால் மணல் கொள்ளையர்களுக்கு நாள்தோறும் ரூ.37 கோடி ரூபாய் வருவாய். மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் குரல்கள் எழுந்ததும், மணல் குவாரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் மணல்

தூத்துக்குடி துறைமுகத்தில் மணல்

இந்நிலையில்தான் ஒரு தனியார் நிறுவனம் மத்திய அரசிடம் உரிய அனுதி பெற்று, மலேசியாவிலிருந்து 53.334 மெட்ரிக் கடன் மணலை இறக்குமதி செய்திருக்கிறது. தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மணல் புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனம் அரசுக்குத் தேவையான வரித் தொகையையும் செலுத்தி இருக்கிறது.

தமிழக அரசு அனுமதி தேவை

தமிழக அரசு அனுமதி தேவை

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் நிறுவனம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசின் அனுமதி இல்லை என்று அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைகத்திற்கு வந்த மணல் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் தேங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் மணல் கொள்ளையால் ஆறுகள் முற்றிலும் சீரழிந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கியிருக்கும் மணல் விற்பனையை பரவலாக்குவதற்கு தேவையான விதிமுறைகளை வகுத்து, இறங்குமதி மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆற்று மணல் சுரண்டலைத் தடுத்து, கட்டுமானப் பணிகளுக்கான மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு வழி ஏற்படும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK General Secretary Vaiko has urged that the TamilNadu govt will allow the imported sand sales.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற