காவிரி தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை ஒரு தலைபட்சமாக உள்ளது - ஜி.கே. வாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய தொழில்நுட்பக் குழு தனது ஆய்வறிக்கையில் கர்நாடகத்தின் மாண்டியா பகுதி விவசாயிகளின் தற்கொலை குறித்து பெரிதுபடுத்தி உள்ளார்கள். ஆனால் தமிழக விவசாயிகளின் அவல நிலையையும், விவசாயிகள் உயிர் மாய்த்துக்கொண்டதை விவசாய சங்கங்கள் எடுத்துக்கூறியும் அதனை பதிவு செய்யவில்லை. எனவே இந்த அறி்ககை ஒரு தலைப்பட்சமாக உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் வழக்கு தொடர்பாக விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

vasan Allegation on Cauvery Technical Committee

தமிழக விவசாயிகளுக்கு இந்த 2000 கன அடி தண்ணீர் எந்த விதத்திலும் பயன் அளிக்காததோடு, சம்பா சாகுபடியையும் தொடர முடியாத நிலையே ஏற்படும். மேலும் இது குடிநீர் தேவைக்கும் போதுமானதல்ல. நேற்றைய தினம் அளிக்கப்பட்ட உத்தரவு ஆறுதலாக இருக்குமே தவிர நன்மை பயக்காது. எனவே உச்ச நீதிமன்றம் தமிழக டெல்டா பகுதியின் 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற நியாயமான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மத்திய தொழில்நுட்பக் குழு தனது ஆய்வறிக்கையில் கர்நாடகத்தின் மாண்டியா பகுதி விவசாயிகளின் தற்கொலை குறித்து பெரிதுபடுத்தி உள்ளார்கள். ஆனால் தமிழக விவசாயிகளின் அவல நிலையையும், விவசாயிகள் உயிர் மாய்த்துக்கொண்டதை விவசாய சங்கங்கள் எடுத்துக்கூறியும் அதனை பதிவு செய்யவில்லை. இது ஒரு தலைப்பட்சமாக உள்ளது.

மத்திய தொழில்நுட்பக் குழுவின் ஆய்வறிக்கையில் உண்மைத் தன்மை இருக்க வேண்டுமே தவிர அறிவுரைகள், ஆலோசனைகள் என்பது நியாயத்தின் அடிப்படையில் அமையாது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஜி.எஸ்.ஜா அறிக்கைக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 25-ம் தேதிக்குள் அதனை தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே 2000 கன அடி நீர் போதாது என்றும் கூடுதலாக, போதுமான கன அடி நீர் திறக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி, அதனை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத்தர வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இதனை தமிழக அரசு மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் வலியுறுத்த வேண்டும்.

காவிரி தொடர்பான தொழில் நுட்பக்குழுவின் அறிக்கைகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தற்போது டெல்டா பகுதி விவசாய நிலங்கள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தரிசாக விடப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் ஏக்கர் சம்பாவும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இதற்காக நஷ்ட ஈடு வழங்க மத்திய, மாநில அரசுகள் அரசு முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Maanila Congress leader G.K.vasan Allegation on Cauvery Technical Committee report
Please Wait while comments are loading...